திருச்சி பெண் எரிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: தோழியை எரித்துக் கொன்ற காதலி-காதலன்

Subscribe to Oneindia Tamil

Vasanthi with Venkatesh
திருச்சி: திருச்சியில் மர்மமான முறையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி நித்யா வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களது காதலுக்காக நித்யாவை எரித்துக் கொன்றதாக அவரது தோழி வசந்தியும், காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் வசந்தி (20). பி.எஸ்சி. இறுதியாண்டு மாணவி. இவரது வகுப்புத் தோழி நித்யா.

கடந்த மாதம் 26ம் தேதி சுப்பிரமணியன், தனது மகள் வசந்தி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தெரிவித்தார். போலீசாரும் வசந்தி வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்து விசாரணையை முடித்து விட்டனர்.

இதனிடையே, நித்யாவின் தாயார் மல்லிகா, கடந்த 6ம் தேதி முதல் தன் மகளைக் காணவில்லை என்று போலீசில் புகார் செய்திருந்தார்.

இந் நிலையில், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட வசந்தி, தனது காதலன் வெங்கடேசுடன் திடீரென திருச்சி கண்டோன்மெண்ட் போலீசில் ஆஜரானதால், இறந்த பெண் யார்? என்ற கேள்வி எழுந்தது.

வசந்தியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது வசந்தியின் வீட்டில் இறந்து கிடந்தது நித்யாதான் என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

நித்யா எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரைக் கொன்றது யார்? என்பதை கண்டுபிடிக்க வசந்தி, அவரது கணவர் வெங்கடேசன் மற்றும் வசந்தியின் பெற்றோரையும் பிடித்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. வசந்தியும், வெங்கடேசனும் சேர்ந்துதான் நித்யாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டு நாடகமாடி இருப்பது தெரிய வந்தது.

சம்பவம் நடந்த அன்று நித்யாவை தனது வீட்டுக்கு வசந்தி வரவழைத்திருக்கிறார். பின்பு வசந்தியும், காதலர் வெங்கடேசனும் அவருக்கு தூக்க மாத்திரை கலந்த பாலை கலந்து கொடுத்துள்ளனர். இதனால் மயங்கிய நிலையில் கிடந்த நித்யாவை குளியல் அறைக்குள் இழுத்துச் சென்று மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொன்றுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டது, வசந்தி என மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக நித்யாவின் உடலை எரிப்பதற்கு முன் அவர் அணிந்திருந்த உடைகளை அகற்றி அவற்றை வசந்தி அணிந்து கொண்டு தனது உடைகளை நித்யாவிற்கு அணிவித்து இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

பின்னர் யாருக்கும் தெரியாமல் வசந்தியும், காதலன் வெங்கடேசும் தலைமறைவாகிவிட்டனர். வீட்டில் இறந்து கிடந்தது தனது மகள் என சுப்பிரமணியம் நினைத்துவிட்டார்.

திரைப்படங்களில் வருவதையும் மிஞ்சுவதைப் போன்ற இந்த பயங்கர செயலில் ஈடுபட்ட வசந்தி, வெங்கடேசனை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸாரிடம் வசந்தி அளித்த வாக்குமூலத்தில், நித்யாவும், நானும் நெருக்கமான தோழிகள். பொதுவான விஷயங்களை ருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வோம். வெங்கடேசனுக்கும் எனக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு காதல் ஏற்பட்டது. எங்களது காதல் விவகாரம் தோழி நித்யாவிற்கு நன்கு தெரியும்.

நானும் வெங்கடேசனும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ திட்டமிட்டோம். அதற்கு எனது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் பதிவு திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பிறகும் அவரவர் வீட்டிலேயே வசித்தோம். நாங்கள் திருமணம் செய்து கொண்டது எனது பெற்றோருக்கு தெரியாது.

இந் நிலையில் எங்களது ரகசிய திருமணத்தை பற்றி எனது பெற்றோரிடம் சொல்லி விடுவேன் என நித்யா என்னை மிரட்டி வந்தாள். இது எனக்கு பெரிய தலைவலியாக இருந்தது. தவிர, வெங்கடேசனுடன் வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவியாக வாழ்ந்தால் குடும்ப மானம் போய்விடும், எனது அண்ணன்களின் திருமணமும் தடைபட்டு விடும் என நினைத்தேன்.

எனவே நித்யாவின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரை கொல்ல முடிவு செய்தேன். யாரும் இல்லாத நேரத்தில் எனது வீட்டுக்கு நித்யாவை வரவழைத்து எரித்துக்கொன்று விட்டால் இறந்தது நான் (வசந்தி) என எல்லோரும் முடிவு செய்து விடுவார்கள் என நினைத்து ஒரு சதித்திட்டம் தீட்டினேன்.

கர்ப்பமாக இருந்த நித்யா...:

டிசம்பர் 26ம் தேதி மதியம் கல்லூரியில் மதிய உணவு இடைவேளையின்போது நித்யாவை சந்தித்து பேசினேன். அப்போது நித்யா, நான் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன். என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால், உனது காதல் விவகாரத்தையும், பதிவு திருமணம் செய்து கொண்டது பற்றியும் உன் பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துவிடுவேன் என மிரட்டினாள். இதை நான், எனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டேன்.

இன்று மாலை எனது வீட்டுக்கு வந்தால் வெங்கடேசனிடம் பேசி உன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்கிறேன் என கூறினேன். நான் கூறியதை நம்பிய நித்யா அன்று மாலை சுமார் 6 மணி அளவில் எங்கள் வீட்டிற்கு வந்தாள். வீட்டில் அப்போது என்னையும், வெங்கடேசனையும் தவிர வேறு யாரும் இல்லை.

நித்யா வீட்டிற்கு வந்ததும் தூக்க மாத்திரை கலந்த பாலை அவளுக்கு கொடுத்தோம். அதை வாங்கி குடித்ததும் அவள் மயங்கி விழுந்தாள். உடனே நித்யாவின் கழுத்தை நெரித்தோம். பின்னர் குளியல் அறைக்கு இழுத்து சென்று நித்யாவின் உடலில் மண்ணெண்ணெயும், பெட்ரோலையும் ஊற்றி தீவைத்தோம். முகம் அடையாளம் தெரியாத வகையில் எரித்தோம்.

பிறகு, வீட்டின் முன்பகுதியை பூட்டிவிட்டு பின்வாசல் வழியாக நானும் வெங்கடேசனும் அங்கிருந்து தப்பிச் சென்றோம். சேலம், கோவை, பாபநாசம் உள்பட பல இடங்களுக்கு சென்று தங்கினோம்.

நித்யாவை எரித்து கொன்று எனது வீட்டில் போட்டதன் மூலம் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கருதி என்னை எனது பெற்றோர் தேட மாட்டார்கள் என நினைத்திருந்தேன்.

ஆனால் நித்யாவை காணவில்லை என்று அவளது வீட்டில் தேடியதாலும், எனது கணவர் வெங்கடேசனை போலீசார் தேடுவதாக அறிந்ததாலும் வேறு வழியின்றி நேரில் ஆஜராக வந்தோம். எங்களை போலீசார் பிடித்து விட்டார்கள் என்று கூறியுள்ளார் வசந்தி.

வசந்தியும், வெங்கடேசனும் திடீரென ஆஜராகி நாங்கள் காதல் ஜோடி என்றும், பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறியதுமே முதலில் அவர்கள் மீது தான் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இந்தக் கொலைத் திட்டத்தை தீட்டியவர் வசந்திதான்.

போலீஸாரை திசை திருப்பும் வகையில் பல தகவல்களை கூறி நாடகமாடியுள்ளார் வசந்தி. இருப்பினும் போலீஸாரின் சந்தேகப்புள்ளி வசந்தி மீது அழுத்தமாக இருந்ததால் அவர் சிக்கி விட்டார்.

நித்யாவை எரித்து கொன்று விட்டு வசந்தி- வெங்கடேசன் ஜோடி சேலம், கோவை, திருவனந்தபுரம், பாபநாசம் என பல இடங்களுக்கு ஜாலியாக சென்றிருக்கிறார்கள். மேலும் வெளியூர்களில் இருந்தபடி வெங்கடேசன் தனது நண்பர்களுக்குப் போன் போட்டு, நானும், வசந்தியும் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கிறோம் என கூறியதும் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

வெங்கடேசனின் நண்பர்கள் மூலம் இந்த செய்தி போலீஸார் காதுகளை எட்டி விட்டது. இதையடுத்தே வெங்கடேசனை போலீஸார் தேடத் தொடங்கினர்.

இந்த வழக்கில் சரியாக விசாரணை நடத்தாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சப் இன்ஸ்பெக்டர் கலையரசி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+