மகாராஷ்டிரம்: 3 பேர் கொலை-ஊரடங்கு, ராஜுக்கு ஜாமீன்
மும்பை: மும்பை நகரில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் நடத்திய தாக்குதலில் 2 வட இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து கல்யாண் பகுதியில் வட இந்தியர்களுக்கும் ராஜ் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் நவ நிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவரின் தம்பி கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, கலவரம் வெடித்த கல்யாண் பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரே தொடர்ந்து போர்க்குரல் கொடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மும்பையில் வட இந்தியர்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ராஜ் தாக்கரே கட்சியினர் வன்முறையில் இறங்கியுள்ளனர். மும்பை, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.
இந்த நிலையில், மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தின் கீழ் வரும் மும்பை புறநகர்ப் பகுதியான கல்யாண் பகுதியில் நேற்று இரவு பெரும் வன்முறை வெடித்தது. இதில், மயூர் துபே, ஓம்பிரகாஷ் துபே ஆகிய இருவரை ராஜ் தாக்கரே கட்சியினர் அடித்துக் கொலை செய்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் கல்யாண் பகுதி மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரின் தம்பியான குருநாத் போயர் படுகொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதி விரைவுப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநில ரிசர்வ் போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கல்யாண் பகுதியில் பல வாகனங்களை கலவரக் கும்பல் அடித்து நொறுக்கி, தீவைத்தது. வன்முறையாளர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தியும் பிரயோஜனம் இல்லை. இதையடுத்து வானை நோக்கி சுட்டு கும்பலை போலீஸார் கலைத்தனர்.
ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீன்:
இதற்கிடையே கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்கரே நேற்றிரவை கம்பிகளுக்குப் பின் கழித்தார். இன்று அவர் மும்பையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள கல்யாண் நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக நேற்று கைது செய்யப்பட்ட ராஜை ஜாமீனில் விடுதலை செய்த பந்த்ரா நீதிமன்றம், இன்னொரு வழக்கில் அவரை இன்று கல்யாண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது. அதுவரை அவரை போலீஸ் காவலில் வைக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்றிரவு டோம்பிவிலியில் உள்ள மண்பாடா காவல் நிலையத்தில் அவர் சிறை வைக்கப்பட்டார். இன்று கல்யாண் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.
அங்கு அவருக்கு 24ம் தேதி வரை முன் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடு்த்து அவர் விடுதலையானார்.
கல்யாண் பகுதியில் ஊடரங்கு உத்தரவை மீறி கும்பலாக வந்த ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்களை போலீசார் அடித்து ஓட, ஓட விரட்டினர்.
இன்று காலை ராஜ் தாக்கரேவை சந்திக்க அவரது மனைவி சர்மிளாவுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், அவரை சந்தித்துவிட்டு வந்த சர்மிளா, தனது கணவரை கட்சியினரும் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். இதை போலீசார் ஏற்க மறுத்ததால் அவர் காவல் நிலையம் எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கிடையே ராஜ் தாக்கரேவின் ஆதரவாளர்கள் மும்பை, தானே, புனே, நாசிக், கோலாபூர், கல்யாண் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பகலிலும் இரவிலும் வன்முறை வெறியாட்டம் போட்டு ரயில் நிலையங்கள், பஸ்கள், கார்கள், பைக்குகள், பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், கடைகள் ஆகியவற்றுக்கு தீ வைத்த அவர்கள் இன்றும் தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.
இதனால் மும்பை உள்பட பல்வேறு நகர்களிலும் இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் திறந்திருந்தாலும் பெரும்பாலான மாணவ, மாணவிகள், ஊழியர்கள் வரவில்லை.
179 பேர் கைது:
இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட 179 பேரை தானே போலீஸார் கைது செய்துள்ளனர்.
தானே வன்முறை குறித்து போலீஸ் கமிஷனர் அனில் தேரே கூறுகையில், கல்யாண், பிசோலி கிராமத்தில் நடந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். நிலைமை தொடர்ந்து பதட்டமாக உள்ளது.
இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பிகாரில் ரயில் எரிப்பு:
இதற்கிடையே ராஜ் தாக்கேரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில், மராட்டியர்கள் பயணம் செய்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது.
பார் என்ற இடத்தி்ல் விக்ரம்சிலா எக்ஸ்பிரஸ் என்ற அந்த ரயிலின ஏசி பெட்டிகள் இரண்டுக்கு மாணவர்கள் தீ வைத்தனர்.
இதையடுத்து பயணிகள் உடனடியாக ரயிலிருந்து வெளியேறியதால் உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications