அண்ணா பிறந்த நாள்-பாதி விலைக்கு தங்கம்: விருத்தாச்சலம், திருப்பத்தூரில் வதந்தி!

அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு திட்டங்களை முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் நூதன வதந்தி இன்று காலை பரவியது.
விருத்தாச்சலம் மற்றும் அதன் சுற்றுப் பகுதி கிராமங்களிலும் நேற்று ஒரு செய்தி காட்டூத் தீ போல பரவியது. அண்ணா நூற்றாண்டையொட்டி ஒரு பவுன் தங்கம் ரூ. 4000க்கு விற்கப்படுவதாக அந்த செய்தி கூறியது.
இதையடுத்து விருத்தாச்சலம், கடை வீதியில் உள்ள நகைக் கடைகள் முன்பு இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நகைக் கடை உரிமையாளர்கள் திகைத்தனர். என்ன இவ்வளவு கூட்டம் என்று அவர்கள், கடைக்கு வந்தவர்களிடம் கேட்டபோது, விவரத்தைக் கூறியுள்ளனர்மக்கள்.
இதைக் கேட்டதும் நகைக் கடை உரிமையாளர்களும், ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்படியெல்லாம் எந்த விற்பனையும் இல்ைல என்று அவர்கள் கூறியதை மக்கள் ஏற்க மறுத்து விட்டனர். கடையைத் திறங்கள், நாங்கள் பாதி விலைக்கு நகைகளை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் பறந்தது. போலீஸார் விரைந்து வந்து இது வதந்தி. அப்படியெல்லாம் நகை விற்பனை இல்லை என்று மக்களிடம் மைக் மூலம் விளக்கினர். ஆனால் மக்கள் கலைந்து போக மறுத்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மக்களிடம் கடுமையாக முயற்சித்து விளக்கம் அளித்த போலீஸார், அனைவரையும் கலைந்து போகச் செய்தனர். அதன் பின்னரே கடை வீதியில் சகஜ நிலைதிரும்பியது.
திருப்பத்தூரிலும் ...
இதே வதந்தி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரிலும் பரவியது. அங்கு பவுன் தங்கம் ரூ. 5000க்கு விற்கப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் நகைக் கடைகள் முன்பு குவிந்தனர்.
பலர் பழைய நகைகளை விற்றும், ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை விற்றும் கையில் பணத்துடன் வந்திருந்தனர். இதனால் திருப்பத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்து சென்று இது வதந்தி என்று கூறி மக்களிடம் விளக்கி கலைந்து போகச் செய்தனர்.
எப்படி இந்த வதந்தி பரவியது, யார் பரப்பியது என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications