"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு
சென்னை: தமிழ்நாடு அரசியலில் எப்போதும் இல்லாத ஒரு புதிய விஷயமாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரன் சுப்பிரமணியத்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் இதை விமர்சித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு ஆர்எஸ்எஸ் மற்றும் காவிப் பிடிக்குள் சிக்கி வருகிறதோ என்று திமுக நிர்வாகிகளும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் இப்போது விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், திமுக தரப்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு காட்டமான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் பரவி வரும் சில போட்டோக்கள் இப்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நேரில் சந்திப்பு
அதாவது இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரன் சுப்பிரமணியத்தை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுள்ளனர். விஜய் அரசில் உள்ள மூத்த அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் காடேஸ்வரன் சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
விமர்சனம்
இதைக் குறிப்பிடும் திமுக நிர்வாகிகள் இதைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும், "அப்பட்டமாக RSS பிடியில் தமிழ்நாடு அரசு சிக்கியுள்ளதைக் காட்டுகிறது. திருப்பரங்குன்றம் ஆவணப்படம் தடை - திருவள்ளுவருக்கு காவி சாயம் - வந்தே மாதரம் பாடல் - பக்ரீத் மாடு பலியிடத் தடை - ஏராளம் ஏராளம் தமிழ்நாடு முழுமையாகக் காவிகளின் கைகளுக்குள் சென்று கொண்டுள்ளது. வரும் கார்த்திகை தீபம் காலங்களில் IUML , VCK தலைமையில் திருப்பரங்குன்றத்தில் தர்க்கா அருகில் தீபம் ஏற்றினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை" என்று விமர்சித்து வருகிறார்கள்.
என்ன நடந்தது
சமீப காலமாகத் தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் சில நிகழ்வுகள், இணையத்தில் பெரும் விவாதங்களைக் கிளப்பி வருகிறது. புதுக்கோட்டையில் மத நல்லிணக்கம் பேச முயன்ற 'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத் திரையிடலுக்குப் போலீசார் அசுர முட்டுக்கட்டை போட்டுள்ளனர். எழுத்துப்பூர்வக் காரணம் எதுவும் சொல்லாமல் வெறுமன, "மேலிட உத்தரவு" எனச் சொல்லி ஆவணப்பட திரையிடலைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இது கருத்துரிமை மீதான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. இது தவிரப் பக்ரீத் பண்டிகையின் போது மாடு பலியிடுவதில் நிர்வாகக் கெடுபிடிகள் கொடுக்கப்பட்டதாக நெட்டிசன்கள் சாடுகிறார்கள்.
சர்ச்சை
அதேபோல ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசப்பட்டது. ஆளுநர் ரவி இருந்தபோதே திருவள்ளுவருக்கு காவி சாயம் விவகாரம் வெடித்த நிலையில், இப்போது மீண்டும் அது பூதாகரமாகி இருக்கிறது. மேலும், அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications