For Daily Alerts
Just In
சந்திராயன்-1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பப்பட்டது

சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலத்தை செலுத்தும் திட்டத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. இதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் உருவாகியுள்ளது சந்திராயன்-1.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ செயற்கைகோள் மையத்தில் விஞ்ஞானிகளின் கடின உழைப்பில் சந்திராயன் அனைத்து கட்ட சோதனைகளிலும் வெற்றி பெற்றுவிட்டது. இறுதியாக சுற்றுச்சூழல் தொடர்பான சோதனையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இம்மாத இறுதியில் சந்திராயன் நிலவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் அறிவித்தபடி, விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைகோள் செலுத்தும் மையத்துக்கு பத்திரமாக அனுப்பப்பட்டுள்ளது.
அங்கு இறுதிகட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளது. பின்னர் பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட்டுடன் இம்மாத இறுதியில் சந்திராயன்-1 நிலவுக்கு செலுத்தப்படுகிறது.