ராஜஸ்தானில் 4 சிமி அமைப்பினர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சிமி அமைப்பின் முக்கிய தலைவர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநில காவல் துறையின் சிறப்பு படை போலீஸார் கோட்டாப் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சிமி அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். முன்வர் ஹூஸைன், அதுர் ரகுமான், நதீம் அக்தர் ஆகியோரை கோடாவில் கைது செய்தனர். பரன் மாவட்டத்தில் முகமது இலியாஸ் என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து ஏடிஜிபி ஏ.கே.ஜெயின் கூறுகையில், இதில் முன்வர் ஹூஸைன் தடை செய்யப்பட்ட சிமி அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார். ஹூஸைன் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவர்கள் ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்படவில்லை.
ஆனால் அகமதாபாத் குண்டு வெடிப்பில் முக்கிய பங்கு வகித்த சிமி தீவிரவாதி சஜ்ஜித் மன்சூரியுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 11 நாள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தை அடுத்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications