For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்ச்சுகள் மீது தாக்குதல்: கர்நாடகத்தில் மத்திய குழு விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

Church attack in Mangalore
மங்களூர்: தென் கன்னட மாவட்டத்தில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து மத்திய உயர் மட்டக் குழு இன்று மங்களூரில் விசாரணை நடத்தியது.

செப்டம்பர் 14ம் தேதி மங்களூர் உள்ளிட்ட தென் கன்னட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந் நிலையில் செப்டம்பர் 15ம் தேதி மங்களூர் சர்ச்சுக்குள் போலீஸார் புகுந்து கன்னியாஸ்திரிகளையும், அங்கு தங்கியிருந்தவர்களையும் தாக்கினர்.

இதையடுத்து சர்ச் தாக்குதல்கள் நடத்துவோரை ஒடுக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அரசியல் சட்டம் 355வது பிரிவின் கீழ் எச்சரிக்கை விடுத்தது. மேலும் ஆளுநரும் மாநில அரசிடம் விளக்கம் கேட்டு உத்தரவிட்டார்.

இந் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் மட்டக் குழு இன்று மங்களூர் வந்தது. அங்கு சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இக்குழு விசாரணை நடத்தியது.

மத்திய உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பு செயலாளர் மகேந்திர கும்வத், மனித உரிமை துறை இணை செயலாளர் ஏ.கே.மாதவன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தாக்குதலுக்குள்ளான சர்ச்சுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இந்தக் குழு பெங்களூரில் நடத்தப்பட்ட சர்ச்கள் மீதான தாக்குதல் குறித்தும் விசாரிக்கவுள்ளது.

எதியூரப்பாவை எகிறிய பிஷப்:

முன்னதாக சர்ச் தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவி்க்க கர்நாடக டயோசிசின் ஆர்ச் பிஷப் பெர்னார்ட் மோரேசை நேற்று முதல்வர் எதியூரப்பா நேரில் சந்தித்தார்.

அப்போது தனது வீட்டின் வெளியே வந்து முதல்வரை வரவேற்ற பிஷப், சர்ச்கள் மீதான தாக்குதல்கள் குறித்து முதல்வரிடம் படு ஆவேசமாகப் பேசினார்.

நாங்கள் உள்ளம் புண்பட்டிருக்கிறோம். தேவாலாயங்களுக்குள்ளே புகுந்து புனிதமான மத அடையாளங்களை சேதப்படுத்தியிருக்கிறார்கள். கோவிலுக்குள் புகுந்து கர்ப்ப கிரஹத்தை சேதப்படுத்தினால் உங்கள் மனம் எவ்வளவு புண்படும். அதே மாதிரி தான் கர்நாடகத்தில் உள்ள கிருஸ்துவர்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள கிருஸ்துவ மக்கள் மனம் வேதனையடைந்துள்ளனர் என ஆவேசமாகப் பேசினார்.

இதற்கு பதிலளிக்க முடியாமல் அமைதியாக நின்றிருந்தார் எதியூரப்பா.

பின்னர் அவரை தனது இல்லத்துக்குள் அழைத்துச் சென்ற பிஷப் ஒரு மனுவை அளித்தார். அதில், சர்ச்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்ளையடிக்க வந்தார்களாம்...திசை திருப்பும் போலீஸ்:

இந்தத் தாக்குதலை திசை திருப்ப பெங்களூர் நகர காவல்துறை ஆணையர் சங்கர் பித்ரி முயல்வது சரியல்ல. கொள்ளையடிப்பதற்காக சர்ச்சுக்குள் யாரோ புகுந்ததாக பேட்டியளிக்கிறார் பித்ரி.

சர்ச்சில் ஏதும் கொள்ளையடிக்கப்படவும் இல்லை, கொள்ளையடிக்கும் அளவுக்கு சர்ச்களில் ஏதும் இல்லை. எனவே திசை திருப்பும் வேலையை நிறுத்திவிட்டு நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும் என்று காட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X