For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிக்கு மனைவியாக நடித்த மாணவிக்கு வலை

By Staff
Google Oneindia Tamil News

Umaramanan and Amalan
சென்னை: தனக்கு சென்னையில் வாடகைக்கு வீடு பிடிப்பதற்காக ஒரு மாணவியை, தனது மனைவியாக நடிக்க வைத்து வீடு பிடித்ததாக சென்னையில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி அமலன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அமலன், உமா ரமணன் ஆகிய இரு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் அமலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அமலன் அளித்துள்ள வாக்குமூலம்:

நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை படித்துள்ளேன். விடுதலை புலிகள் நடத்தும் சுதந்திர போராட்டத்தில் நானும் உணர்வு பூர்வமாக பணியாற்றி வருகிறேன். கடல் புலிகள் பிரிவில் படை வீரனாக உள்ளேன். இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்து வருவதால் எங்களுக்கு ஏராளமான பொருட்கள் தேவைப்படுகின்றன.

வெளிநாட்டில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் பொருட்களை கொண்டு செல்கிறோம். இதற்காக விடுதலை புலிகளின் பல்வேறு பிரிவுகளில் தனித்தனிக் குழுக்கள் செயல்படுகின்றன.

ஆயுதம் வாங்க வந்தோம்:

நாங்கள் போர் படை பிரிவில் போருக்குத் தேவையான ஆயுத தளவாடங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை கடத்தும் பணிக்காக தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளோம்.

எங்களது பணியை முழுமையாக எங்களுக்கு தெரிவிக்க மாட்டார்கள். கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்துக்கு செல்லும்படியும் சென்னை கே.கே.நகரில் உள்ள அகதி முகாமில் தங்கும்படியும் உத்தரவு வந்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 17ம் தேதி கள்ளத் தோணியில் ராமேஸ்வரத்தில் என்னை கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து நான் சென்னை அகதி முகாமில் தங்கியிருந்தேன்.

கடந்த 17ம் தேதி உமாரமணன் சென்னை வந்து என்னை சந்தித்தார். எங்களுக்கு சில பணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியாக வீடு எடுத்துக் கொள்ளும்படியும் எங்களுக்கு உத்தரவாகி இருந்தது. அதற்கு தேவையான பணம் ஹவாலா மூலம் வரும் என்று கூறப்பட்டிருந்தது.

மனைவியாக நடித்த மாணவி:

இதையடுத்து சென்னையில் வீடு தேடினோம். ஆனால் எங்களுக்கு யாரும் வீடு தரவில்லை. இதையடுத்து அகதிகள் முகாமில் உள்ள இளம் பெண் ஒருவரை என்னுடைய மனைவியாக நடிக்க வைத்து, அந்த பெண் கல்லூரியில் படிப்பதாக பொய் சொல்லி திருமங்கலத்தில் வீடு வாடகைக்கு எடுத்தோம்.

திருமங்கலம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்த அந்த பெண்ணை பின்னர் அனுப்பி வைத்து விட்டோம். அப்போது லண்டனில் இருந்து போன் மூலம் தகவல் வந்தது. சில பொருட்களை ஒருவர் கொண்டு வந்து கொடுப்பார் அதை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறப்பட்டது. அதன்படி வந்த பொருளை பத்திரமாக வைத்திருந்தோம். அந்த பொருட்கள் மாதிரிக்காக கொடுக்கப்பட்டது.

வெடிபொருள் சோதனை:

அவற்றை பரிசோதனை செய்து அவை தரமானதா என்பது தெரிந்து கொண்ட பின்னர் பெரிய அளவில் ஆர்டர் கொடுத்து பொருட்களை வாங்கி தருவதாக சொன்னார்கள். குறிப்பாக அம்மோனியம் நைட்ரேட்டை சென்னையில் உள்ள ஆய்வுக் கூடத்தில் சோதனை நடத்தி அதன் தரத்தை பரிசோதிக்கப் போவதாகவும் சொன்னார்கள்.

செலவுக்காக ஹவாலா மூலம் ரூ.1 லட்சம் கொடுக்கப்பட்டது. வீட்டு அட்வான்ஸ் ரூ.20,000, எங்கள் செலவு போக ரூ.23,000 மீதி இருந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்துவிட்டனர்.

6 மாத காலம் சென்னையில் தங்கியிருக்க எங்களுக்கு உத்தரவாகியிருந்தது. பின்னர் இருவரும் இலங்கை செல்ல திட்டமிட்டிருந்தோம்.

உறுதி வாங்கிக் கொண்டு அனுப்பினர்:

நாங்கள் சுதந்திரத்திற்காக போராடி வருகிறோம். தமிழக மக்கள் எங்கள் சகோதரர்கள். நாங்கள் சென்னையில் தங்கி இருக்கும்போது இங்குள்ள சகோதர மக்களுக்கு எந்தவித தீங்கும் செய்யக் கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் எங்களை அனுப்பி வைத்தார்கள். எங்கள் நோக்கம் இங்கிருந்து பொருட்களை கொண்டு செல்வதுதான். வேறு எந்த தவறான நோக்கத்தோடும் நாங்கள் இங்கு வரவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து அமலனுக்கு மனைவியாக நடித்த மாணவி யார் என்பது குறித்த விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் அகதிகள் முகாம்களில் தீவிர ஆய்வு மற்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X