'மின்வெட்டு' வீராசாமி- விஜய்காந்த் தாக்கு
கடலூர்: மின்சாரத்துறைக்கு ஆற்காடு வீராசாமி என்ற அமைச்சர் உள்ளார். தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டியது அவரின் கடமை. ஆனால், அவரோ 'மின்வெட்டு' வீராசாமியாக உள்ளார் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.
எத்தனை இடையூறு கொடுத்தாலும் முரசு சின்னத்தை பெற்றே தீருவேன்' என, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக விவசாய தொழிலாளர் பிரிவு செயலாளர் சண்முகம் இல்லத் திருமண விழா கடலூரில் நடந்தது. அதில் விஜயகாந்த் பேசியதாவது:
அரசியலுக்கு வந்த பின் ஏன் இன்னும் நடிக்கிறான் என சிலர் கேட்கின்றனர். நடித்தால் தான் வருமானம் வரும். அதைக் கொண்டு தான் என் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்.
அண்ணன், தந்தை, கிழவன் வேடத்திலும் நடிப்பேன். நான் சம்பாதிப்பதற்கு சரியாக கணக்கு காட்டுகிறேன். ஆனால், திமுகவில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் மக்களுக்கு ஏதும் செய்யாமல், அனைவரும் கல்லூரி கட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.
மின்சாரத்துறைக்கு ஆற்காடு வீராசாமி என்ற அமைச்சர் உள்ளார். பொதுமக்களுக்கு, தொழிற்சாலைகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டியது அவரின் கடமை. ஆனால், அவர் 'மின்வெட்டு' வீராசாமியாக உள்ளார்.
தமிழக உளவுத்துறை தன் வேலையை செய்யாமல், கட்சிகளை உடைப்பது, எதிர் கட்சியில் என்ன நடக்கிறது என்பதை உளவு பார்ப்பது போன்ற வேலையை மட்டுமே செய்து வருகிறது.
நமக்கு யாருடனும் கூட்டணி தேவையில்லை. தெய்வமும் மக்களும் இருந்தால் போதும். அதிமுக, திமுக இரு கட்சிகளையும் தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும். அதற்காக தொடர்ந்து நாம் பாடுபட வேண்டும்.
முரசு சின்னத்தை மீண்டும் நாம் பெறுவதற்கு இடையூறு கொடுப்பார்கள். எத்தனை இடையூறு கொடுத்தாலும் முரசு சின்னத்தை பெற்றே தீருவேன் என்றார் விஜயகாந்த்.


Click it and Unblock the Notifications
