லோக்சபா தேர்தல் தேதி: டிசம்பர் 10ல் முடிவு?
டெல்லி: மத்திய பட்ஜெட் தொடர்பான முக்கிய கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் டிசம்பர் 10ம் தேதியன்று கூட்டியுள்ளார். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிலிருந்து லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தெரியும் என்பதால் இந்தக் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு ஏப்ரலில் தேர்தலை சந்திக்குமா அல்லது டிசம்பர் மாதமே ஓட் ஆப் அக்கவுண்ட்டை தாக்கல் செய்து விட்டு பிப்ரவரி மாதமே தேர்தலை சந்திக்குமா என்பது அன்றைய கூட்டத்தின் இறுதியில் தெரிய வரும்.
டிசம்பர் 10ம் தேதி கூட்டியுள்ள கூட்டத்தில், பிரதமருடன், நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். நிதியமைச்சருடன் நிதியமைச்ச குழுவினரும் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டம் 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியானவுடன் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சட்டசபைத் தேர்தல் முடிவைப் பொறுத்து லோக்சபா தேர்தல் தேதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் தீர்மானிக்கவுள்ளன. அதன் பிறகே இந்த பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், செலவுகள் துறை, வருவாய்த்துறை, பொருளாதார விவகாரத் துறை ஆகியவை பட்ஜெட் தயாரிப்புக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் சேகரித்து தயாராக வைத்துள்ளன.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்குகிறது. டிசம்பர் 22ம் தேதியுடன் இக்கூட்டத் தொடர் முடிவடைகிறது. எனவே இதற்குள் ஓட் ஆன் அக்கவுண்ட்டை தயாரித்து, ஒப்புதல் பெறுவது இயலாத காரியம் என நிதியமைச்சகம் கருதுகிறதாம்.
இருப்பினும் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த அரசு விரும்பவில்லை. எனவே டிசம்பர் மாத கூட்டத் தொடருக்குள்ளாகவே நிதி தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்து விட அரசு விரும்புவதாக தெரிகிறது.
எனவே பிரதமர் தலைமையிலான கூட்டத்தின் முடிவைப் பொறுத்தே தேர்தல் எப்போது வரலாம் என்பது தெளிவாகத் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications