For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக செயற்குழுவின் தீர்மானம் ராஜபக்சே கட்சி தீர்மானம் போல உள்ளது - ராமதாஸ்

By Sridhar L
Google Oneindia Tamil News

வேலூர்: திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஏதோ ராஜபக்சே கட்சி தீர்மானத்தைப் போல உள்ளது. அது திருப்தி தரவில்லை, ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திமுக செயற்குழுவில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து வேலூரில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

தமிழ் இனம் இலங்கையில் அழிகிறது, மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந்தேதி முதல்-அமைச்சர் கருணாநிதி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். அதற்கு அவர் சொன்ன விளக்கத்தில் "கேட்டுகேட்டு பலன் கிடைக்காததால் இந்த தீர்மானத்தை முன்மொழிவதாக'' சொல்லி இருந்தார். உடனே இலங்கையில் போர் நிறுத்தம் செய்து அமைதியை நிலவ செய்யவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

இந்த இறுதி வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதால் தி.மு.க.வின் அடுத்த நடவடிக்கையாக செயற்குழு அல்லது பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுப்போம் என்று கருணாநிதி அறிவித்து இருந்தார். தற்போது அவரது இறுதி வேண்டுகோள் ஒன்றுமே இல்லாமல் போனதால் தி.மு.க.வின் செயற்குழு கூடி தீர்மானம் போட்டிருக்கிறார்கள்.

தி.மு.க. ஒரு அரசியல் கட்சி என்கிற அளவில் இருந்தால் அதன்மீது என்னவென்று ஆராயவோ அல்லது ஆவலோடு எதிர்பார்க்கவோ தேவையில்லை. ஆனால் இன்றைக்கு தி.மு.க. ஒரு மாநிலத்தை ஆளுகிற கட்சி என்கிற அளவில் உள்ளது. தமிழகத்தின் ஆட்சியாளர் என்கிற முறையில், முதல்-அமைச்சர் என்கிற முறையில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பிரதிநிதியாக விளங்குபவர் கருணாநிதி.

இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழர்கள் மட்டுமன்றி, உலக தமிழர்களும் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்த்தது மட்டுமின்றி ஏங்குகிறார்கள். இந்த எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் நிறைவுசெய்யும் வகையில் தி.மு.க.வின் இன்றைய செயற்குழு முடிவு இல்லை. ஆளுங்கட்சியின் செயற்குழு தீர்மானத்தில் ஏமாற்றம், ஏமாற்றம், ஏமாற்றம் தான்.

செயற்குழு முடிவுப்படி, இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்கிற அமைப்பை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்களாம். ரொம்ப சிரிப்பாக இருக்கிறது. பட்டி தொட்டி எங்கும் விளக்க கூட்டம், மக்கள் பேரணி, மனித சங்கிலி, மாநாடு, அறப்போராட்டம் ஆகியவற்றை நடத்தி மக்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டுமாறு எழுச்சிப் பணிகளை தொடங்கப் போகிறார்களாம். உலக தமிழர் ஒவ்வொருவருடைய காதிலும் பூச்சுற்றி இருக்கிறார்கள்.

தி.மு.க. செயற்குழு இப்படி முடிவு எடுத்து இருப்பதன் மூலம் இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை தமிழர்களை காப்பதில் தி.மு.க. அரை நூற்றாண்டிற்கு பின்நோக்கி போயிருக்கிறது.

1958-ம் ஆண்டில் ஜுன் 22-ந்தேதி அப்போதைய தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இலங்கை தமிழர் உரிமை பாதுகாப்பு என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தி கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். இன்றைக்கு 50 ஆண்டுக்கு முன்பே அந்த இயக்கத்தை தொடங்கினார்கள். அது சம்பந்தமாக பேரணி நடத்தினார்கள், கண்டன தீர்மானங்களை போட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு 2009-ம் ஆண்டில் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை என்றும் அதன் சார்பில் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் என்றும் அறிவித்து இருக்கிறார்கள். இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தமிழர் நலனை காக்க தி.மு.க. எதையும் செய்யவில்லை.

வெட்கம் - வேதனை

50 ஆண்டுக்கு முன்பு என்ன நிலைமையில் இருந்தார்களோ அதேநிலைமையில் தான் இன்றைக்கும் மேற்கொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க பார்க்கிறார்கள். இந்த தீர்மானத்தைப் பற்றி ஒவ்வொரு தமிழனும் வெட்கப்படுகிறான். வேதனைப் படுகிறான்.

இந்த தீர்மானத்திலே ஒரு வேறுபாடு தெரிகிறது. சட்டப்பேரவையில் முதலில் 3 முறையும் இறுதி வேண்டுகோளாக கடந்த சட்டமன்ற கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலே வலியுறுத்தப்பட்டு உள்ள போர் நிறுத்த கோரிக்கையை தி.மு.க. கைகழுவிவிட்டது.

போர் நிறுத்தம் பற்றி செயற்குழு தீர்மானத்திலே ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சியும், முழுமையான அதிகார பகிர்வு கலந்த அரசியல் தீர்வும் உருவாக்க, செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும், இதை விளக்கி பொதுக்கூட்டம், பேரணி நடத்த தி.மு.க. செயற்குழு முடிவு எடுக்கிறது என்பது தான் தீர்மானம்.

போர் நிறுத்தம் இல்லாமல் எப்படி பேச்சுவார்த்தை தொடங்கும்? எப்படி அமைதி ஏற்படும்? எப்படி அதிகார பகிர்வு ஏற்படும்? ராஜபக்சே கட்சியின் தீர்மானம் போல் இது இருக்கிறது.

தமிழர்களை திமுக கைவிட்டு விட்டது

மொத்தத்தில் அன்றாடம் செத்து மடியும் இலங்கை தமிழர்களை ஆளுங்கட்சியான தி.மு.க.வும் தி.மு.க. அரசும் கைவிட்டு விட்டது. தமிழர்கள் நிர்க்கதியாக விடப்பட்டு இருக்கிறார்கள்.

சிங்கள ராணுவத்தின் கொடூர தாக்குதலில் இருந்து எஞ்சி நிற்கும் தமிழர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். பிறகு யாருடன் அமைதிப் பேச்சு? யாருக்கு அதிகார பகிர்வு?

ராஜபக்சே அரசுக்கும் தி.மு.க. அரசுக்கும் கொள்கை அளவில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை வெளிப்படையாகவே இன்றைக்கு கருணாநிதி அறிவித்து இருக்கிறார். அதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வகையில் இன்றைக்கு தி.மு.க. செயற்குழு தீர்மானம் போட்டு உள்ளது.

இலங்கை தமிழரை காப்பாற்ற முழு வேலைநிறுத்தம் நடத்தும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்து இருக்கிறது.

இந்த வேலைநிறுத்தம் ஆட்சி கவிழ்ப்பு சதி என்றும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க தி.மு.க.விற்கு அழைப்பு இல்லை என்றும் கருணாநிதி கூறி இருக்கிறார். நாங்கள் சிறிய அசம்பாவிதமும் நடக்க விடமாட்டோம் என்று சொல்கிறோம். மத்திய அரசும் மாநில அரசும் அவர்கள் (தி.மு.க.) கையில் தான் இருக்கிறது. எப்படி அவர்களது ஆட்சியை நாங்கள் கவிழ்க்க முடியும்?

திசை திருப்புகிறார் - கொச்சைப்படுத்துகிறார்

இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்படும் இந்த போராட்டத்தை கருணாநிதி திசை திருப்பி கொச்சைப் படுத்தி இருக்கிறார். தி.மு.க. மட்டுமல்லாமல் அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்து இருந்தோம்.

இந்த வேலைநிறுத்தத்திலே அரசியல் இல்லை என்பதை எல்லோருக்கும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். இது சம்பந்தமாக 10 கட்டளைகளையும் போட்டு இருக்கிறோம். அத்தனையையும் மீறி இது ஆட்சி கவிழ்ப்பு சதி என்று கருணாநிதி முத்திரை குத்தி அரசியலாக்க பார்க்கிறார். சதி பண்ணுவதும் பழிவாங்குவதும் எனக்கு தெரியாத கலையாகும்.

வேறு என்ன வழி இருக்கிறது?

மத்திய அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அப்படியானால் இதுகுறித்து அதிருப்தியையும் எதிர்ப்பையும் காட்ட பொதுவேலைநிறுத்தத்தை தவிர வேறே என்ன வழி இருக்கிறது? உணர்வுகளை வெளிப்படுத்த பொது வேலைநிறுத்தம் என்று அறிவித்து உள்ளோம்.

இதிலே அரசியல் எங்கே இருக்கிறது. ஆட்சி கவிழ்ப்பு சதி எங்கே இருக்கிறது? இலங்கை அரசை இணங்க வைக்கும் முறையில் தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் முழுக்க முழுக்க பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசையும் முடிந்த அளவிற்கு எல்லாம் செய்யும்படி மாநில அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று 50 ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா முடிவு எடுத்து அறிவித்து இருந்தார். அந்த கடமையில் இருந்து தி.மு.க. தவறி இருக்கிறது. அந்த கடமையை நாங்கள் ஆற்றுகிறோம் என்றார் ராமதாஸ்.

இலங்கை தமிழர் பிரச்சினையில், சென்னையில் வாலிபர் முத்துக்குமார் தீக்குளித்து இறந்த விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என்று கருணாநிதி சொல்லி இருக்கிறாரே என்ற கேள்விக்கு ராமதாஸ் பதிலளிக்கையில்,

தி.மு.க. நடத்திய மொழிப்போரில் சிலர் தீக்குளித்து இறந்தார்களே? அப்படியிருக்க முத்துக்குமரன் விவகாரத்தை அரசியல் ஆக்குவது தமிழ் பண்பாடு இல்லை என்று சொல்லி இருக்கிறார். நான் கவிஞனும் இல்லை. கதை வசன கர்த்தாவும் இல்லை என்றார்.

மத்திய அரசில் இருந்து பாமக வெளியேறுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

வருகிற 22-ந்தேதியுடன் நாடாளுமன்ற கடைசி கூட்ட தொடர் முடிகிறது. பாராளுமன்ற கூட்டம் முடியப்போகிற சூழ்நிலையில் அதுபற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது என்றார் டாக்டர் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X