For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் 'கொடநாடு அரசியல்': விஜயகாந்த் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

Vijaykanth
சென்னை: டெல்லியிலிருந்து ஒரு கட்சி அரசியலும், ஆட்சியும் செய்யும்போது கொடநாட்டிலிருந்து அரசியல் செய்யக் கூடாதா என்று தேமுதகி தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் லண்டன் பயணம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு கடிவாளமாக இருக்க வேண்டிய ஓர் எதிர்க்கட்சியின் தலைவி, இரண்டு மாதமாக கொட நாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பது சரியா? என்ற கேள்விக்கு விஜயகாந்த் அளித்துள்ள பதில் ..

ஸ்டாலின் எப்படி பாங்காக், லண்டன் என்று சொல்லிக் கொள்ளாமல் போனாரோ அது மாதிரி தான். அது என்னவென்று தெரிந்தால் தான் இதைப் பற்றியும் சொல்ல முடியும்.

டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு அமைச்சர் போகலாமா? எதற்குப் போனார் என்று அரசாங்கமே சொல்லாத போது எதற்கு அந்தக் கட்சித் தலைவி பற்றிப் பேசுகிறீர்கள்?

புரோட்டோகால் என்று ஒன்று இருக்கிறதே அதைத் தரவே இல்லை இந்த அரசு. கேட்டால் சொந்தக் காரணங்களுக்காகப் போனார் என்கிறார்கள்.

சொந்தக் காரணம் என்றால், அப்புறம் ஏன் டிப்ளமேட் பாஸ்போர்ட்டில் போகிறார்? போகக் கூடாது என்கிறார்கள். டெல்லியிலிருந்து ஒரு கட்சியை இந்தியா முழுக்க நடத்தும் போது, கொட நாட்டுலேர்ந்து நடத்தக் கூடாதா? என்று கேட்டுள்ளார் விஜயகாந்த்.

அதேபோல விலைவாசி உயர்வை முதல்வர் கருணாநிதி கண்டு கொள்ளாமல் இருப்பது மிகப் பெரிய தவறு என்றும் அவர் சாடியுள்ளார்.

விலைவாசி உயர்வைக் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருக்கிறாரே அது தான் பெரிய தவறு. தேர்தலில் ஜெயிக்கிறதை மட்டும் தான் பேசறார். மக்கள் அவதியைப் பற்றிப் பேசுவதே இல்லை. நான்கு விழாக்களுக்குப் போக வேண்டும், அங்கு போய் அதை நடணும். இங்கு போய் இதை நடணும். உடனே நதிகளை இணைக்கிறேன் என்று பேசுகிறார்.

டெல்லிக்குப் போகிறேன் என்கிறாரே எதற்கு? கம்யூனிஸ்ட்டு களுக்கும், காங்கிரசுக்கும் உடன்பாடு ஏற்படுத்தப் போகிறாரே தவிர, மக்கள் பிரச்சனைகளை பேசவா போகிறார்? உடனே இதைப் படித்துவிட்டு மக்கள் பிரச்சனைக்குத்தான் போகிறேன் என்று இரண்டாவது நாளே அறிக்கை தருவார்.

பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை இவர் கண்டுகொள்ளவே இல்லை. அப்புறம் விலையைக் குறைச்சதும் ரொம்பக் குறைவு. சாதாரண டீசல் கிடைக்கவே இல்லை. வேலூர் போறேன், வழியெல்லாம் நிற்கிறது லாரிகள் டீசல், பெட்ரோல் கிடைக்காமல் அவ்வளவு பேர் கஷ்டப்படுகிறார்களே என்கிற பொறுப்பு கூட முதல்வருக்கு இல்லை. அவருக்கு சுய நலம் தான் முக்கியம் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிகவில் முக்கியத்துவம் கொடுப்பது குறித்த கேள்விக்கு, என்னால் போக முடியாமல் போகிற போது அவர் போகிறார். அப்போது முக்கியத்துவம் அதிகமாகத்தான் இருக்கும். மனைவி வேண்டாம் என்று சொன்னாலும் கட்சிக்காரர்கள் விடுவதில்லை. பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு தரச் சொல்லிவிட்டு மனைவியை போகஸ் செய்வது தப்பு என்றால் எப்படி? என்று கூறியுள்ளார்.

கூட்டணி குறித்து குழப்பமா என்ற கேள்விக்கு, எந்தவித குழப்பமும் இல்லை... தெம்பாகத்தான் இருக்கிறேன். மாயாவதியோ, எடியூரப்பாவோ எப்படி ஜெயித்தார்கள்? கூட்டணி பலத்திலா? நாங்கள் என்ன சொல்கிறோமோ, தீர்மானம் நிறைவேற்றுகிறோமோ அதைத்தான் திமுக அரசு செயல்படுத்துகிறது.

எங்கள் தீர்மானங்களை இடம் மாற்றி தங்களுடையதாகப் போடுகிறார்கள். "நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம்' என்றால் தங்கம் தென்னரசு கிண்டலடிக்கிறார். அண்ணா சொன்னது தான் ஞாபகத்திற்கு வருது. கட்சி என்றால் அது ஆட்சியைப் பிடிக்கத்தான். பெட்டைக் கோழி என்றால் அது முட்டையிடத்தான் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

தேமுதிகவை அழிக்க சதி:

இதற்கிடையே விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிகவை அழிக்க கட்சியினர் மீது பொய் வழக்குகளை திமுக அரசு போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கை:

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப நிதி உதவி கேட்டு தே.மு.தி.க., சார்பில் 30ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியினரும் பொதுமக்களும் ஏராளமான எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். தி.மு.க., அரசால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை; பொறாமைத் தீயில் புழுங்குகின்றனர்.

தி.மு.க., அரசு, தங்களிடம் உள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து போலீசை முடுக்கிவிட்டு பொய் வழக்குகள் போட ஆரம்பித்துள்ளனர். நான் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த விழுப்புரம் மாவட்டச் செயலர் வெங்கடேசனை மிரட்டி பணியவைக்க, அவர் மீது இல்லாததும் பொல்லாததுமான பொய் வழக்குகளை போலீசார் ஜோடனை செய்து போட்டுள்ளனர். அவர் மீது கடந்த காலங்களில் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை தூசி தட்டி மீண்டும் எடுத்துள்ளனர்.

"அந்தப் பகுதியில் எத்தகைய சாராயக் கடத்தல், கஞ்சா வைத்திருத்தல், கள்ளக் கடத்தல் போன்ற வழக்குகள் வந்தாலும் அவற்றில் வெங்கடேசன் பெயரைச் சேர்க்க வேண்டும்' என போலீசுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அறிகிறேன். வளர்ந்துவரும் தே.மு.தி.க.வை ஒடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தி.மு.க., அரசு இட்டுக்கட்டி பொய் வழக்குகள் போடுவதை உடனே நிறுத்த வேண்டும்.

தமிழகத்தில் எத்தனையோ கொலைகள், கொள்ளைகள், கள்ளக் கடத்தல்கள் நடந்தும் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, திட்டமிட்டு வேண்டுமென்றே தே.மு.தி.க.,வினர் மீது பொய் வழக்குகள் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க., அரசு, தனது பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்தாவிட்டால், விழுப்புரத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த நேரிடும் என்று கூறியுள்ளார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X