தயானந்தாவுடன் தொடர்பில்லை: முன்னாள் காஷ்மீர் ஆளுநர் மறுப்பு
டெல்லி: மாலேகான் குண்டுவெடிப்பில் கைதாகியுள்ள சுவாமி தயானந்த பாண்டேவை நான் சந்தித்ததாக முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகம்மது சயீத் கூறியுள்ளது அவதூறானது. அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவது குறித்து பரிசீலித்து வருகிறேன் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் ஆளுநர் லெப்டினென்ட் கர்னல் எஸ்.கே. சின்ஹா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தயானந்த பாண்டேவை அழைத்ததாகவும், அதன் பேரில் அவர் ராஜ்பவன் வந்ததாகவும், அங்கு தங்கியதாகவும் முன்னாள் முதல்வர் கூறியுள்ளார்.
முப்தி முகம்மது சயீத், வெளிநாடுகளுக்குப் போன போதெல்லாம் அவருக்கும், பின் லேடனுக்கும் இடையே தொடர்பு இருந்ததாக நான் கூறினால் எப்படி அது அபத்தமாக இருக்குமோ, அதுபோலத்தான் இந்தப் புகாரும் உள்ளது.
ஆர்.டி.எக்ஸ். கடத்தலில் எனக்குத் தொடர்பு இருப்பதாக முப்தி முகம்மது சயீத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் சிலர் பேசி வருகின்றனர். எனது பெயரை அவர்கள் கெடுக்க முயலுகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை, மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக தயானந்த பாண்டே கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தித்தாள்களில் செய்திகள் வெளியான பின்னர்தான் அவரது பெயரையே நான் அறிந்தேன்.
அவரை எந்த சந்தர்ப்பத்திலும் நான் சந்தித்ததாக எனக்கு நினைவில்லை. ராஜ் பவனிலும் அவர் தங்கியதாக எனக்கு நினைவில்லை. அவருடன் எனக்கு எந்த நெருக்கமான பழக்கமும் இல்லை.
ஸ்ரீநகரில், கடந்த 2002ம் ஆண்டு, அரசு விருந்தினராக பாண்டே வந்து தங்கியதாக சில பத்திரிகைகள் விஷமத்தனமாக செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் நான் 2003ம் ஆண்டுதான் கவர்னராக பொறுப்பேற்றேன்.
மேலும், யாரை அரசு விருந்தினராக அழைப்பது என்று முடிவெடுப்பது ஆளுநர் அல்ல, மாநில அரசுதான் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications