பேட்டா செருப்பை நிறுவிய தொழிலதிபர் பேட்டா மரணம்

செக் நாட்டைச் சேர்ந்தவர் தாமஸ். இவர் நிறுவியதுதான் பேட்டா ஷூ நிறுவனம். இந்தியாவில் பேட்டா ஷூக்கள் மற்றும் செருப்புகள் மிகப் பிரசித்தி பெற்றவை. பேட்டா காலடி படாத இடமே இந்தியாவில் இல்லை என்று கூறும் அளவுக்கு மிகவும் புகழ் பெற்றது பேட்டா.
தாமஸின் பேரன்தான் மறைந்த தாமஸ் ஜி பேட்டா. இவர் கனடாவின் டோரன்டோ நகரில் வசித்து வந்தார். 93 வயதான தாமஸ் பேட்டா, நேற்று காலை சன்னிப்ரூக் மருத்துவமனையில் மரணமடைந்தார் என்று பேட்டா ஷூ மியூசிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் பேட்டா தனது 94வது பிறந்த நாளை கொண்டாடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பேட்டாவுக்கு மனைவி சோஞ்சா மற்றும் ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
பேட்டா நிறுவனம் உருவான கதை...
மறைந்த பேட்டாவின் தாத்தாவான தாமஸ், 1894ம் ஆண்டு செக் நாட்டின் லின் நகரில் பேட்டாவா நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் இது பேட்டா ஷூ நிறுவனமாக விஸ்வரூபம் எடுத்தது. 1940ம் ஆண்டு முதல் 80கள் வரை தாமஸ் இந்த நிறுவனத்தைக் கவனித்துக் கொண்டார்.
1945ல் அனைத்து தனியார் நிறுவனங்களையும் செக் கம்யூனிஸ்ட் அரசு நாட்டுடமையாக்கியது. இதையடுத்து டோரன்டோவுக்கு பேட்டாவா கம்பெனி இடம் பெயர்ந்தது. அப்போது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை மறைந்த பேட்டாவின் தந்தை ஏற்றுக் கொண்டார்.
1989ல் மீண்டும் பேட்டா நிறுவனம் செக் நாட்டுக்குத் திரும்பியது.
2001ம் ஆண்டு மறைந்த தாமஸ் ஜி. பேட்டா பேட்டா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
தாமஸ் பேட்டாவின் மறைவுக்கு செக் அதிபர் வாக்லோவ் கிளாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உள்ளூரில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் கூட உலக நாடுகளில் மிகப் புகழ் பெற்ற நிறுவனமாக, தொழிலதிபராக பேட்டா புகழ் பெற்றுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
பேட்டா நிறுவனத்திற்கு டோரன்டோவில் 10 ஆயிரம் ஷூக்களுடன் கூடிய பேட்டா ஷூ மியூசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications