'ஆட்டம் காணும் பதவி'-டெல்லியில் ரங்கசாமி
புதுச்சேரி: பதவியிலிருந்து நீக்கப்படும் அபாயத்தில் நீண்டநாட்களாக உழன்று கொண்டுள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று டெல்லி விரைந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் காரியக் கமிட்டி உறுப்பினர்களை அவர் சந்திக்கவுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்ள ஐந்து அமைச்சர்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ரங்கசாமியை நீக்க வேண்டும் என்று அவர்கள் கட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.
ரங்கசாமிக்கு எதிரான போர்க்குரல் வலுத்துவருவதைத் தொடர்ந்து ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலைத் தருமாறு ரங்கசாமிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் ரங்கசாமியை நீக்காமல் மேலிடம் இழுத்தடித்து வந்ததால் அதிருப்தி அடைந்த அதிருப்தி அமைச்சர்கள், ரங்கசாமியின் அமைச்சரவைக் கூட்டங்களைப் புறக்கணித்து வந்தனர். இதனால் அமைச்சரவையைக் கூட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் வருகிற 18ம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்ைதக் கூட்ட ரங்கசாமிக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டது.
இந்த பரபரப்பான நிலையில்,இன்று காலை ரங்கசாமி திடீரென டெல்லி கிளம்பிச் சென்றார்.
கட்சி நிலவரத்தை மேலிடத் தலைவர்களிடம் எடுத்துக் கூறி காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தை தள்ளி வைக்குமாறு அவர் சோனியா காந்தி மற்றும் காரியக் கமிட்டி உறுப்பினர்களை கேட்டுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
