
'இன்னுயிரை' தர முன் வருவார்களா நமது அரசியல்வாதிகள்?

மும்பை: தீவிரவாதிகளை எப்படியெல்லாம் வேட்டையாடுவது என்பது குறித்து என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் தீவிரமாக யோசித்து, நடவடிக்கையில் இறங்கிக் கொண்டிருக்கையில், அதற்கு குந்தகம் விளைவிப்பது போல அவற்றை அப்படியே லைவ் ரிலே செய்யும் டிவி நிறுவனங்கள் மற்றும் என்.எஸ்.ஜியின் உத்திகளை விலாவாரியாக பகிரங்கமாக விளக்கிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளால் ராணுவமும், என்.எஸ்.ஜியும் நொந்து போயுள்ளன.
மும்பை தீவிரவாதத் தாக்குதலிலிருந்து மக்களையும், நகரத்தையும் மீட்கும் முக்கியப் பணியில் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களும், உள்ளூர் போலீஸாரும், ஏராளமான தொண்டு நிறுவனத்தினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இந்த முயற்சிகளுக்கு பெரும் குந்தகமாக டிவி நிறுவங்களின் லைவ் ரிலேக்கள் அமைந்துள்ளன. கூடவே ஓசியில் பப்ளிசிட்டி தேடும் அரசியல்வாதிகளும் வந்து சேர்ந்துள்ளனர்.
நமது படைகள் எப்படியெல்லாம் கமாண்டோ வீரர்களை அனுப்பி மீட்க முயற்சி செய்கிறது என்பதை உள்துறை அமைச்சர் விலாவாரியாக டிவியில் நேரடியாக பேட்டி கொடுக்கிறார். இதைப் பார்த்து ஹோட்டலுக்கு உள்ளே பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எப்படியெல்லாம் தப்பலாம் என்பது குறித்து தெளிவாக தெரிய வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
உள்ளே இருந்து கொண்டே வெளியே நடப்பவற்றை வெகு எளிதாக அவர்களால் அறிந்து கொள்ள நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டுள்ளோம்.
டிவி சானல்களுக்கு இந்த நேரத்தில் ஒரு முக்கிய வேண்டுகோள். மீட்பு முயற்சிகளை தயவு செய்து நேரடியாக ஒளிபரப்பு செய்யாதீர்கள்.
இதனால் யாருக்கு அதிகம் பாதிப்பு? தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கிற என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுக்குத்தான். அவர்களது கடமையை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்.
எல்லாம் முடிந்த பின்னர் நிச்சயம் கமாண்டோ படையினர் தாங்கள் எப்படி செயல்பட்டோம், எப்படி மீட்டோம் என்பதை டிவிகள் மூலம் சொல்லத்தான் போகிறார்கள். அதை திரும்பத் திரும்பக் காட்டி, கூடவே விளம்பரதாரர்களையும் நிறையப் பிடித்து வருவாயையும் ஈட்டிக் கொண்டே மக்களுக்கு டிவி நிறுவனங்கள் நடந்ததைச் சொல்லலாம்.
நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ள அனைவருக்கும் விருப்பம்தான். ஆனால் முதலில் ராணுவத்தையும், என்.எஸ்.ஜியையும் சுதந்திரமாக செயல்பட விட வேண்டுமல்லவா. அவர்களது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தித் தரக் கூடாதல்லவா.
ஆனால் நமது அரசியல்வாதிகள் இதற்கு பெரும் இடையூறாகவே இருக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக தாங்கள் செயல்படுவதில்லை என்பதை அவர்கள் தினசரி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு அரசாங்கமும் தங்களுக்குத் தேவையான பணத்தை எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதில்தான் கவனமாக இருக்கிறது.
சுவிஸ் வங்கியில் அதிக பணம் போட்டு வைத்திருப்பதில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். யார் பெயரில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சரியாக சொல்பவருக்கு பரிசே தரலாம்.
ஆனால், பாதுகாப்புப் படையினர் குறித்து அரசுகள் அக்கறை காட்டுவதே இல்லை. அவர்களது சம்பளத்தை கூட்டுவது குறித்து ரொம்பவே தயக்கம் காட்டுகிறார்கள். தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பொம்மை வாங்கி விளையாட அவர்கள் செலவழிப்பதில்லை. மாறாக, மக்களையும், நாட்டையும் காக்க உயிரையும் கூட பணயம் வைக்கத் தயாராக இருப்பவர்கள் அவர்கள்.
தற்போதைய மும்பை சம்பவத்தில் அரசின் செயல்பாடுகளை அத்தனை மீடியாக்களும் கிழி கிழியென்று கிழித்து விட்டன. சம்பவம் நடந்து 5 மணி நேரம் கழித்தே அரசு பேசுகிறது. அதை விட முக்கியமாக, பிரதமர் பதவிக்காக காத்திருக்கும் அத்வானி எடுத்த எடுப்பிலேயே குற்றப்பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கி விட்டார்.
சில நாட்கள் அவர் பொறுமை காத்திருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை. அவருடைய விரக்தி புரிகிறது. ஆனால், அது உண்மையிலேயே நாட்டின் மீது கொண்ட அக்கறையா அல்லது வாக்காளர்களை மனதில் கொண்டு பேசினாரா என்பதை சொல்வது சற்று கஷ்டமானதுதான்.
மும்பையில் தாக்குதல் நடந்தால் குஜராத்திலிருந்து நரேந்திர மோடி ஏன் ஓடோடி வருகிறார்? அவர் குஜராத்திலிருந்தே இதுகுறித்து கருத்துக் கூறியிருக்கலாம்.
சம்பவம் நடந்த இடத்திற்கு மோடியை ஏன் மகாராஷ்டிர அரசு அனுமதித்தது? இப்படி அரசியல்வாதிகள் தேவையில்லாமல் வந்து குவிவதால் பாதுகாப்புப் படையினருக்குத்தான் பெரும் தலைவலி. அவர்களுக்கு இரண்டு வேலை - 'தேசபக்தி' மிக்க அரசியல்வாதிகளை காப்பாற்ற வேண்டும், கூடவே ஹோட்டல்களிலிருந்து தீவிரவாதிகளையும் வேட்டையாட வேண்டும். என்ன கொடுமை?
நமது டிவிக்களின் செயல்பாடுகளும் பொறுமையை ரொம்பவே சோதிக்கின்றன. ஆனால், டைம்ஸ் நவ் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, இந்த விஷயத்தில் சற்று சிறப்பாகவே செயல்படுகிறார்.
உண்மையான தேசபக்தியை அவரிடம் காண முடிகிறது. அவர் பேசும்போதெல்லாம் அவரது கண்கள் கலங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது.
அதேபோல அந்த ஷோவில் பங்கேற்கும் சுஹேல் சேத் மிகவும் புத்திசாலித்தனமாக பேசுகிறார். ஒவ்வொரு அரசியல்வாதியையும் சற்றும் தயக்கம் இல்லாமல் விளாசித் தள்ளுகிறார். உங்களது மனதில் உள்ளதை அப்படியே டிவியில் பகிரங்கமாக பேசுவதற்கு மனதில் தைரியம் வேண்டும். அதை அர்னாபும், சுஹேலும் மிகச் சரியாக செய்கிறார்கள்.
நமது அரசியல்வாதிகளுக்கு இந்த நேரத்தில் ஒரு யோசனை. தயவு செய்து டிவி கேமராவுக்கு முன்பு வரும்போது கிளிசரனை கொஞ்சம் போல கண்களில் விட்டுக் கொண்டாவது வாருங்கள். அல்லது கொஞ்சமாவது கதறி அழுது விட்டுப் போங்கள். அப்போதுதான் இன்னும் கொஞ்சம் ஓட்டுக்களை நீங்கள் பெற முடியும்.
காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் சேர்ந்து பாதுகாப்புப் படையினரை பாடாய்ப் படுத்துகின்றன. காங்கிரஸோ, தீவிரவாதத்தைத் தடுக்க போதுமான சட்டம் இருப்பதாக கூறுகிறது. அப்படியானால் அவற்றைப் பயன்படுத்தி தீவிரவாதத்தைத் தடுத்திருக்க வேண்டாமா?
பாஜகவோ எந்த தீவிரவாத சம்பவம் நடந்தாலும், உடனே, பொடாவைக் கொண்டு வாருங்கள் என்று கோஷமிட ஆரம்பித்து விடுகிறது. பொடா இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அது மாதிரியாவது ஒரு சட்டம் தேவை என்று கூறுகிறார்கள்.
திரும்பத் திரும்ப நமது அரசியல்வாதிகள் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு கேட்டு போரடித்து விட்டது. அமெரிக்க அரசியல்வாதிகள், ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால், அத்தனை பேரும் ஓரணியில் திரண்டு ஒரே குரலாக எழுப்புகிறார்கள். ஏன் நமது அரசியல்வாதிகள் அப்படி செய்யக் கூடாது?
பொருளாதார மந்த நிலை குறித்தும், குறைந்து வரும் வெளிநாட்டு முதலீடுகளைப் பற்றியும் நாம் பேசுகிறோம். இதுபோன்ற சம்பவங்களால் நாம் தளர்ந்து போய் விடக் கூடாது. இன்று பங்குச் சந்தையில் 500 புள்ளிகளாவது உயர வேண்டும். அதுதான், இந்தக் கோழைகளுக்கு நாம் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும் (கோழைகள் என்று நான் சொல்வது நமது அரசியல்வாதிகளை அல்ல, தீவிரவாதிகளை)
பிணைக் கைதிகளுக்குப் பதில் நமது அரசியல்வாதிகள் தங்களது இன்னுயிரைத் தர முன்வருவார்களா?