For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்போது எதற்கு இடைத் தேர்தல்?-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இடைத் தேர்தலுக்கு இது நேரமி்ல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:

எப்போதுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ மறைந்து விட்டால், காலியான அந்த இடத்துக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் வரும். அப்படி வரும் இடைத்தேர்தலில்; இறந்துபோன உறுப்பினரின் கட்சியை சேர்ந்தவர்கள்தான் போட்டியிடுவார்கள்.

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வால்மீகி என்ற காங்கிரஸ் உறுப்பினர் காலமாகிவிடவே; முதலில் உறுப்பினராக இருந்தவர்களுக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து, அதன்படி அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அருணகிரி என்பவர் போட்டியிட வாய்ப்பளித்து, அதற்கான தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

ஆச்சரியம் என்னவென்றால், அப்போது அதிமுக- காங்கிரஸ் தேர்தல் உறவு கிடையாது. அப்படியிருந்தும் ஒரு உறுப்பினர் இறந்தால்; காலியாகும் அந்த இடத்தை அந்த கட்சியின் உறுப்பினரே நிரப்ப வேண்டும் என்று ஒரு புதிய கொள்கையை எம்.ஜி.ஆர். வகுத்தார்.

தன் குருநாதர் வகுத்த வழியில் அம்மையார் ஜெயலலிதா நடைபோடுகிறார் என்பதை நம்பிட வேண்டுமானால்; திருமங்கலத்தில் வீர இளவரசன் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதற்கு; அவர் எந்தக் கட்சி உறுப்பினராக இருந்து மறைந்து போனாரோ; அந்தக் கட்சி உறுப்பினர் ஒருவரைத்தான் வேட்பாளராக நிறுத்தி, அவர் வெற்றிக்காகப் பாடுபட்டிருக்க வேண்டும்.

அதுதான் இடைத் தேர்தல்களுக்கு என எம்.ஜி.ஆர்.ரே வகுத்த வழி. ஆனால் இந்த அம்மையாரோ; திருமங்கலம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற மதிமுக வேட்பாளர் வீர இளவரசன் மறைந்ததும்; அந்த தொகுதி இடைத் தேர்தலில் மதிமுகவே போட்டியிடட்டும் என்று பெருந்தன்மையோடு அறிவிக்காமல்; அந்தத் தொகுதியில் மதிமுக நிற்பதற்கும் இடங்கொடுக்காமல்; அங்கே அதிமுக தான் நிற்கும் என்று அறிவித்து விட்டதோடு அதற்கான தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டுவிட்டார்.

இப்போது தேர்தல் எதற்கு?:

மழை, வெள்ளம், புயல் எல்லாம் வந்து; மக்கள் பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் திடீரென்று 2 மாதத்திற்குள் இடைத்தேர்தல் என்றால்; ஓர் அரசின் நிர்வாகத்திற்கு எவ்வளவு நெருக்கடி, எனவே வசதிப்படுமா? என்றெல்லாம் கூடக் கலந்து பேச வாய்ப்பின்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிறதே; அத்துடன் சேர்த்து இந்த திருமங்கலம் இடைத்தேர்தலை வைத்துக் கொண்டால் என்ன; என்று கேட்பதற்கும் முடியாமல்- நாடாளுமன்ற தொகுதிகள்; புதிதாக அமைக்கப்பட்டும், பிரிக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டிருப்பதால், அப்படி நாடாளுமன்றத் தேர்தலுடன் இந்த இடைத்தேர்தலை சேர்த்தால் வீண் குழப்பங்கள் நிர்வாகத் துறையில் ஏற்படும் என்பதை நாம் உணராமல் இல்லை.

அதற்காக இப்படி விடியக் கல்யாணம்; பிடிடா பாக்கை!' என்ற பழமொழியை நினைவூட்டுகிற அளவுக்கு, இவ்வளவு அவசரமாக இந்தத் தேர்தல் வரவேண்டியதின் அவசியம்தான் என்னவோ?.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பட்ஜெட் படிக்கப்பட்டு, அதில் சலுகைகளோ, புதிய திட்டங்களோ அறிவிக்கப்பட்டால் அது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முரணாகி விடக்கூடும் என்பதால், பட்ஜெட் அறிவிப்புக்கான பணிகளும், அதற்கு முன்னர் அவையில் படிக்க வேண்டிய ஆளுநர் உரையும் சட்டமன்றத்தில் நிறைவு பெற்றிட வேண்டியுள்ளது.

ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்...:

இந்த நெருக்கடிகள் நிறைந்த நிலையிலே திருமங்கலம் இடைத்தேர்தல் இவ்வளவு விரைவிலா என்ற கேள்வியும், ஏன் அவசரம் என்பதற்கான காரணமும் புரியாமல் இல்லை.

உடன்பிறப்பே, பார்த்தாயா; ஓர் இடைத்தேர்தல் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்று ஆளுங்கட்சியும், அப்படி அறிவித்ததை எதிர்பார்த்து இருந்ததுபோல் எதிர்க்கட்சியும், இருப்பதற்கு நம்ப முடியாத ஒரு காரணம் இருக்கத்தான் வேண்டும்.

நாடாராளுமன்றத் தேர்தல் வருவதற்கு முன்பு இந்தத் திருமங்கலம் இடைத்தேர்தலில் ஜெயித்துவிட்டால் அந்த உற்சாகம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தம்மை வெற்றி முகட்டில் உட்கார வைக்கும் என்று ஜெயலலிதா கணக்குப் போட்டு; கணக்கை கணக்காகச் செய்து முடித்துவிட்டுக் களிப்பிலாழ்ந்திருக்கிறார் போலும்.

உடன்பிறப்பே, உனக்கு நினைவிருக்கிறதா?, தமிழகத்தில் மொழிப்போர் நடந்துமுடிந்த பிறகு; பாளைச் சிறையில் நானும் மற்றும் பல சிறைகளில் கழக உடன்பிறப்புகள் ஆயிரக்கணக்கினரும் சிறையை விட்டு வெளிவராத சமயத்தில்; தர்மபுரியில் ஓர் இடைத்தேர்தல் - அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று விட்டது. அடடே, அவ்வளவு பெரிய மொழிப்போருக்குப் பிறகும்; இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற முடியவில்லையே என்று எல்லோரிடமும் ஓர் ஏக்கம் பிறந்தது.

ஆனால், காங்கிரஸ் நண்பர்களோ அந்த தர்மபுரி இடைத்தேர்தலின் வெற்றி; 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு அச்சாரம் என்றும், அறிகுறி என்றும் நம்பினார்கள்.

ஆனால், தர்மபுரி இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி அளிக்காத மக்கள்; அதைத் தொடர்ந்து 1967ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுகவைத்தான் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைக்கிற அளவுக்கு வெற்றியை வழங்கினார்கள்; என்பதைக் கடந்தகால வரலாறு சுட்டிக்காட்டத் தவறவில்லை என்ற உண்மையை மறந்து விடக்கூடாது!.

மறவாமலும் மன திடத்துடனும் பாகு மொழி, பசப்பு மொழி பேசிப் பாராட்டிய கட்சிகள்கூட எஸ்மா', டெஸ்மா' சட்டங்களை நீட்டியவர்களை நோக்கி உஜார் உஜார்!'' என்று உரத்த குரல் எழுப்பியதை விடுத்து; இப்போது உமிழ்ந்த வாய்க்கே சர்க்கரை என உரைத்துக் கொண்டு; நம்மைப் பின்னிருந்து குத்திக் கிழித்திட முன்வருகிறார்கள் என்றால்;

அத்தகையோர்க்கு; நன்றிக்கும் அவர்களுக்கும் எவ்வளவு தொலைவு? நட்புக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? என்று நெஞ்சு கொதித்திடக் கேட்கத்தான் தோன்றும் உனக்கு!.

அன்பு உடன்பிறப்பே, அண்ணா தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் முக்கணைகளையும் பயன்படுத்திப் பலன் காண, பகைமுகாம் நோக்கிப் பணியாற்றிடக் கிளம்புக! என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X