2002 வாக்குச்சாவடி எங்கே? பெங்களூர் SIR பணிகளில் பெரிய குழப்பம்.. பரிதவிக்கும் பொதுமக்கள்
பெங்களூர்: கர்நாடகாவில் இப்போது எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே பெங்களூரில் பல பகுதிகளில் 2002ஆம் ஆண்டில் இருந்த பல வாக்குச்சாவடிகள் முழுமையாகவே காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பலரும் எஸ்ஐஆர் படிவங்களை நிரப்புவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். என்ன செய்வது என்றே புரியாமல் வாக்காளர்கள் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
நாடு முழுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் பீகாரில் இந்த எஸ்ஐஆர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது கர்நாடகா மாநிலத்திலும் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகிறது.

கர்நாடகா எஸ்ஐஆர்
அங்கு தான் இப்போது வாக்காளர்கள் பயங்கர குழப்பத்தில் இருக்கிறார்கள். அதாவது பெங்களூரின் மகாதேவபுரா தொகுதியில் உள்ள காந்திபுரா, விஜயநகர், வினாயக நகர், அம்பேத்கர் நகர், பிரசாந்த் லேஅவுட், வைட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் தாங்கள் பல ஆண்டுகளாக வாக்களித்து வந்த வாக்குச்சாவடிகள் 2002 பட்டியலில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வைட்ஃபீல்டு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜப்பா கூறுகையில், "எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக இங்கு வசித்து வருகிறது. நாங்கள் பல ஆண்டுகளாகவே இம்மடிஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தான் வாக்களித்து வருகிறோம். ஆனால் தற்போது 2002 வாக்காளர் பட்டியலில் அந்த வாக்குச்சாவடியையே கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.
சமூக ஆர்வலர்
இது தொடர்பாக சமூக ஆர்வலர் மணி நிசர்கா கூறுகையில், "மகாதேவபுரா தொகுதியில் மட்டும் சுமார் 50 வாக்குச்சாவடிகள் 2002 லிஸ்டில் இல்லை. அருகிலுள்ள அனேகல் மற்றும் ஹோஸ்கோட்டே தொகுதிகளின் லிஸ்டிலும் கூட நாங்கள் பார்த்தோம். ஆனால், அந்த வாக்குச்சாவடிகளை எங்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை" என்றார். இது கர்நாடகாவில் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
அதேநேரம் இதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேறு விளக்கம் அளித்துள்ளனர். அதாவது கர்நாடகாவில் கடந்த 2008ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. அப்போது முன்பு இருந்த வர்த்தூர் சட்டசபை தொகுதி கலைக்கப்பட்டு, அதன் பகுதிகள் மகாதேவபுரா, சி.வி. ராமன் நகர் மற்றும் அனேகல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு பல வாக்குச்சாவடிகள் இணைப்பு மற்றும் நீக்கம் செய்யப்பட்டன. இதனால் பழைய டேட்டாவை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
தேர்தல் அதிகாரி விளக்கம்
இது தொடர்பான புகார்கள் தங்களுக்கு வந்துள்ளதாகவும் இதை விசாரிப்போம் என்றும் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அன்பு குமார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "2002ல் கர்நாடகாவில் சுமார் 34,000 வாக்குச்சாவடிகள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது அதன் எண்ணிக்கை 59,000ஆக உயர்ந்துள்ளது. உண்மையாகவே சில வாக்குச்சாவடிகள் மிஸ் ஆகியிருந்தால்.. சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்.
2002 பட்டியலில் பெயரை கண்டுபிடிக்க முடியாத வாக்காளர்கள், தற்போதைய விவரங்களுடன் எஸ்ஐஆர் படிவத்தை சமர்ப்பிக்கலாம். தேர்தல் ஆணையம் கேட்கும்போது மட்டும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை வழங்கினால் போதும். SIR படிவம் கிடைக்காதவர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு Form-6 மூலமும் கூட விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
கடும் பாதிப்பு
இருப்பினும், மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எஸ்ஐஆர் மற்றும் பிஎல்ஓ செயலியில் தங்கள் தகவல்கள் காட்டவில்லை என்றும் இதனால் வர்த்தூர் தொகுதியின் மட்டும் சுமார் 8,878 வாக்காளர்கள் இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனடியாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும் என்றும் இதுபோன்ற காரணங்களால் வாக்காளர்கள் நீக்கப்படக்கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் பாஜக கவுன்சிலர் அஸ்வத்நாராயண கவுடா கூறுகையில், "இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். யெலஹங்கா, ஹெப்பால், புலிகேஷிநகர் மற்றும் மகாலட்சுமி லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் சுமார் சுமார் 30,000 வாக்காளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.


Click it and Unblock the Notifications
