முறிந்தால் ஏகடியமா?-திமுக மீது வரதராஜன் தாக்கு
சென்னை: தோழமை இருந்தால் ஒரு பேச்சு, முறிந்தால் ஏளனம், ஏகடியம் என்பது திமுகவுக்குப் புதிதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலி்ல் மத்தியில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையில், இல்லாத ஒரு மாற்று அரசு அமையப் பெறுவதற்கான முயற்சியில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட மார்க்சிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு போட்டியிடுகிற திமுகவிற்கு எதிராக அதிமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சி களம் நிற்கிறது.
இது அகில இந்திய அளவில் இன்று உருவாகியுள்ள புதிய அரசியல் தலைமையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு என்பதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் திமுக தலைமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிரான வசைமாரிகளைப் பொழிவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதிதான் பழைய ஞாபகம் இல்லையோ என்ற முரசொலி ஏட்டின் முகப்புக்கட்டுரை.
அரசியலில் நினைவுகள் மறையாமலிருக்கலாம். ஆனால் நிலைமைகள் மாறுவதுண்டு. மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் முடிவுகள் எடுக்க வேண்டிய பல தருணங்கள் எல்லாக் கட்சிகளுக்கும் ஏற்படுவதுண்டு. இந்த வகையில் சில பழைய ஞாபகங்களை நினைவு கூர வேண்டியுள்ளது.
1967ல் அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகக் களம் கண்டு தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றிய திமுக, அதே சட்டமன்றத்தின் ஆயுள் காலத்தையே சுருக்கிக் கொண்டு, 1971ல் காங்கிரஸோடு, கரம் கோர்த்துத் தேர்தலை சந்தித்தது. 1975 வரையிலான திமுக ஆட்சியில் தமிழகத் தொழிலாளி வர்க்கம் எண்ணற்ற அடக்குமுறைகளை சந்தித்தது.
சிம்சன், எம்ஆர்எப், நெய்வேலி, வால்பாறை என பல போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவேன் என்று இருமாப்போடு பேசியவர்தான் இன்றைய முதலமைச்சர்.
வி.பி.சிந்தன், ஹரிபட், பரமேஸ்வரன், குசேலர், ஆகிய நால்வரையும், இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததும் அவரே.
ஆனால் 1976ல் அவசர கால நிலைமையை ஆதரிக்காத காரணத்தால், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி திமுக அரசைக் கலைத்தார். அப்போது பழைய ஞாபகங்கலையெல்லாம் ஒதுக்கி வைத்துத்தான் மார்க்சிஸ்ட் கட்சி, திமுக ஆட்சிக் கலைப்பை எதிர்த்துக் கண்டனம் முழங்கியது. 1977மக்களவைத் தேர்தலிலும் திமுகவுடன் தோழமை உறவு கொண்டது.
ஆனால் 1976ல் ஆட்சிக் கலைப்பை நிகழ்த்திய அதே இந்திரா காந்தியை, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்றழைத்து மீண்டும் அரசியல் உறவு கொண்டது திமுக தலைமை. அப்போது அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கடமையை நிறைவேற்றியது மார்க்சிஸ்ட் கட்சி.
1999ல் தோழர் அருணன் எழுதிய தமிழக சீர்திருத்த வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர், தான் பெரியாரையும், அண்ணாவையும் சந்தித்திராவிட்டால், ஒரு கம்யூனிஸ்டாகவே மாறியிருப்பேன் என்று நெஞ்சம் நெக்குருகப் பேசியதும் பழைய ஞாபகம். அடுத்த நாளே பாஜக உறவை நாடிப் பறந்து சென்றதும் மறக்க முடியாத நினைவல்லவா?
1992 பாபர் மசூதி இடிப்பு, அது தொடர்பான கரசேவை, பற்றியெல்லாம் இன்று நினைவூட்டுகின்ற திமுக தலைமை, அதற்குப் பிறகுதான் 1999 முதல் 2004 தொடக்கம் வரை பாஜக அணியில் இணைந்திருந்தது. வாஜ்பாய் அமைச்சரவையில், அங்கம் வகித்தது. சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக குஜராத்தில், நரேந்திர மோடி மிகக் கொடூரமான இனப்படுகொலையை அரங்கேற்றியபோது கூட மனசாட்சிக்கு எந்த உறுத்தலும் இல்லாமல் திமுக மத்தியில் ஆட்சியில் நீடித்தது.
எனினும் 2004ல் வகுப்புவாத சக்திகளை முறியடிக்க வேண்டிய மிகப் பெரிய சவால் எழுந்து நின்றபோது வாஜ்பாய் அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறியபோது, பழைய ஞாபகங்களைத் தள்ளி வைத்து விட்டுத்தான் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் தோழமை உறவு கொண்டது.
கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் சுர்ஜித் திமுக தலைவரை சந்தித்தபோது, கடந்த கால நடப்புகளை விட்டுத் தள்ளுங்கள். தேசத்தை இப்போது சூழ்ந்துள்ள பேரபாயத்தை எதிர்கொள்ள உங்கள் ஒத்துழைப்பை நாடி வந்துள்ளேன் என்று சொல்லித்தானே கை குலுக்கினார். அது மட்டும் பாந்தமாக இருந்தது, பழைய ஞாபகம் குறுக்கிடவில்லை.
1996-98 காலகட்டத்தில் தேவ கவுடா அமைச்சரவையிலும், குஜ்ரால் அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றது. 1996 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுடன் தோழமை கொண்டு தேர்தலை சந்திக்கவில்லை என்றாலும், அகில இந்திய அளவில் தேசிய முன்னணி ஆட்சி அமைய மார்க்சிஸ்ட் கட்சி பாடுபட்டது. வெளியிலிருந்து ஆதரவை நீடித்தது.
ஜெயின் கமிஷன் அறிக்கையை சாக்கிட்டு குஜ்ரால் அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் வெளியேற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை நிபந்தனை விதித்தபோது, மற்ற சில கட்சிகள் ஊசலாடிய போதும், மார்க்சிஸ்ட் கட்சி அதை உறுதியாக நிராகரித்தது. ஆறாண்டுகள் கழித்து, 2004ல் தி்முக காங்கிரஸோடு உறவு கொண்டபோது, ஜெயின் கமிஷனின் பழைய ஞாபகம் தடையாக இருக்கவில்லையே.
தோழமை இருந்தால் ஒரு பேச்சு, முறிந்தால் ஏளனம், ஏகடியம் என்பது திமுக தலைமைக்குப் புதிதல்ல என்ற ஞாபகம் நமக்குண்டு. கம்யூனிஸ்டுகளை வளர விடாமல் பார்த்துக் கொள்கிறோம் என்று பூரிப்போடு சொன்னதும், நாய்க் கவிதை தீட்டிய நாகரீகமும், திமுக தலைமைக்கு மொத்த குத்தகை போலும்.
திருமங்கலம் இடைத் தேர்தலோ, அதற்குப் பின்னரோ, அரசியல் பிரச்சினைகளின் மீதான ஆரோக்கியமான விவாதம் நடத்துவதே மார்க்சிஸ்ட் கட்சியின் வழி. அண்ணா வலியுறுத்திய கண்ணியமும் அதே வழியில் கடைப்பிடிக்கப்பட்டால் நல்லது என்று கூறியுள்ளார் வரதராஜன்.
சாலை மறியல்
இதற்கிடையே, குடிமனைப்பட்டா வழங்கக்கோரி தமிழகம் முழுவதும், மாநில அரசு அலுவலகங்கள் முன்பு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் என்.வரதராஜன் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications