For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: பிப். 15ம் தேதிக்குள் திமுக முடிவு - கருணாநிதி

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பிப்ரவரி 15ம் தேதிக்குள் திமுக பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான சங்கத் தமிழ்ப் பேரவை சார்பில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்த முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வாழ்த்தரங்கம் நடத்தப்பட்டது. துரைமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் வரவேற்றார்.

கவிஞர் வைரமுத்து, கவிஞர் கனிமொழி எம்.பி., சுகிசிவம், இலங்கையைச் சேர்ந்த ஜெயராஜ், சுதா சேஷையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிறைவாக இரவு பத்தரை மணியளவில் முதல்வர் கருணாநிதி ஏற்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், காலையிலிருந்து 10 மணி நேரத்துக்கு மேலாக தமிழை கவிதை வடிவத்தில், உரை வடிவத்தில் சுவைக்க ஒரு அற்புதமான வாய்ப்பு எனக்கும் உங்களுக்கும் கிடைத்திருக்கிறது. இது எனக்கு பாராட்டு விழா என்று கூறப்பட்டாலும், நான் ஆற்றிய, ஆற்ற வேண்டிய பணிகளுக்காக நடைபெற்றிருக்கிற ஒரு பாராட்டு விழா. இவ்வளவு எழுச்சியோடும் சீரோடும் நடத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக மிகச் சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்கிறார்கள்.

நீங்கள் பாராட்டும் அளவு எழுத்தாளனாக, கவிஞனாக வந்திருக்கிறேன் என்றால், 16 வயதினிலே பொதுவாழ்வில் ஈடுபட்டு, பகுத்தறிவாளனாக விளங்கி, தமிழ் பற்றாளனாக வளர்ந்திருக்கிறேன். பெரியார், அண்ணா ஆகியோரை சந்தித்த காரணத்தால் சூத்திரனாக, தமிழனாக இன்று உங்களிடையே அமர்ந்திருக்கிற வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

என்னைப் போல மற்றவர்களும் தெரிந்தோ, தெரியாமலோ, திட்டமிட்டோ, திட்டமிடாமலோ, பின்னாளில் இன்னும் பலருக்கு இவரைப் போல் நாம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த பாராட்டு விழாவை நடத்தினார்கள் என்று நான் எண்ணினால் தவறில்லை.

துரைமுருகன், ஜெகத்ரட்சகன் துணை கொண்டு இந்த பணியை நிறைவேற்றியிருக்கிறார். ஜெகத்ரட்சகன் இந்த காலத்து சடையப்ப வள்ளல் போல இருந்து என்னைப் போன்றவர்களுக்கு இத்தகைய பாராட்டு விழாக்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க தமிழ்ப்பெரும் விழாவாக இருப்பதால் நானும் மகிழ்ச்சி அடைகிறேன், மொழி ஆர்வலர்கள் விழாவாக நடத்தியதை எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். நம்முடைய மொழிக்கு உரிய தகுதியை, சிறப்பை நாம் மேலும் பெற்றாக வேண்டும். தமிழ் செம்மொழி ஆவதற்கு என்ன பாடுபட வேண்டியிருந்தது.

அந்த செம்மொழி கிடைத்ததும், சோனியா காந்தி அவர்களாகவே ஒரு கடிதம் எழுதினார். இதற்கு காரணம் நமது கூட்டணி கட்சிகள் என்றாலும், இதற்கான எல்லா பெருமையும், முழு உரிமையும் பெற்றவர்கள் நீங்கள் தான் என்று எழுதியிருந்தார்.

இதனை எனது இறுதிக் காலம் வரை அல்ல, அதற்கு பிறகும் இது எனது குடும்பத்தினருக்கு கிடைத்த கவுரவம், ஒரு பட்டயம் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

நான் இந்த விழாவில் முழு மகிழ்ச்சியோடு இருக்கிறேனா என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. இங்கே நாம் தமிழுக்காக, தமிழை வளர்ப்பதற்காக விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். பக்கத்து நாட்டில் நம் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, தாயகத்தில் வாழ முடியாமல் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வருகிற காட்சியும் காண முடிகிறது.

அவர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம். இன்னும் சிறப்பாக அவர்களை வாழ வைக்க என்ன செய்யப் போகிறோம். இந்த பிரச்சினைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்க என்ன தான் செய்யப் போகிறோம்.

பாறையில் வெண்ணை உருண்டை ஓடி வர, அதனை உருகாமல் காப்பாற்ற இரு கைகளும் இல்லாதவன் பாடுபடுவது போன்ற நிலையில் நாம் இருக்கிறோம். எனவே தான் சட்டசபையில் மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்ய முடியும் என்பதும் நமக்கு தெரியும்.

இந்த பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேட சிலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு இதில் தனது கடமையாற்ற வேண்டும். விரைவில் தி.மு.க. பொதுக்குழு கூடி அடுத்த நடவடிக்கை பற்றி யோசிப்போம் என்று கூறியிருக்கிறேன்.

அந்த பொதுக்குழு தீர்மானம் எப்படி இருக்கும் என்று கூடி விவாதித்தால் தான் நீங்களும், நாட்டு மக்களும், இலங்கையில் இனப்படுகொலை செய்பவர்களும் தெரிந்து கொள்ள முடியும்.

பிப்ரவரி 15-ந் தேதிக்குள் தி.மு.க. பொதுக்குழு கூடி தமிழ் மக்கள் வாழ்வை எப்படி நிர்ணயிப்பது, எந்த வகையில் நிர்ணயிப்பது என்று முடிவெடுத்து அறிவிப்போம்.

நாம் அனைவரும் சேர்ந்து தமிழ் இனத்தை காப்பாற்றுவோம் என்பது தான் இந்த விழாவில் நாம் ஏற்கும் சூளுரையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X