Palani Temple Land: 200 வருட வரலாறு! 25 ஆண்டு சட்டப் போராட்டம்! பழனி கோவில் நிலம் கடந்து வந்த பாதை!
சென்னை: பழனி கோவில் நிலம் இதுதான் இப்போது தமிழ்நாடு முழுவதும் பேசப்படும் பெரிய விவகாரமாக மாறி இருக்கிறது. இந்து மதத்தை பரப்பவும், மடம் அமைக்கவும் வழங்கப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலம் கோவிலுக்கு எப்படி வந்தது? இதுவரை கடந்து வந்த சட்டப் போராட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலமானது, கடந்த 1888 ம் ஆண்டில் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியகாரர் என்பவரால் தண்டபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளைப் பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டது.

இந்தத் தர்ம சாசன விதிகளின்படி, இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வில்லங்கப்படுத்தவோ உரிமை கிடையாது. இது முழுக்க முழுக்கப் பொது அறக்கட்டளை சொத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகரம். வார்டு எண்.3. ப்ளாக் எண். 25 நகரப்புல எண். 998 மற்றும் 999ல் (தற்போதைய பழனி நகர், வார்டு எண்.3, பிளாக் எண் 25 நகர நில அளவை எண். 2) உள்ள 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தினை ஆதியில் பாலசமுத்திரத்தினைச் சார்ந்த குப்புச்சாமி மணியகாரருக்கு பாத்தியப்பட்டிருந்தது.
அவர் ஒரு தண்டபாணி சுவாமி என்பவருக்கு ஆவண எண். 785 நாள். 26.04.1888ன் படி ஒரு தர்ம சாசனத்தின் மூலமாக மடம் கட்டவும், அதில் இந்து மத கோட்பாடுகளை பரப்பவும், அனுசரிக்கவும் கொடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அடிவாரம் பகுதியில் (வார்டு எண்.3, பிளாக் எண்.25, நகரப் புல எண்.998, 999, தற்போதைய நில அளவை எண்.2) 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள 'அருள்மிகு தண்டாபாணி சுவாமி மடம்' என்ற பெயரிலேயே வருவாய்த்துறை ஆவணங்களிலும், பட்டாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி (நூறு கோடி) ஆகும். இந்த இடம் பழனிக்கு வரும் பக்தர்களுக்காகக் கட்டணமில்லா வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மடத்தின் சொத்து தொடர்பாக ஏற்கனவே பல சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. 17.06.1999 அன்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (செ.மு.ந.க. எண்.42655/1999/அ2) பிறப்பித்த உத்தரவின்படி இந்த மடத்திற்குத் தக்கார் நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் (15.03.2002 தேதியிட்ட Writ Petition No.13196 of 1999) மற்றும் அதன் மேல்முறையீட்டு மனுவிலும் (18.4.2002 தேதியிட்ட W.A.No.791/2002) கோயிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றமும் (12.07.2002 தேதியிட்ட S.L.P (C) No.10028/2002) மற்றும் பழனி அசல் நீதிமன்றமும் (11.08.2025 தேதியிட்ட அசல் வழக்கு எண்.358/2018 - பழைய எண்.346/1999) இந்தத் தக்காருக்கான நியமனத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தன.
இதற்கிடையில், இந்தச் சொத்தை சிலர் அபகரிக்க முயல்வதை அறிந்த மடத்தின் தக்கார், "இந்தச் சொத்து தொடர்பாக எவ்விதப் பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது" என்று 15.10.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் பழனி 1 எண். நீர் இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு (கடித ந.க.எண்.13/அப்ப/2025) தெளிவான தடை அறிவிப்புக் கடிதங்களை அனுப்பியிருந்தார். மேலும், 25.12.2025 (ந.க.எண்.10715/2025/சி6) மற்றும் 02.07.2026 (ந.க.எண்.1854/2017/சி6) ஆகிய தேதிகளிலும் நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
ஆனால், இந்த நீதிமன்ற உத்தரவுகளையும், தக்கார் கொடுத்த கடிதங்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, ஒரு பெரும் நில மோசடி அரங்கேறியது. 30.06.2026 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்தத் திட்டத்தைப் பற்றித் தகவல் தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாகத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டு வழக்கு (W.A.(MD) S.R.No.53144/2026) நிலுவையில் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
கடந்த 06.07.2026 அன்று, பழனி பதிவு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராகப் பணிபுரிந்து வந்த ஜஸ்டின் மணிகண்டன் (அலைபேசி எண்: 9047310878) என்பவர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கூட்டுச்சதியில் ஈடுபட்டார். இந்தத் திருமட நிலங்களுக்கு எந்த வகையிலும் பாத்தியமில்லாத திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ சுவாமிகள், அண்ட தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் ஆகியவற்றின் நிர்வாகி என்று கூறிக்கொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் மூலம், உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கும் கிரையப் பத்திரம் (பத்திரம் எண்.1446/2026, நாள்: 06.07.2026) பதிவு செய்து கொடுத்து, ₹100 கோடி சொத்தை மோசடியாக மாற்றியுள்ளார்.
13.07.2026 (காலை 09.00 மணி): இந்த மோசடி குறித்து அறிந்த இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் (55 வயது, த/பெ. சண்முகம்) என்பவர் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அன்றே பழனி அடிவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் R.முரளி என்பவர் குற்ற எண்: 151/2026-ன் கீழ் BNS சட்டப் பிரிவுகள் 336(3), 340(2), 318(4), 49, 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.
14.07.2026 & 15.07.2026: வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் (14.07.2026 தேதியிட்ட Rc.No.1475759/Crime 3(1)/2026) மற்றும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் (15.07.2026 தேதியிட்ட C.No.C1(2)/338/E-14758048/2026) ஆகியோர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் 15.07.2026 அன்று (C.No.C1/14758032/282/2026) இதற்கான ஆணை பிறப்பித்தார்.
16.07.2026 (காலை 07.45 மணி): இந்த உத்தரவுகளின்படி, திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வே.சந்தானலெட்சுமி, பழனி அடிவாரம் காவல் நிலையத்திலிருந்து வழக் கோப்பைப் பெற்றுக்கொண்டார்.
16.07.2026 (காலை 11.00 மணி): கோப்புகளை ஆய்வு செய்த பின், சிபிசிஐடி பிரிவில் குற்ற எண். 02/2026-ன் கீழ் BNS பிரிவுகள் 336(3), 340(2), 318(4), 49, 61(2) ஆகியவற்றின் கீழ் முறைப்படி சிபிசிஐடி போலீசார் புதிய வழக்கைப் பதிவு செய்தனர்.
17.07.2026: திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் புகார் அளித்த முருகானந்தம், பழனி தாசில்தார் முன்னாள் தாசில்தார், முன்னாள் விஏஓ, ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர்.
18.07.2026: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். நிலத்தை பதிவு செய்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை வாங்கியதாக சொல்லப்படும் கோவையைச் சேர்ந்த வெள்ளை துரை, நிலத்தை பதிவு செய்ய பத்திரம் தயார் செய்து கொடுத்த ஒட்டன்சத்திரம் ஜெயபிரகாஷ், நெல்லையில் அறக்கட்டளையைச் சேர்ந்ததாக செல்லப்படும் மூவரது வீடுகளில் சிபிசிஐடி போலீஸ் சார் ஆய்வு செய்தனர்.
இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக (I.O.) சிபிசிஐடி உதவி காவல் கண்காணிப்பாளர் (Assistant Commissioner of Police) அஜய் தங்கம் (AjayThangam M.V) நியமிக்கப்பட்டு, அவரிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கள் உரிய நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு, புலன் விசாரணை தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications