பிரபாகரனை நாடு கடத்த இன்டர்போல் கூட்டத்தில் சிபிஐ கோரிக்கை: சு.சுவாமி
சென்னை: வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து நாடு கடத்துமாறு கோரிக்கை வைக்க சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும், அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்களாவர்.
அவர்கள் இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நாளை (இன்று) நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே வியன்னா சென்றடைந்துள்ள சிபிஐ இயக்குனர் இதுதொடர்பாக முறையான கோரிக்கையை முன் வைக்கவுள்ளார். மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. பிரதமர் மன்மோகன் சிங்கின் மற்றுமொரு உறுதிப்பாடான நடவடிக்கை இது.
ராஜீவ் கொலை சதி தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ பல்நோக்கு குழுவின் விசாரணையில் சந்தேகிக்கப்படும் முதல்வர் கருணாநிதிதான் இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.