For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ-விஜய்காந்த் பொங்கல் வாழ்த்து (மட்டும்)!

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இந்த நன்னாளில், அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்கட்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் என் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவர்கள் தங்களுக்கு உதவிய இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாள் பொங்கல் திருநாள்!. பயிர் விளையக் காரணமாயிருந்த பகலவனுக்கு காணிக்கை செலுத்தும்நாள் பொங்கல் திருநாள்!. உழவர்கள் வாழ்வில் ஆக்கம் பெற்று மகிழும் நாள் பொங்கல் திருநாள்!. உழைப்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் நாள் பொங்கல் திருநாள்!.

இந்த நன்னாளில், அராஜகம், வன்முறை, சுயநலம் ஆகியவை அகன்று, ஜனநாயகம் தழைத்தோங்க நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, அனைவரது வாழ்விலும் ஆனந்தம் பெருகட்டும்! அமைதி தவழட்டும்! செல்வம் செழிக்கட்டும்! என மனமார வாழ்த்தி என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்ளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல-விஜய்காந்த்:

தமிழக அரசியல் யானை காலில் மிதிபட்ட விளைநிலம் போல ஆகிவிட்டது, அதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்குரிய நாள். புதுப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள்.

இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புதுக்கரும்பு, புது மஞ்சள், புத்தாடை போன்றவற்றை கடந்த ஆண்டைப் போலவே நம்முடைய கழகத் தோழர்கள் தங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்ய கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஒரு நல்ல ஆட்சியில் தான் அமைதியிருக்கும். அப்பொழுது தான் மக்கள் விழாக் கொண்டாட முடியும். உதாரணத்திற்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்கள வெறியர்களின் ஆட்சியில் சிக்கித் தவிப்பதால் அவர்கள் எதிர் நோக்கியிருப்பது மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல. இரத்தப் பொங்கல் தான். இரு வேறு இன மக்கள் ஒரு நிலப்பகுதியில் சேர்ந்து வாழலாம்.

இல்லையென்றால் அந்நிலப் பகுதியை பிரித்துக் கொண்டு அமைதியாக வாழலாம். இதைத்தான் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் உலகம் அறிவுரையாக வழங்குகிறது. ஆனால் இலங்கையிலோ, இந்த அறிவுரையை இந்தியா கூட ஏற்காதது, தமிழ் மக்களின் சாபக்கேடு தான்.

கொழுத்த யானை தான். இருந்தாலும் மதம் பிடித்த விட்டது. வந்த இடமோ செந்நெல்லும், வாழையும், செங்கரும்பும் விளைந்துள்ள பூமி. என்னாகும் அந்த விளை நிலம் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதைப் பட்டத்து யானையாக்குவேன் என்பதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு உண்டோ?.

இன்று தமிழ்நாட்டின் அரசியல் நிலை யானைக் காலில் மிதிப்பட்ட விளை நிலம் போல் ஆகிவிட்டது. இதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சூளுரை மேற்கொள்வோம்.

பசி, பிணி, பகை நீங்கி எல்லோரும் நல்வாழ்வு பெற்றிடவும், அமைதியும், முன்னேற்றமும் தரும் நல்லாட்சி ஏற்படவும், இப்பொங்கல் புதுநாள் தமிழ்நாட்டிற்கு வழிவகுக்கட்டும் என்று தேமுதிக சார்பில் எனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து இல்லை..:

ஆனால் ஜெயலலிதா, விஜய்காந்த் இருவரும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் பொங்கல் நாள் தான் தமிழர் புத்தாண்டு என்ற அறிவிப்பை இருவரும் ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X