Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னை பீஷ்மர்-துரோணரோடு ஒப்பிடாதீர்கள்?: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: என்னை 'துரோணர்' என்றும் 'பீஷ்மர்' என்று வர்ணித்து என் மீது ஏன் கோபத்தைக் காட்டினார்கள் என்று தெரியவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக உயர் கல்வித்துறை சார்பில் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலூர், திருக்குவளை, ராமநாதபுரம் ஆகிய 6 இடங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட்டது.

சென்னையில் நடந்த விழாவில் இவற்றுக்கான அடிக்கல்லை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். மேலும் சைதாப்பேட்டையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு ரூ.12.5 கோடி மதிப்பில் புதிய வளாகம் கட்டுவதற்கான அடிக்கல்லையும் அவர் திறந்து வைத்தார்.

காமராஜர் சாலையில் ரூ.80 லட்சம் செலவில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் மாநில உயர்கல்வி மன்ற நூல்களையும் வெளியிட்ட கருணாநிதி சிறந்த கல்வியாளர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விருதுகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் பேசியதாவது:

கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சிக்கு வர இயலுமா என்பது கேள்விக்குறியாகி, மருத்துவப் பெருமக்களும் இரண்டு நாள் ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது என்று அழுத்தந்திருத்தமாக அறிவுறுத்திய பிறகும் என் கண்ணெதிரே அண்ணா பல்கலைக்கழகமும், நடைபெற வேண்டிய நிகழ்ச்சியும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற மாணவத் தம்பிமார்களும், தென்பட்ட காரணத்தால் உங்களையெல்லாம் மதிக்க வேண்டும், உங்களிடத்திலே காட்டுகின்ற அன்பு போலியானதல்ல, அது உண்மையானது என்பதை நிலைநாட்டுகின்ற வகையில் இந்த 5 விழாக்களை இணைத்து நடத்துகின்ற பெருவிழாவில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன்.
இங்கே உரையாற்றியவர்கள் என்னை 'துரோணர்' என்றும் 'பீஷ்மர்'' என்றும் வர்ணித்து அவர்களுடைய கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் நான் பீஷ்மரை மதிப்பவன் தான். ஆனால் அவருடைய செயல், அவர் யாருக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்தாரோ அவர்களுக்கு இறுதிக் காலத்திலே பயன்படவில்லை. மகாபாரதத்திலே வருவதைப்போல கடைசி வரையில் பாண்டவர்களுக்காக வாதாடிக் கொண்டிந்த பீஷ்மர், இறுதிக் கட்டத்திலே துரியோதனர்களுக்காக வாதாடி அவர்களுக்காக களத்திலே அடிபட்டு, அம்புப்படுக்கையில் படுக்க வைக்கப்பட்டு, போர் முடிகின்ற நாள் வரையிலே உயிரோடு இருந்து பிறகு, மாண்டார் என்பது பீஷ்மருடைய கதை. இது இறுதி காலத்து கதை.

அவருடைய தொடக்க காலத்து கதையை நான் படித்திருக்கிறேன், சொல்ல விரும்பவில்லை. அதை நீங்கள் நம்முடைய ஆசிரியர் கி.வீரமணியிடம் முடிந்தால் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இயன்றால் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

எனவேதான் என்னை இவ்வளவு பெரிய விழாவுக்கு அழைத்து ஏன் திட்டினார்கள் என்றுதான் புரியவில்லை.

அதைப்போலத்தான் 'துரோணர்'. துரோணர் என்ற பெயரை எனக்குச் சூட்டியபோது நான் விரும்பாததற்குக் காரணம், நான் வருத்தப்படுவதற்கே காரணம், இது கல்வி நிலையம். இங்கே இருக்கின்ற மாணவர்கள் கல்வி கற்க விரும்புகின்றவர்கள், பொறியாளர்களாக, மேதைகளாக, அறிஞர் பெருமக்களாக, எதிர்கால சிற்பிகளாக வரவேண்டும் என்பதற்காக அண்ணா பல்கலைக்கழகத்திலே உங்களை ஒப்படைத்துக் கொண்டு,

இங்கேயுள்ள ஆசிரியப் பெருமக்கள், துணை வேந்தர்கள் இவர்களுடைய துணையோடும், உதவியோடும் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாக ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்திருப்பவர்கள்.

அப்படி வந்திருக்கின்ற உங்களுடைய நம்பிக்கையை குலைப்பதைப்போல துரோணர் என்று சொன்னதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் துரோணர் காலத்திலேயே அடித்தட்டு மக்களுக்கு சாதியின் பெயரால், வகுப்பின் பெயரால், மதத்தின் பெயரால் உயர்குலம், கீழ்குலம் என்ற பேதங்களின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட காலம், துரோணருடைய காலம்.

அப்படி கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினால் தான் வில்வித்தை கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஏகலைவன் துரோணரிடம் சென்று கேட்டபோது, நீ வேடர் குலம், இழிகுலம், கீழ்குலம், கீழ்சாதி, உனக்கு நான் வில்வித்தை கற்றுத்தர மாட்டேன் என்று துரோணர் சொல்லிவிட,

அப்படியானால் பரவாயில்லை, நான் உங்களைப்போல ஒரு சிலை செய்து வைத்து, அதன் முன்னால் நின்று வித்தையைக் கற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி, அவருடைய சிலைக்கு முன்னால் நின்று அரும்பாடுபட்டு வில் வித்தையைக் கற்றுக் கொண்டு, துரோணரிடத்திலேயே வந்து தான் கற்ற வித்தை சரிதானா என்று கேட்டான் ஏகலைவன்.

துரோணர் ஆச்சரியத்தால் அகல விழிகளை விழித்து, அப்படியா, கற்றுக் கொண்டாயா, எங்கே பார்க்கலாம் என்று குறி தவறாமல் உன்னுடைய அம்பு பாய்கிறதா பார்ப்போம் என்று பரீட்சை வைக்க, அவ்வாறே ஏகலைவன் துரோணர் காட்டிய குறியை, அவர்காட்டிய அடையாளத்தின் மீது சரியாக அம்பு எய்து வீழ்த்த, இது என்னைப்போல சிலைசெய்து வைத்து நீ இந்த வில்வித்தையை கற்றுக் கொண்டிருந்தாலும், நீ எனக்கு தர வேண்டிய குரு காணிக்கையை தந்தே ஆக வேண்டும் என்று துரோணர் கேட்டார்.

என்ன காணிக்கை வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன் என்றான். ஒன்றும் பெரிதல்ல, உன்னுடைய கட்டை விரலை எனக்கு காணிக்கையாகக் கொடு என்று துரோணர் கேட்க, அவனும் ஆசிரியர் கேட்கிறாரே, அதை மறுக்கக்கூடாதே என்று கட்டை விரலை வெட்டி காணிக்கையாகத் தந்து விடுகிறான்.

கட்டை விரலை எதற்காக கேட்டார் என்ற சூட்சுமம் மறுபடியும் அவன் அந்த வில்லை கையிலே எடுத்தபோதுதான் அவனுக்கு தெரிந்தது. கட்டை விரல் இல்லாமல் வில்லிலே அம்பை வைத்து குறிபார்க்க முடியாது. அவனால் அந்த வில்லைப் பயன்படுத்த முடியாது.

தன்னிடத்திலே ஒரு தாழ்ந்த குலத்தை சேர்ந்த ஏகலைவன் வித்தை கற்றுக் கொண்டு, அதைப் பயன்படுத்தக்கூடாது என்ற அந்த மதவெறியின் காரணமாக, அன்றைக்கே ஏகலைவன் என்ற வேடச் சிறுவனுக்கு அந்த வித்தை மறுக்கப்பட்டது. கல்வி மறுக்கப்பட்டது.

அப்படி கல்வி மறுக்கப்பட்ட பெரிய சமுதாயத்திலே இருந்து வந்த மாணவ சிங்கங்கள் தான், மாணவ தங்கங்கள்தான் என் எதிரே இன்று வீற்றிருக்கின்ற காட்சியை நான் காணுகின்றேன்.

அன்றைக்கு ஒருவனுக்கு கல்வி இல்லை, வித்தையில்லை என்று சாதியின் பெயரால் விரட்டியடிக்கப்பட்ட அந்த காலத்தையும், இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அண்ணா பெயரால் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்திலே திரண்டிருக்கின்ற காட்சியையும் அண்ணாவின் தம்பியாகிய நான் இன்று காணும் போது, ஆனந்தம் கொள்ளுகிறேன், அக மகிழ்வு கொள்ளுகிறேன்.

இதற்கு என்ன காரணம் என்று நான் எண்ணிப் பார்க்கின்றேன். அன்றைக்கு கல்வி தமிழகத்தில், அனுபவரீதியாகச் சொல்ல வேண்டுமேயானால், பெருந்தலைவர் காமராஜர் ஆடு மேய்க்கின்ற சிறுவனையும், மாடு மேய்க்கின்ற சிறுவனையும் வழியிலே கண்டு, அவன் எப்படி முன்னேறுவான் என்று யோசித்து, அவனை அழைத்துப்பேசி அவனுடைய குடும்பநிலை என்ன, அவன் பட்டினி கிடந்து தான் படிக்க வேண்டுமென்பதை உணர்ந்து, அவனுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்து, அவனை படிக்க வைத்து, அன்றைய தினம் அவனைக் கல்வியாளனாக ஆக்குவதற்கு அரும்பாடுபட்டார்.

மாண்புமிகு அமைச்சர் தம்பி பொன்முடி இங்கே எடுத்துச் சொன்னதைப்போல் பெருந்தலைவர் காமராஜர் கிராமப்புற மக்களுக்கு படிப்பு வேண்டும், கல்வி வேண்டும் என்பதற்காக பாடுபட்டார். அதுதான் ஆரம்பக்கட்டம்.

இப்போது உயர்கல்வி தந்து விட்டோம், கடந்த ஆண்டு 50,000, இந்த ஆண்டு லட்சம் பேர் என்ற பெருமை பேசினாலும்கூட, உரிய கல்வி இல்லாத கஷ்டத்தையும், உயர்கல்வி கிடைத்திருக்கின்ற இந்த மகிழ்ச்சியையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இன்றைக்கு உயர்கல்வி பெற்றுத் திளைக்கின்ற மாணவர்கள், ஒரு காலத்திலே உரிய கல்வி கூடக் கிடைப்பதற்கு தடுக்கப்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

அந்த உரிய கல்வி கிடைக்காமல் அவர்கள் வேதனைப்பட்ட நேரத்திலேதான், அந்த உரிய கல்வியைப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்குத் தர வழிவகுத்தார். அவர் வகுத்த வழிநின்று தான் இன்றைக்கு நாங்கள் உரிய கல்வி பெற்றாயா, அடுத்து உயர்கல்வியையும் பெற்றுக்கொள் என்று, இன்றைக்கு அவர்களுக்கு உயர்கல்வி தருகின்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அந்தக் காட்சியைத்தான் கண்கொள்ளாக் காட்சியாக என் எதிரே நான் பார்க்கிறேன். இந்தக் காட்சி வளருமேயானால், இந்த காட்சி பெருகுமேயானால் இன்னும் வருவார்களேயானால் எதிர்காலத் தமிழகத்தை, பூங்காவனமாக, பூந்தோட்டமாக நிச்சயமாக ஆக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அந்த நம்பிக்கையோடு இன்றைக்கு 5 அம்சங்கள் கொண்ட இந்த பெருவிழாவிலே என்னுடைய வாழ்த்துக்களை இங்கே வருகை தந்துள்ள மாணவக் கண்மணிகளுக்கும் வழங்கி இந்த அளவிற்கு மேல் என்னுடைய குரல் ஒத்துழைக்காது.

இன்றைக்கு நான் பிடிவாதமாக பேசிவிட்டாலும், நாளையதினம், அதற்கு மறுநாள் என்னால் அலுவல்களையே பார்க்கமுடியாத அளவிற்கு ஆகிவிடக்கூடும். அது உங்களுக்கு நஷ்டமோ இல்லையோ, எனக்கு நஷ்டம். எனக்கு நஷ்டம் என்றால், என்னுடைய செயல்களுக்கு நஷ்டம். என்னுடைய செயல்களுக்கு நஷ்டம் என்றால் ஏழைகளைத் கைதூக்கி விட ஏழைகளுக்கு கல்விதர, ஏழைகளின் பசி போக்க நான் எடுத்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை ஆகிவிடும்.

ஆகவே, அந்த முட்டுக்கட்டை அகல நீங்கள் எனக்கு மன்னிப்பை அளித்து, இந்த அளவிலே விடை கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+