முதல்வர் விஜய் மேஜையில் இயேசுநாதர் சொரூபம்.. மதசார்பற்றவராக இருங்க.. திமுக முன்னாள் எம்பி கடும் விமர்சனம்
சென்னை: மதசார்பற்ற அரசாக தனது அரசு இருக்கும் என்று உறுதியளித்துள்ள விஜய், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் தனது மேஜையில் மத அடையாளங்களை வைத்து இருப்பதா? என்று விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன. விஜய்யின் இந்த செயலில் எந்த தவறும் இல்லை என ஒரு தரப்பும், மற்றொரு தரப்பினர் விமர்சனமும் செய்து வரும் நிலையில், திமுக முன்னாள் எம்பி செந்தில் குமார், விஜய்யின் இந்த செயல்பாட்டை விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதில், விஜய் ஆப்பிள் லேப்டாப்பில் தனது விவரங்களை பதிவு செய்வது போன்ற வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவில் முதல்வர் விஜய்யின் டேபிள் அருகே இடது பக்கத்தில் ஏசுநாதரின் புனித சொரூபம் இடம் பெற்ற கிறிஸ்து சிலுவை ஒன்று இருந்தது.

மதச்சார்பற்றவராக இருங்கள் விஜய்
சிறிய அளவிலான இந்த சிலுவை அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த குறியீடுகளை வைப்பது சரியல்ல.. என்று ஒரு தரப்பினரும், முதல்வரின் தனிப்பட்ட நம்பிக்கையில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. மேஜையில் யாருக்கும் தெரியாத வண்ணம் சிறிய அளவில் வைத்து இருப்பதில் எந்த தவறும் இல்லை என்று மற்றொரு தரப்பும் பதிவிட்டு வந்தனர். திமுக முன்னாள் எம்பி செந்தில் குமாரும் இந்த விவகாரம் குறித்து விஜய் மீது விமர்சனங்களை முன்வைத்து இருந்தார்.
செந்தில் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அரசு அலுவலகங்களில் உள்ள கடவுள் படங்கள் மற்றும் சிலைகளை படிப்படியாகவும் ஆரவாரமின்றியும் அகற்ற வேண்டும் என்று துறைத் தலைவர்களுக்கு முதல்வர் அண்ணாதுரை 1968-இல் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் வழிபாடு செய்வதைத் தடை செய்யும் வகையில், 'தமிழ்நாடு அலுவலகக் கையேட்டை' திருத்தி 1993-இல் ஜெயலலிதா அரசாணையை வெளியிட்டார். மதச்சார்பற்றவராக இருங்கள் விஜய்" என்று பதிவிட்டு இருந்தார்.
திமுக மாதிரி இல்லை
செந்தில் குமாரின் இந்த கருத்துக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "மதசார்பின்மையை மேஜையில் தேடாதீர்கள். அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்று பாருங்கள். விஜய் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுகிறார். திமுக மாதிரி இல்லை' என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், முதல்வர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்.. தனது அலுவலகத்தில் மத அடையாளங்களை முன்னிலைப்படுத்தாமல் மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக விஜய் இருக்க வேண்டும் எனவும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இவ்வாறாக கடந்த இரு தினங்களாக முதல்வர் விஜய் வெளியிட்ட விடீயோவின் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதோடு புதிய விவாதத்திற்கும் வழிவகுத்துள்ளது.
கடவுள் நம்பிக்கை கொண்டவராக..
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி அலுவலகத்தில் சாமி புகைப்படங்களை வைத்து இருந்தாதாக கூறி விஜய்க்கு ஆதரவாக தவெகவினரும் பதிவுகளை போட்டு வருகிறார்கள். முதல்வர் விஜய் தனது அரசியல் பிரசாரத்தின் போதே மூன்று மத வழிபாட்டு தலங்களுக்கு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சிக்கு பிரசாரம் சென்ற போது, அங்குள்ள அம்மன் கோவில் மற்றும் மசூதி ஒன்றிற்கும், தேவாலையத்திற்கும் சென்று வழிபட்டார். தேர்தல் முடிந்து ரிசல்ட் வெளியாகும் முன்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் மும்பையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கும் விஜய் சென்று வழிபட்டார். மதசார்பற்ற அரசாக தனது அரசு இருக்கும் என்று விஜய் அறிவித்துள்ளார்.. எனினும், தன்னை கடவுள் மீது நம்பிக்கை கொண்டவாராகவே துவக்கத்தில் இருந்தே காட்டிக்கொள்கிறார்.















Click it and Unblock the Notifications