For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைவர்களின் 'அரசியல்' புத்தாண்டு வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டையொட்டி தலைவர்கள் பலரும் தங்கள் அரசியலையும் கலந்து வாழ்த்து செய்திகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:

சமத்துவம், மதச் சார்பின்மை..கருணாநிதி:

முதல்வர் கருணாநிதி அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தியில்,

புத்தாண்டு 2009 பிறக்கிறது! "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'' என்பதைக் கொள்கை நெறியாக நமக்கு வகுத்துத் தந்த மாமேதை பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது, இந்தப் புத்தாண்டு!.

இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக!.

சாதி மதங்களின் பெயரால் தீவிரவாதச் செயல்கள் எந்தவொரு பகுதியிலும் தலையெடுப்பதை முற்றிலும் தடுத்திடுவோம் எனும் உணர்வோடு 2009ம் ஆண்டினை வரவேற்போம்!.

சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச் சார்பின்மை, அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் தமிழகம் நிலையான, வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என இந்தத் திருநாளில் உறுதியேற்போமாக! என்று கூறியுள்ளார்.

குடும்ப ஆட்சி ஒழியட்டும்...ஜெ:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்த்து செய்தியில்,

மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வறுமை நீங்கி வளம் பெறவும், இருள் நீங்கி ஒளி பிறக்கவும், குடும்ப ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலரவும், தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு அமைதி தழைக்கவும், அனைவரின் வாழ்விலும் மந்தம் அகன்று மந்தகாசம் பொங்கவும், இந்த புத்தாண்டு திருநாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

இந்த புத்தாண்டு மக்கள் அனைவருக்கும் எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்குகிற ஆண்டாக விளங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இலங்கையில் விடியல் வரட்டும்.. வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் துயரங்கள் நீங்கி, இலங்கையில் துன்பக்கடலில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு உரிமை வாழ்வும், விடியலும் பூக்கும் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமாதானம்... சமாதானம்...தங்கபாலு:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள செய்தியில்,

மக்கள் நலன் எனும் மாபெரும் சக்தி நாடெங்கும் ஓங்கி உயர்ந்திட அமைதி, சமாதானம், மத நல்லிணக்கம் மிளிர்ந்திட அனைவருக்கும் ஒன்றுப்பட்டு உழைப்போம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உலகெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் இன சகோதர, சகோதரிகளுக்கும் வழங்கி மகிழ்கிறோம்.

திருப்பு முனை ஏற்படட்டும்...விஜயகாந்த்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில்,

2009ம் ஆண்டு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஆண்டாகும். நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டில் தான் வரவுள்ளது. தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கே சவாலாக உள்ளது. இலவச கணினி பயிற்சி, 1 லட்சம் பேருக்கு வேலை போன்றவற்றை செயலாக்கி வருகிறோம்.

தேமுதிக நேர்மையானவர்களை கொண்டு நல்ல அரசியல் நடத்த பாடுபட்டு வருகிறது. இந்த புத்தாண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைய வேண்டுமென்ற அடிப்படையில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் புத்தாண்டு-உரிமை தந்த ஆண்டு...கி.வீரமணி:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில்,

பிறக்கும் 2009ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை (தை முதல் நாளை) தமிழர்கள் முதன்முதல் கொண்டாடிட உரிமை பெற்று தந்த ஆண்டு. தன்மானம், தன்னிறைவு, தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுக்கும் ஆண்டாகவும் அமையும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருளாதார சவால்கள்.. தீய சக்திகள்...ப.சி:

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தியில்,

2008ம் ஆண்டின் தொடக்கம் முதல் பொருளாதாரச் சூழ்நிலை உலகத்திற்கே ஒரு சவாலாக இருந்ததை நாம் மறக்க முடியாது.

பொருளாதார சவாலை நாம் எதிர்கொண்ட வேளையில் சில தீய அந்நிய சக்திகள் இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டன. இந்த சவாலையும் எதிர்கொண்டு இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அமைதியான, வலிமை பாரதம் உருவாக 2009ம் ஆண்டும், தொடர்ந்து வரும் ஆண்டுகளுக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக தலைமையில் அணி திரள்வோம்..திருமா:

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில்,

உழைக்கும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்வரும் 2009ம் ஆண்டையும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். தமிழீழம், தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, ஆதரவான சக்திகள் ஒன்று சேர்ந்து திமுக தலைமையில் அணி திரள இந்த புத்தாண்டு ஏதுவாக அமைந்திட வேண்டுமென எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X