அப்பாவியை அடித்துக் கொன்ற போலீஸ்!
நாகர்கோவில்: தவறான தகவலை நம்பி அப்பாவியை பிடித்து சென்ற போலீஸார், அவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.
நெல்லை மாவட்டம் பழவூர், நரிப்பாறை காலனியைச் சேர்ந்தவர் முருகன் என்ற துரை. இவர் மீது பழவூர், வள்ளியூர் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன. மேலும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக துரையை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த துரைசிங்கம் என்பவர் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே உள்ள தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்தான் துரை என்று போலீசாருக்கு தவறான தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவரிடம் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த தியேட்டருக்கு சென்று படம் பார்த்துக் கொண்டிருந்த துரைசிங்கத்தை அழைத்து சென்றனர். பின்னர் வடசேரி காவல் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரிடம் வெடிகுண்டு எங்கே என்று கேட்டு துரைசிங்கத்தை போலீசார் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் துரைசிங்கம் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் துரைசிங்கம் பரிதாபமாக இறந்தார்.
ஆனால் முன்னதாக வெட்டூர்ணிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனைக்கு அவரை போலீஸார் கொண்டு சென்றதாகவும், துரைசிங்கத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் துரைசிங்கத்தின் உடல் சாலையோரத்தில் கிடந்ததாகவும், ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாகத் தெரிகிறது. இதனால் துரைசிங்கத்தின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். இதனால் போலீஸார் செய்வதறியாது விழித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications