பியூட்டி பார்லரில் பெண் படுகொலை - நகை, பணம் கொள்ளை
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில், பியூட்டி பார்லரில் பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது நகையும், பணமும் கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், சித்ரா ஹெர்பல் பியூட்டி கிளினிக் என்கிற பியூட்டி பார்லர் உள்ளது. இதை சித்ரா (28) என்பவர் நடத்தி வந்தார்.
சித்ராவின் கணவர் சக்திவேல். ஆழ்வார் திருநகரில் வசித்து வந்தார். நேற்று பகலில் வழக்கம் போல பார்லரில் இருந்தார் சித்ரா. உடன் கணவரும் இருந்தார். ஊழியர்கள் யாரும் இல்லை.
பிற்பகல் 2 மணியளவில் சித்ராவின் தந்தை தங்கவேல், மகளுக்கு சாப்பாடு எடுத்து வந்தார். அப்போது கதவு பூட்டியிருந்தது. இதையடுத்து அவர் வீட்டுக்குப் போய் விட்டார். மாலையில் தங்கவேல் மீண்டும் வந்தபோதும் கதவு பூட்டியிருந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த அவர் தன்னிடம் இருந்த இன்னொரு சாவியால் கதவைத் திறந்து உள்ளே போனார். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில், தலைகுப்புற படுத்த நிலையில் சித்ரா பிணமாகக் கிடந்தார். இதைப் பார்த்து தங்கவேல் அதிர்ச்சி அடைந்தார்.
சித்ராவின் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. தலையின் பின்பக்கம் இரும்புக் கம்பியால் பலமாக அடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சித்ராவின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஓடி வந்தார்.
போலீஸாருக்குத் தகவல் போய் அவர்களும் விரைந்து வந்தனர். உடலைக் கைப்பற்றிய போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் மூலம் விசாரணை தொடங்கியது.
சித்ரா அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் பார்லரில் வைத்திருந்த ரூ. ஒன்றரை லட்சம் பணமும் காணவில்லை.
பிற்பகல் 1 மணி வரை சக்திவேல் சித்ராவுடன்தான் இருந்தார். அதன் பின்னர்தான் அவர் வெளியில் போயுள்ளார். அப்போது கேரளப் பெண் ஒருவர் மேக்கப் செய்து கொள்ள வந்திருந்தார். அவர்தான் கொலையைச் செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
கேரள பெண்ணுடன் ஆண் ஒருவரும் சேர்ந்து கொலையைச் செய்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சமீபத்தில் இதேபோல பியூட்டி பார்லர் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது மீண்டும் அதேபோல ஒரு கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications