For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலை அனைவரும் புறக்கணிப்போம் - விஜயகாந்த் மீண்டும் அழைப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Vijayakanth
சென்னை: இலங்கைத் தமிழர்கள் நலனுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பு மக்களும் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசைப் பணிய வைக்க தேர்தல் புறக்கணிப்புதான் சரியான முடிவு. எனவே அரசியல் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், பொதுமக்களும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியும், அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதாகவும், ஆனால் இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாகவும் கூறி ஒரே நிலையை எடுத்துள்ளன. ராணுவ ரீதியில் விடுதலைப்புலிகள் வேறு, பொது மக்கள் வேறு என்று பிரிக்க முடியாது.

ராணுவ நடவடிக்கையின் மூலம் அப்பாவி பொது மக்கள் கட்டாயம் பாதிக்கப்படுவார்கள். பெரிய கட்சிகள் தங்கள் பக்கம் இருக்கின்றன என்பதால் இந்திய அரசு நிம்மதியாக இருக்கிறது.

கடந்த 4 மாதங்களாக இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்தும் கூட, இந்திய அரசில் பங்கு வகிக்கின்ற தமிழ்நாட்டை சேர்ந்த எந்த கட்சியும் பதவி விலகத்தயாராக இல்லை. இன்னும் சில நாட்களே என்றாலும் கூட, எம்.பி. பதவியையோ, மந்திரி பதவியையோ விட்டு விலக யாரும் தயாராக இல்லை.

என்னை பொருத்தவரை அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே 1983-ம் ஆண்டிலிருந்தே இலங்கை தமிழர்பால் முழு ஈடுபாட்டுடன் இருந்து வருகிறேன். என்னுடைய சொந்த உழைப்பின் மூலம் அவர்களில் பலருக்கு உதவியும், அவர்களின் போராட்டத்திற்கு செல்வாக்கு தேடியும், அதன் விளைவாக தனிப்பட்ட முறையில் பல பாதிப்புகளுக்கு ஆளாகியும் உள்ளேன்.

மற்றவர்களை போல அரசியல் சுயநலத்திற்காக நான் இந்த பிரச்சினையைப் பயன்படுத்தவில்லை. ஆனால், தமிழ்நாட்டிலுள்ள சில அரசியல் தலைவர்கள் தமிழ், தமிழர்கள், தமிழ்நாடு என்று சொல்லியே மக்களை வஞ்சிக்கிறார்கள்.

இந்திய அரசு தமிழ் மக்களை புறக்கணிக்கின்ற பொழுது, தமிழ் மக்கள் ஏன் இந்திய அரசை புறக்கணிக்கக் கூடாது. அதற்குள்ள ஒரே வழி வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்களை தமிழ்நாடே புறக்கணிப்பது தான். தேர்தல் என்கின்ற பொழுது அவற்றை புறக்கணிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களும் தங்கள் உணர்வை பதிவு செய்ய முடியும்.

ஆட்சிகள் வரும் போகும். ஆனால், இலங்கையில் இறந்த தமிழர்களின் உயிர்கள் திரும்ப வராது. அதனால் தான் தேர்தல் புறக்கணிப்பு இப்பொழுது அறிவிக்கப்பட்டால் இந்திய அரசு எப்படியும் தமிழர்களின் குறையை தீர்க்க கட்டாயம் முன்வரும் என்று நம்புகிறேன்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்பதோ, அதை விட அங்கு சென்று பேசலாம் என்று வாதிடுவதோ, அரசியல் துறவறம் போகலாம் என்று சொல்வதோ இன்றைய சூழ்நிலையில் அர்த்தமற்றவை.

இலங்கையில், உரிமைகளுக்காக தமிழர்கள் உயிரைத் துறக்கிறார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் பதவியை கூட விட தயாராக இல்லை என்ற பழியிலிருந்து மீள இது வழிவகுக்கும்.

ஆகவே, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் பதவிகளை பெரிதாக கருதவில்லை என்று எடுத்துக்காட்டும் வகையிலும், இலங்கை தமிழர்கள் அவலத்தை உணரும் வகையிலும், உலக நாடுகளுடைய கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை அறவே புறக்கணிப்போம்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சியினரும், அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்த கருத்தோடு தேர்தலை புறக்கணிப்போம் என்று இப்பொழுதே முடிவெடுத்து அறிவிக்கும் செயல் திட்டமே தற்பொழுது மேற்கொள்ளவேண்டிய வரலாற்று கடமையாகும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X