தமிழ் மக்கள் வெற்றி குவிப்பார்கள்-கருணாநிதி
சென்னை: தமிழ் சமுதாயத்தை உயர்த்தி நிறுத்தும் பணிகளை நிறைவேற்றுவதில் நொடிப் பொழுதையும் வீணாக்காமல் உழைத்து வருகிறேன் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
நாட்டின் 61வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து கருணாநிதி பேசியதாவது:
சுதந்திரத் திருநாளில் தேசியக் கொடி ஏற்றும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முதல் குரல் கொடுத்து, அந்த உரிமையை பெற்ற தந்தவன் என்ற உணர்வோடு இந்த கொத்தளத்தில் 12-வது முறையாக இன்று சுதந்திர தின நாளில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மகிழ்கிறேன்.
இதே கோட்டை கொத்தளத்து கொடி மரம் ஏறி ஆங்கிலேயர் கொடியை இறக்கி நமது நாட்டு தேசிய கொடியை பறக்க விட முயன்று கைதாகி இன்று கிண்டி தியாகிகள் மணி மண்டப முகப்பில் நமது ஆட்சியில் சிலையாக பிடிக்கப்பட்டிருக்கும் ஆர்யா என்கிற பாஷ்யம் என்ற வீரத்திருமகனை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
நமது நாட்டை இந்த கோட்டையிலே இருந்து ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களை விரட்டிட ஜெர்மனி நாட்டு கப்பல் படையில் சேர்ந்து அந் நாட்டு எம்டன் கப்பலில் சென்னை வந்து குண்டுகளை வீசிய தீரன் செண்பகராமன் சிலையை 17-7-2008 அன்று கிண்டி தியாகிகள் மணி மண்டபத்தில் திறந்து வைத்த நினைவோடு வெள்ளையரை எதிர்த்து போராடி தூக்கு கயிறை முத்தமிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன், தியாக வேங்கை சுந்தரலிங்கம், மருது பாண்டிய சகோதரர்கள், தீரன் சின்னமலை, புலித்தேவன், வேலு நாச்சியார், அழகு முத்துக்கோன்,
கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், கொடிகாத்த குமரன், விசுவநாததாஸ், வெள்ளையரை விரட்டிட சத்யா கிரகம் என்னும் புதிய அறப்போர் முறையை வகுத்தவராம் அண்ணல் காந்தியடிகள் அவர் புகழ்ந்த வீரத் தமிழ் மங்கை தில்லையாடி வள்ளியம்மை,
பகுத்தறிவுச் சிங்கம் பகத்சிங், வீரப் போர் புரிந்த நேதாஜி, தென்னக தியாகச்சுடர் முத்துராமலிங்க தேவர், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தியாக சீலர்களையும், தேசியகவி பாரதியார், நாமக்கல்லார் போன்ற எண்ணற்ற தியாக மாமணிகளையும், தமிழக மக்களின் சார்பில் இன்று நன்றியுடன் நினைத்து போற்றி வணங்குகிறேன்.
1947 ஆகஸ்டு 15 விடுதலை நாளை வெள்ளையருடன் கணக்கு தீர்த்த நாள் என கொண்டாடிய நாம் இப்போது ஒவ்வொரு ஆண்டும் நமது சாதனைகளை கணக்குப் பார்க்கும் நாளாக கொண்டாடுகிறோம் என்று குறிப்பிட்ட பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா தொடங்குவது இந்த ஆண்டில் தான்.
சமூக நீதியுடன் இணைந்து தொடரும் வளர்ச்சியை உறுதி செய்தல், மக்களின் வாழ்வதாரங்களை பாதுகாத்தல், கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாக தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த குறிக்கோளை ஒட்டியே கடந்த 2 ஆண்டுகளாக திமுக அரசு ஆக்கப்பூர்வ மான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 60 லட்சம் டன்னில் இருந்து 100 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 103 உழவர் சந்தைகளை புதுப்பிக்கவும், 50 உழவர் சந்தைகளை புதிதாக தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1.61 லட்சம் ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டுக்குப் பின் ரூ. 25,683 கோடி முதலீட்டில் 19 புதிய பெரிய தொழிற்சாலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 74,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சாப்ட்வேர் ஏற்றுமதி 2007-08ம் ஆண்டில் ரூ. 28,295 கோடியாக அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது.
அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக ஏறத்தாழ 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
6500 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. மேலும் 3,500 பேருந்துகள் விடப்படவுள்ளன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.1334 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படுகிறது. இதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க மீஞ்சூரிலும் நெம்மேலியிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எம்பிபிஎஸ், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்விக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
6 இடங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகளும், 5 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்படுகின்றன.
திருச்சி, கோவை, நெல்லையில் 3 புதிய அண்ணா பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டுள்ளன.
திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகமும், கோவையில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகமும், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் ஒன்றும் தொடங்க மத்திய அரசு இசைவளித்துள்ளது.
சென்னை, கோட்டூர்புரத்தில் ரூ.120 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த அரசு நூலகம் அமைக்கப்படுகிறது.
சென்னை மாநகரில் ரூ.11,124 கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படுகிறது.
இத்தகைய பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக என் உயிரனைய தமிழ் சமுதாயத்தை உயர்த்தி நிறுத்தியும் பணிகளை நிறைவேற்றுவதில் நொடிப் பொழுதையும் வீணாக்காமல் உழைத்து வருகிறேன்.
வளமாக வாழ்வார்கள் வெற்றி குவிப்பார்கள் என் தமிழ் மக்கள். வரலாறு படைத்திடும் என் தமிழகம் என்றும் நம்பிக்கையோடு தமிழக மக்களுக்கு என் இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications