திருமங்கலத்தில் மிக அமைதியான வாக்குப் பதிவு!!

Subscribe to Oneindia Tamil

Tirumangalam candidates
திருமங்கலம்: வழக்கத்திற்கு மாறாக எந்த வன்முறையும் இல்லாமல், திருமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் மிக மிக அமைதியாக நடந்து முடிந்தது.

அங்கு 75 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

திருமங்கலம் தொகுதி சட்டசபை உறுப்பினர் வீர. இளவரசனின் மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திமுக சார்பில் லதா அதியமான், அதிமுக சார்பில் முத்துராமலிங்கம், தேமுதிக சார்பில் தனப்பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர்.

டிசம்பர் 15ம் தேதி பிரசாரம் தொடங்கியது. தொடக்கம் முதலே சினிமாவைப் போன்று அதிரடி நிகழ்வுகளுடன் நடந்து வந்த பிரசாரம், ஜனவரி 7ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.

வாக்காளர்கள் ஆர்வம்..

இதையடுத்து இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவின்போது ஏராளமான வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களிக்க ஆரம்பித்தனர்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக அனைத்துக் கட்சி பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு வந்து வைத்த வாக்குச்சாவடி அதிகாரிகள், ஒவ்வொரு வேட்பாளரின் பெயருக்கு முன்பு உள்ள பொத்தானையும் அழுத்தி மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டினர்.

அனைத்து பூத் ஏஜென்டுகளும் திருப்தி தெரிவித்த பின்னரே அந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு வைக்கப்பட்டன.

26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 190 வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவத்தினர், காவல்துறை உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.

பதற்றமான 105 வாக்குச் சாவடிகள்:

190 வாக்குச்சாவடி களில் 105 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தல் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், தவிர 130 தேர்தல் சிறப்பு பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

வாக்குப் பதிவின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வாக்குச் சாவடிகளில் வீடியோ எடுக்கப்பட்டது.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,55,647. இதில் ஆண்கள்-76,726, பெண்கள்-78,921.

12 கம்பெனி பாதுகாப்புப் படையினர்:

எட்டு கம்பெனி துணை ராணுவம், 4 கம்பெனிகள் சிஆர்பிஎப் காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தவிர தமிழக காவல்துறையினர் 2,700 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை முதலே வாக்குப்பதிவு படு விறுவிறுப்பாக நடந்தது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தைக் காண முடிந்தது.

திமுக வேட்பாளர் லதா அதியமான், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் பத்மநாபன் ஆகியோர் திருமங்கலம் நகர், அல் அமீன் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

லதா அதியமான் முதல் நபராக வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றிக்கனியை முதல்வர் காலடியில் சமர்ப்பிப்பேன் என்றார்.

கலெக்டர் ஆய்வு:

வாக்குச் சாவடிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சீதாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தபடி இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது. எந்தவிதப் பிரச்சினையும் இதுவரை இல்லை.

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தொகுதியில் வெளியூர்க்காரர்கள் தங்கியிருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நரேஷ் குப்தா முகாம்:

தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திருமங்கலத்திலேயே முகாமிட்டு வாக்குப் பதிவை நேரடியாக கண்காணித்தார். பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் அவர் சென்று பார்வையிட்டார்.

வாக்குப்பதிவு சதவீதம் குறித்து குப்தா கூறுகையில், திருமங்கலத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

70 முதல் 75 சதவீதம் வரைக்கும் வாக்குப்பதிவு நடந்திருக்கலாம். இருப்பினும் துல்லியமான வாக்குப்பதிவு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

அதிமுக தொண்டருக்கு கத்திக்குத்து:

எஸ்.புளியங்குளம் கிராமத்தில் வாக்களிக்க பணம் வாங்க மறுத்த அதிமுக தொண்டர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

வெளியூர்க்காரர்கள் வெளியேற்றம்:

அகத்தாபட்டி என்ற கிராமத்தில் தங்கியிருக்கும் வெளியூர்க்காரர்களை வெளியேற்ற அங்கு துணை ராணுவப்படையினர் விரைந்தனர். வெளியூர்க்காரர்களை கிராம மக்களே பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே, திருமங்கலம் தொகுதியை வலம் வந்த 6 திமுகவினர் உள்ளிட்ட 7 வெளியூர்க்கார்கள் கைது செய்யப்பட்டனர். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த தேமுதிக தொண்டர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் கூடக்கோவில் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.

பெண்கள், வயதானோர், உடல் ஊனமுற்றோர் என பல்வேறு தரப்பினரும் படு ஆர்வமாக வாக்களித்தனர்.

தங்களது வாக்குகளை கள்ள ஓட்டு போட்டு விடக் கூடாது என்ற ஆர்வத்தில் காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

திமுக-மதிமுக மோதல், தடியடி!:

இதற்கிடையே மாவிலிப்பட்டி என்ற கிராமத்தில் திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் மூண்டது. அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

திருமங்கலம் ஒன்றிய மதிமுக செயலாளர் மாயன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் முனியாண்டி ஆகியோர், தங்களது மோட்டார் சைக்கிளில், மாவிலிப்பட்டிக்கு வந்தனர். ஆனால் அவர்களை கிராம எல்லையிலேயே தடுத்து நிறுத்திய திமுகவினர், உள்ளே வரக் கூடாது என்று தடுத்தனர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. சரமாரியாக இரு தரப்பினரும் அடித்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

3 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டனர்.

மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவுக்கு வந்தது. மிக மிக அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்திருப்பது, திருமங்கலம் தொகுதி மக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.

12ம் தேதி வாக்கு எண்ணிக்கை ..

வாக்கு எண்ணிக்கை வரும் 12ம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+