பிரிட்டன் துணை சபாநாயகரானார் ஸ்வராஜ் பால்

லார்ட்ஸ் சபையின் துணை சபாநாயகர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் ஆசியர் என்ற பெருமையை இதன் மூலம் ஸ்வராஜ் பால் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் இதற்கு முன்பு பல இந்தியர்கள் அமைச்சர்களாக இருந்துள்ள போதிலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் உயரிய பதவிக்கு ஒரு இந்தியர், அதுவும் ஆசிய நாட்டவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஸ்வராஜ் பால் கூறுகையில், நான் கெளரவிக்கப்பட்டுள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள கெளரவம் இது.
மகாத்மா காந்தியடிகளின் தாரக மந்திரமான ஸ்வராஜ் (சுதந்திரம்) என்பதைத்தான் எனது பெயராக எனது பெற்றோர்கள் வைத்தனர்.
இங்கிலாந்துக்கும், இங்கிலாந்தின் ஜனநாயகத்திற்கும் இந்த நியமனம் மூலம் பெருமை கிடைத்துள்ளது. எனது தாய்நாட்டுக்கும் மிகப் பெரிய கெளரவம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சிறந்த சேவையாற்ற காத்திருக்கிறேன் என்றார் பால்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் லார்ட்ஸ் சபையை நடத்தும் பெருமை இதன் மூலம் பாலுக்குக் கிடைத்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு ஸ்வராஜ் பாலுக்கு லார்ட் பட்டம் வழங்கப்பட்டது. 1983ம் ஆண்டு இந்தியாவின் பத்ம பூஷன் விருது கிடைத்தது. 77 வயதாகும் ஸ்வராஜ் பால், இங்கிலாந்தில் வசித்து வரும் மிகப் பெரிய இந்திய வம்சவாளி தொழிலதிபர்களில் ஒருவராவார்.
கேபரோ என்ற பன்னாட்டு நிறுவனத்தை நிறுவியர். கேபரோ, இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீல் மற்றும் பொறியியல் குழுமம் ஆகும். இதன் வருடாந்திர வருமானம் 1.5 பில்லியன் பவுன்டுகள் ஆகும்.


Click it and Unblock the Notifications
