சமூக நீதியே என் தாரக மந்திரம்- சிரஞ்சீவி
திருப்பதியில் நேற்று நடந்த கட்சி தொடக்க விழாவில் அவர் பேசுகையில்,
திருப்பதியில் வெங்கடாசலபதி ஆசியுடன் என்னுடைய அரசியல் கட்சியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வருங்காலத்தில் ஆந்திராவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.
என்னுடைய 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கை நேற்றுடன் முடிந்து விட்டது. இன்றிலிருந்து என் அரசியலில் பிரவேசம் தொடங்குகிறது.
சினிமாவில் என்னை வளர்த்து விட்டவர்கள் நீங்கள்தான். அதேபோல் அரசியலிலும் மக்கள் என்னை வளர்த்து ஆளாக்க வேண்டும்.
அன்னை தெரசா பிறந்தநாளில் என் கட்சியையும், கொடியையும் அறிவித்துள்ளேன். அவருடைய சேவையைப்போல் என்னுடைய சேவையும் தொடரும்.
நான் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன், மிகவும் கஷ்டப்பட்டவன். அரை வயிற்று கஞ்சி குடித்து பள்ளிக்கு சென்றவன். ஒரு காலத்தில் நான் விறகு வெட்டி பிழைப்பு நடத்துகிற அளவிற்கு வறுமையில் இருந்தேன். ஏழையின் சிரமம், கஷ்டம் எனக்குத் தெரியும்.
பள்ளியில் படிக்கும்போது மாற்று உடை ஒன்றுதான் இருந்தது. இதனால் ஏழைகளின் தேவை எனக்குப் புரியும். ஏழைகளுக்காக முழு மூச்சாக பாடுபடுவேன்.
அரசியலுக்கு போகவேண்டாம் என்று என்னிடம் என் தாய் சொன்னார். எதற்கு நமக்கு ஊர் பேச்சு என்று கேட்டார். மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்களுடைய வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, தாயின் ஆசியோடு எனது கட்சியை தொடங்கியிருக்கிறேன்.
ஏற்கனவே அரசியலுக்கு வந்தவர்கள் கட்சியை தொடங்கும்போது, அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே அதை மறந்துவிட்டுப் போய்விட்டார்கள்.
நான் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். சொன்னதை செய்வேன், அரசியலில் லஞ்சத்தை ஒழிப்பேன்.
கடவுளின் சாட்சியோடு சொல்கிறேன், நான் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மக்கள் சந்தோஷமாக வாழ்வார்கள். மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
24 மணி நேரமும் மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறேன். மக்களும் எனக்கு முழு ஒத்துழைப்பை தரவேண்டும்.
என் ரசிகர்கள் இப்போது கட்சிக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் எந்த காரணத்தினாலும் தவறு செய்யக்கூடாது. தவறு செய்யவும் நான் விடமாட்டேன்.
விவசாயிகள், நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடுவேன்.
மாற்றமும், சமூக நீதியும் தான் என் கட்சியின் தாரக மந்திரம். பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவேன்.
தெலுங்கானா தனி மாநில கோரிக்கை, நக்சலைட் பிரச்சினைகளில் அறிவுஜீவிகளை கலந்து ஆலோசித்துவிட்டு முடிவு எடுப்பேன் என்றார்.
ஆந்திராவில் பெருமளவில் உள்ள கபு என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் சிக்கி பெண் பலி:
இதற்கிடையே சிரஞ்சீவியின் கட்சி தொடக்க விழாவில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விழாவில் பங்கேற்க ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திருப்பதியில் குவிந்தனர்.
ஊனமுற்ற ரசிகர்களுக்காக விழா மேடைக்கு சற்று அருகில் அமர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சிரஞ்சீவி பேசும்போது ரசிகர்கள் உற்சாகமாக மேடைக்கு அருகில் செல்ல முயன்றனர். மக்கள் மீது நடந்து செல்லும் அளவுக்கு பலர் ஆர்வகோளாறு வேலைகளை செய்தனர். தனது கட்சி பெயரை சிரஞ்சீவி அறிவித்தபோது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள் அவரை நெருங்க முயன்றனர்.
இதில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஊனமுற்றோருக்காக அமைக்கப்பட்ட பகுதிகளில் ரசிகர்கள் மூர்க்கமாக இறங்கினர். இதில் பெண் ரசிகை ஒருவர் படுகாயமடைந்தார். அவரை மீட்க போலீஸார் முயன்றும் அவர் பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நெரிசலில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் பலர் ஊனமுற்றவர்கள் ஆவர். கூட்ட நெரிசலை பார்த்த பத்திரிகையாளர் பீதியடைந்து அங்கிருந்து ஓடினர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கூட்டத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்குள் சிரஞ்சீவிக்கு போதும்போதும் என்றாகிவிட்டது.













Click it and Unblock the Notifications