இலங்கையை பாராட்டும் மேனன்: தா.பாண்டியன்
கோவை: இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் இலங்கை ராணுவ தளபதியை பாராட்டியுள்ளார். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க அவர் எவ்வித பேச்சும் நடத்தவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரை சந்தித்துப் பேசிய பாண்டியன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது பல ஆண்டுகளாக நடக்கிறது. இதற்கு இந்திய அரசு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட உள்ளக் கொதிப்பையே சீமான் உள்ளிட்டோர் வெளிப்படுத்தினர்.
ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் கொடுத்த புகாரை வைத்து போலீசார் விசாரிக்காமலேயே தேச விரோதமாக பேசியதாக அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது ஜனநாயக கேலிக் கூத்து.
இலங்கை தமிழர் கொல்லப்படுவதை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சட்டசபையிலும், அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் தலைமையிலான குழு பிரத மரை சந்தித்து வலியுறுத்தியும் இதுவரை மத்திய அரசு நட வடிக்கை எடுக்கவில்லை.
காங்கிரஸ் செய்யும் தவறுகளுக்கு மத்திய அரசில் பங்கேற்றுள்ள திமுகவும் பொறுப்பேற்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலைகளை ஐ.நா.சபைக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர மேனன் இலங்கை ராணுவ தளபதியை பாராட்டியுள்ளார். தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க அவர் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. இதில் இருந்து டெல்லியில் உள்ள அதிகாரிகள் எவ்வளவு அடிமையாக உள்ளனர் என்பது தெளிவாகிறது.
இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதிலும், தமிழக மீனவர்களை பாதுகாப்பதிலும் மத்திய அரசில் உள்ளவர்கள் பேசாமல் இருக்கலாம். ஆனால் தமிழக தலைவர்கள் கண்டிப்பாக பேசியாக வேண்டும். மத்திய அரசில் பங்கு வகிக்கும் திமுக இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications