நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும்: மாயாவதி
டெல்லி: இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ள பின்னணியில் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்க பிரதமருக்கு உத்தரவிட வேண்டும் அல்லது பிரதமர் பதவி விலக குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும் என உ.பி. முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் மாயாவதி பேசுகையில், சர்ச்சைக்குரிய அணு சக்தி ஒப்பந்தம் குறித்து மன்மோகன் சிங் அரசு தவறான தகவல்களைக் கொடுத்து நாட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. திசை திருப்பும் வகையில் நடந்துள்ளது.
இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் தானாக பதவி விலக வேண்டும். அணு கொள்கை தொடர்பான இந்தியாவின் நிலை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகிறார்.
மழைக்காலக் கூட்டத் தொடரை கூட்டுவதை மன்மோகன் சிங் அரசு, வேண்டுமென்றே தள்ளிப் போட்டு வருகிறது. அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மையை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தி விடுமே என்ற பயமே இதற்குக் காரணம். எனவேதான் மழைக்காலக் கூட்டத் தொடரையும், குளிர்காலக் கூட்டத் தொடரையும் ஒன்றாக சேர்த்துள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் கேள்வி அம்புகளிலிருந்து தப்பிக்க முயலுகிறார்கள்.
எனவே உடனடியாக மழைக் காலக் கூட்டத் தொடரை கூட்டுமாறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டும். அல்லது அரசு விலக வேண்டும் என அறிவுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார் மாயாவதி.












Click it and Unblock the Notifications