மனைவி, மகளுடன் துபாய் கடலில் மிதந்த கேரள தொழிலாளர்
துபாய்: கோழிக்கோட்டைச் சேர்ந்த இந்தியத் தொழிலாளர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் துபாய் கிரீக் பகுதியில் கடலில் மூழ்கி இறந்தார். இது இயற்கையான மரணமா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் கிரீஷ் குமார் (35). துபாய் டிரை டாக்ஸ் பகுதியில், மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சஃபீகா (27). இவர்கள் இருவர் மற்றும் அவர்களது 2 வயது மகள் கெளரி நந்தா ஆகியோரின் உடல்கள் துபாய் கிரீக் பகுதியில் மிதந்தன.
இதையடுத்து மூன்று பேரின் உடல்களையும் போலீஸாப் கைப்பற்றினர். உடல்களை தடயவியல் ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர். சிறுமியின் உடலில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மரணத்திற்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த படகோட்டி ஒருவர்தான் 3 பேரின் உடல்களும் மிதப்பதைப் பார்த்து போலீஸாருக்கும், கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் தகவல் தெரிவித்தார்.
இதற்கிடையே, தாய் மற்றும் மகளின் உடல்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது.
கிரீஷ் குமார் காரில் மனைவி, மகளுடன் கடலுக்கு வந்ததாகவும், இந்திய தூதரகம் அருகே காரை நிறுத்தி விட்டுச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்தியில் எழுதப்பட்ட ஒரு கடிதமும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், கிரீஷின் சகோதரி மூலம் சில பிரச்சினைகள் இருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மரணம் குறித்து துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications