For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிசர்வ் வங்கி சொல்லியும் கடனுக்கான வட்டியைக் குறைக்காத வங்கிகள்!!

By Sridhar L
Google Oneindia Tamil News

மும்பை: பல்வேறு கடன்களுக்கான வட்டியைக் குறைக்கச் சொல்லி எத்தனைமுறை அறிவுறுத்தினாலும், வணிக வங்கிகள் காது கொடுத்துக் கேட்பதே இல்லை என கடுப்புடன் தெரிவித்துள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ்.

பண வரத்தின்மை, வாராக் கடன், லாபம் குறைவு போன்ற அனைத்து எதிர்மறை விளைவுகளுக்கும் வணிக வங்கிகள் சொல்லும் ஒரே காரணம், ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம்.

ஆனால் இப்போது அந்த ரிசர்வ் வங்கியே, தான் ஏற்கெனவே நிர்ணயித்த சிஆர்ஆர், ரெபோ ரேட், ரிவர்ஸ் ரேட் என பல்வேறு வட்டி விகிதங்களை 50 சதவிகிதத்துக்கும் மேல் குறைத்துள்ளது. ஆனாலும் வணிக வங்கிகள் அந்த அளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்காமல், ஒப்புக்கு கால் சதவிகிதம் மற்றும் அரை சதவிகிதம் என 'குறைத்தன'.

இதனால் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அறிவித்த சலுகைகள் எதுவும் சாதாரண மக்களைப் போய்ச் சேரவே இல்லை. இதுவரை 2 லட்சம் கோடி வரை மத்திய அரசு நிதிச் சலுகைகளை வழங்கியிருப்பது குறிப்பிடத்தகக்கது.

வங்கிகள் என்பவை மக்களுக்குப் பணியாற்றும் அரசின் ஒரு அங்கம் என்பதை முற்றிலும் மறந்துவிடட, வங்கி அதிகாரிகள், அவற்றை தங்கள் தனியுடைமை நிறுவனம் போலவே பாவித்து வியாபாரம்-லாபம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக ஒலிக்கத் துவங்கிவிட்டது.

சிறு வாடிக்கையர் கடன்களைத் தருவதில் கூட வணிக வங்கிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும், அப்போதுதான் மக்களிடம் பண சுழற்சி சீராக இருக்கும் என்ற நோக்கில், தகுதியுள்ள அனைவருக்கும் கேட்கும்போது மறுக்காமல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட வேண்டும் என நிதித் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பிரதமரும், அவரது பொருளாதார ஆலோசனைக் குழுவும் அனைத்து வங்கிகளுக்கும் இதுவரை 3 சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளன.

ஆனால் இன்றுவரை அவற்ற கொஞ்சமும் சட்டை செய்யவில்லை எந்த வணிக வங்கியும். நுகர்வோர் மற்றும் வணிகக் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமலேயே உள்ளன. மேலும் இதுவரை கடன் வழங்கிய நபர்களுக்கும் கூட இப்போது சூழ்நிலை சரியில்லை எனவே கடன் தர முடியாது என வணிக வங்கிகள் திருப்பி அனுப்புவதாக பிரதமருக்கும், நிதித்துறைக்கும் தொடர்ந்து புகார்கள் குவிகின்றனவாம்.

கல்விக் கடன்கள் மற்றும் வேலைவாய்ப்புக் கடன்கள் வழங்க சில கிளைகளில் முழு அளவிலான தடை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் பணச் சுழற்சி முற்றிலுமாக குறைந்துவிடும் அபாயமிருப்பதாக பொருளியல் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இத்தகைய மந்தச் சூழலில் பணத்தைக் கொடுத்துவிட்டால் அவை வராக்கடனாகிவிடும் என தங்கள் தரப்புக்கு நியாயம் கற்பித்து வருகின்றன வணிக வங்கிகள் (பொருளாதாரம் தடையின்றி முழு வீச்சில் இயங்க குறிப்பிட்ட அளவு வராக்கடனையும் அனுமதிக்க வேண்டும் என்கிறது பணவியல் கோட்பாடுகள்).

இந்த நிலையில்தான் வங்கிகளின் இந்த பிடிவாத போக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கூறியுள்ளதாவது:

வரலாறு காணாத வட்டிக் குறைப்பை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால் ஒரு சில வங்கிகள் தவிர பெரும்பாலானவை இவற்றை முழுமையாக அமல்படுத்தவே இல்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய உண்மை.

ரிசர்வ் வங்கியின் ரெபோ ரேட் (வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு வட்டி) 9 சதவிகிதத்திலிருந்து 5.5 சதவிகிதத்துக்கு வந்துவிட்டது. ரிவர்ஸ் ரெபோ ரேட் (வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கி வசம் வைத்துள்ள உபரி நிதி) 4 சதவிகிதமாக்கப்பட்டு விட்டது. சிஆர்ஆர் (வணிக வங்கிகள் கட்டாயமாக ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய பணத்தின் அளவு)விகிதம் 9 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் கூட குறைக்கும் திட்டமுள்ளது.

ஆனால் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் இன்னும் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. ரிசர்வ் வங்கி இதுவரை அனுப்பியுள்ள எந்த சுற்றறிக்கைக்கும் வணிக வங்கிகள் கொஞ்சம்கூட ரியாக்ஷன் காட்டவில்லை.

எவ்வளவு அறிவுறுத்தினாலும் பிடிவாதமாக அமைதி காப்பதில் அர்த்தமில்லை. ரிசர்வ் வங்கி மற்றும் நிதித்துறை அளித்துள்ள சலுகைகளை மக்களுக்கு முழுமையாக வழங்கி, நாட்டில் பணச் சுழற்சியை சீராக வைத்திருக்க வணிக வங்கிகள் முன்வர வேண்டும். இதுதான் அதற்குரிய நேரம். இல்லையேல் மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடும், என சுப்பாராவ் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைகளுக்கு தனியார் வங்கிகள் கொஞ்சம் கூட மதிப்பளிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X