விடுதலைப் புலிகளை எவனாலும் வீழ்த்த முடியாது: ராமதாஸ்

பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை இணைந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று சென்னையில் கருப்புக் கொடி ஏந்தி பேரணி நடந்தது.
மாலை 4.30 மணி அளவில் சென்னை மன்றோ சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டது.
இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், பா.ஜ.க. தேசியக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, பெரியார் திராவிட கழக பொது செயலாளர் விடுதலை ராஜேந்திரன், திராவிட விழிப்புணர்ச்சி இயக்க தலைவர் பி.டி.குமார் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கைகளில் கறுப்பு கொடி ஏந்தியும், பலர் கறுப்பு சட்டைகள் அணிந்தும் வந்தனர்.
ஊர்வலம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் வந்ததும் அங்கு நடந்த பொதுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தலைவர்கள் பேசுகையில், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தததைக் கொண்டு வர வேண்டும், இலங்கை அரசுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
எவனாலும் வெல்ல முடியாது ...
டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்கு தாங்கள் தான் பிரதிநிதிகள் போல பாவலா காட்டுகிறார்கள் என்று நம்மை முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். என்றைக்கும் நான் பாவலா காட்டப் போவதில்லை.
முதல்-அமைச்சர் என்ற முறையில் தலைமை தாங்கக் கோரினால், எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் உருவாக்க நினைக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். அப்படி கூறிவிட்டு இப்போது ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிறார். இதைத் தான் நான் கூறினேன்.
1986-ல் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், தான் வெற்றி பெற்றால் அமைக்கப் போகும் ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும் என்று கூறியதாக இப்போது முதல்வர் சொல்லியிருக்கிறார். எந்த அளவிற்கு பிரபாகரனை கொச்சைப்படுத்துகிற செயல் இது.
ஆனால் பிரபாகரன், ஒரு கட்சி ஆட்சி முறை என்று தான் கூறியிருக்கிறார். இதற்கும், சர்வாதிகார ஆட்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நான் இலங்கைக்கு போனதே இல்லை. தமிழ் ஈழம் மலர்ந்தால் தான் நான் அங்கு காலை வைப்பேன். நான் விடுதலைப்புலிகளுக்காக வாதாடவில்லை. அவர்களை எவனாலும் வெல்ல முடியாது.
தமிழின படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். 12-ந் தேதி கூடுகின்ற பாராளுமன்றத்தில் பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை சும்மா விடப்போவதில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியும், இந்த கொள்கை பிடிப்பு உள்ள மற்ற கட்சிகளும் இந்த இயக்கத்தில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் ராமதாஸ்.
புலிகளை கண்டுபிடிக்கும் ரா..
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,
இலங்கையில் போரை நடத்துவது இந்திய அரசு தான். ஆயுதம், ரடார் போன்ற ஆயுதங்களை வழங்கியதுடன், விடுதலைப்புலிகள் இருப்பிடத்தை தேடிக் கண்டுபிடித்து தருவது இந்திய ரா அமைப்பு தான்.
விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்பது தான் இந்திய அரசுக்கு தலைமை தாங்குகிற கட்சியின் திட்டம். இந்தியா போரை நிறுத்தச் சொன்னால் 100 நாடுகள் நிறுத்தச் சொல்ல தயாராக இருக்கின்றன. இந்தியாவே மவுனமாக இருக்கிறதே என்று அவர்கள் தயங்குகிறார்கள்.
பொது வேலை நிறுத்தத்தை தடை செய்ய முயற்சித்த முதல்-அமைச்சர் இப்போது ஒன்றுபட வேண்டும் என்று கூறுவது, அதுவும் அ.தி.மு.க.வுக்கு அழைப்பு விடுவது ஆச்சரியமாக இருக்கிறது. போராட்டத்தை நசுக்க முயற்சிப்பவர்களுடன் எப்படி ஒன்றுபடுவது.
இந்திய அரசே இப்போதாவது துரோகத்தை நிறுத்து, போரை நிறுத்து என்று சொல்ல முன்வர வேண்டும். இலங்கை ஒருமைப்பாட்டுக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீ வைத்து விடாதே. தமிழ் ஈழத்துக்காக போராடும் விடுதலைப்புலிகளுக்கும், ஈழ தமிழர்களுக்கும் சர்வதேச சமுதாயம் துணையாக இருக்கட்டும் என்றார்.
ராஜபக்சே பாதையில் காங்...
தா.பாண்டியன் பேசுகையில்,
இலங்கையை சுற்றி இந்திய போர்க்கப்பல்கள் நிற்கின்றன. கேட்டால் விடுதலைப்புலிகள் தப்பி இந்தியாவிற்குள் நுழைந்துவிடாமல் இருப்பதற்கு என்கிறார்கள். தாக்கப்படும் இந்திய மீனவர்களை காக்க போகாத கப்பல் விடுதலைப்புலிகள் வந்துவிடாமல் தடுப்பதற்கு போயுள்ளன.
காங்கிரஸ் நேரு பாதையில் இருந்து விலகி ராஜபக்சே பாதையில் செல்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் எங்களோடு சேர்ந்து முழங்க வாருங்கள் என்று மன்றாடி கேட்கிறேன். இது தேர்தல் அணி அல்ல. செத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை காப்பாற்றும் அணி என்றார் பாண்டியன்.
எச்சரிக்கை பேரணி ...
திருமாவளவன் பேசுகையில்,
இந்திய அரசை வற்புறுத்துகிற, எச்சரிக்கிற பேரணி இது. தீக்குளித்த சீர்காழி ரவிச்சந்திரன் சொரணை கெட்டவர்களுக்கு சூடு வைத்திருக்கிறார். இதுபோன்ற தீக்குளிப்புகளுக்கு நம்முடைய கையாலாகாத நிலை தான் காரணம்.
இந்திய அரசு இந்த போராட்டங்களை எல்லாம் பொருட்படுத்துவதாக இல்லை. இலங்கையில் தமிழ் ஈழமா? கூட்டாட்சி முறையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை முடிவு செய்வதும் அவர்கள் தான்.
போர் நிறுத்தம் என்ற முழக்கம் இந்திய அரசின் செவிப்பறையை கிழிக்க வேண்டும். போராட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்த வேண்டும். அதற்காக அடுத்த கட்ட போராட்டத்துக்கு நகர வேண்டும் என்றார் திருமாவளவன்.
கொச்சைப்படுத்தாதீர்கள் ...
பழ.நெடுமாறன் பேசுகையில்,
பா.ம.க., தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மத்திய அரசில் அங்கம் வகிக்கிறது. ஆனால் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, தமிழர்கள் என்ற உணர்வில் போராட குரல் கொடுக்கிறார்கள். இதை கொச்சைப்படுத்தாதீர்கள் என்றார்.
கூட்டத்தின் இறுதியில், இலங்கைத் தமிழர்களைக் காப்போம் என்ற உறுதிமொழியை வாசிக்க அதை அனைத்துத் தலைவர்களும் எழுந்து நின்று திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சென்னையைப் போலவே மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட மாநகரங்களிலும், மாவட்டத் தலைநகரங்களிலும், பேரூர், சிற்றூர்களிலும் கறுப்புக் கொடிப் பேரணிகள் நடைபெற்றன.
பேரணிகளில் கலந்து கொண்டவர்கள் கருப்புக் கொடிகளை மட்டுமே ஏந்தி வந்தனர். கட்சி, அமைப்புகளின் கொடிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications