பர்கூர் திமுக ஒன்றிய தேர்தல்: கோஷ்டி மோதல்-தடியடி
கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றிய திமுக தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கு அடி உதை விழுந்தது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பர்கூர் ஒன்றிய செயலாளர் பதவிக்கான தேர்தலில் பர்கூர் ஒன்றியக் குழுத் தலைவரும், திமுக செயலாளருமான ராஜேந்திரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் ஒன்றியச் செயலாளர் மதிவாணன் போட்டியிட்டார்.
தேர்தல் நாளான நேற்று திமுக முக்கிய நிர்வாகிகள் வந்து வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அப்போது, ராஜேந்திரன் 96 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர். ஆனால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்த போட்டியாளர் மதிவாணனின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த தடியடியில் திமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.