கர்த்தரின் 'அருளோடு' பிரசாரம் செய்யும் சரத்குமார்!
மதுரை: திருமங்கலத்தில் இன்று சர்ச்சிலிருந்து பிரசாரம் தொடங்கிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், கர்த்தரின் அருளோடு பிரசாரத்தைத் தொடங்குவதாக கூறினார்.
இன்று காலை சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபனை ஆதரித்து திருமங்கலம் குட்ஷெப்பர்டு தேவாலயத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கினார் சரத்குமார்.
அப்போது அவர் பேசுகையில், கர்த்தரின் அருளோடு இன்று பிரச்சாரத்தை துவக்கியுள்ளேன். அனைவரும் ஒன்றே என்பதுதான் நமது கொள்கையாகும். எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஜாதி, மத வேறுபாடில்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
மக்களுக்கு நல்லது செய்வோம், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக மாறவும் இந்த முறை எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.
தமிழகத்தில் அமைதி நிலவவும், ஏற்றத்தாழ்வுகள் இன்றி ஜாதி, மதங்களைக்கடந்து ஒரே குடும்பமாக மாற இறைவன் முன்னிலையில் நாம் அணி சேருவோம்.
அதனால்தான் இன்று தேவாலயத்துக்கு முன்பாக பிரச்சாரத்தை துவக்கி களத்தில் இருக்கிறோம். எங்களுக்கு வெற்றிக் கனியை ஈட்டித்தாருங்கள். இதுவே தொண்டர் களின் நோக்கமாகவும், மக்களின் எண்ணமாகவும் இருக்க வேண்டும்.
இந்த முறை திருமங்கலம் தொகுதிக்கு சேவையாற்றும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தால் இந்த தொகுதியை மிகவும் பிரகாசமான தொகுதியாக மாற்றித்தருவோம் என்ற உறுதியை உங்களுக்கு தருகிறேன் என்றார் அவர்.
அதேபோல, சரத்குமாரின் மனைவியான நடிகை ராதிகா, திருமங்கலத்தில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி அலுவலகத்திலிருந்து பிரசாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications