பொருளாதாரத் தடை-யு.எஸ் மிரட்டலால் பணிந்த பாக்.

மும்பைத் தாக்குதல் தொடர்பாக கழுவிய நீரில் நழுவிய மீனாக, குழப்பமாகவே பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் நேற்று அந்தர்பல்டி அடித்தது. மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் சதித் திட்டத்தில் ஒரு பகுதி பாகிஸ்தானில்தான் தீட்டப்பட்டது என்று பாகிஸ்தான் ஒத்துக் கொண்டது.
மேலும், பாகிஸ்தானியே அல்ல என்று கூறி வந்த கஸாப் உள்ளிட்டோர் மீது தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மாலிக் தெரிவித்தார்.
ஆனால் பாகிஸ்தான் இப்படி தடாலடியாக இறங்கி வந்ததற்கு முக்கிய காரணம் - கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா விடுத்த இறுக்கமான எச்சரிக்கைதான் முக்கியமாக கூறப்படுகிறது.
அமெரிக்கா தவிர இங்கிலாந்து உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளும் கூட இதே ரீதியிலான எச்சரிக்கையை விடுக்கவே இனிமேலும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது என்பதால்தான் படாரென இறங்கி வந்து விட்டது பாகிஸ்தான் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் பொருளாதார தடையை, அந்நாட்டின் சிறப்புத் தூதரான ரிச்சர்ட் ஹால்ப்ரூக், இஸ்லாமாபாத் வந்திருந்தபோது நேரடியாக பாகிஸ்தான் நிர்வாகத்திடம் தெரிவித்தாராம். அவர் பாகிஸ்தானை விட்டுச் சென்ற பிறகே கஸாப் மீதான வழக்குப் பதிவு குறித்த தகவலையும், பிற தகவல்களையும் வெளியிட்டது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை போனில் பிடித்து கிட்டத்தட்ட மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அமெரிக்காவின் பேச்சு தொணிக்கும், இம்முறை பேசியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்ததை சர்தாரி உணர்ந்தாராம். இதையடுத்தே தடாலடியாக பாகிஸ்தான் தனது நிலையிலிருந்து இறங்கி வந்ததாம்.
அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு அது பேரிடியாகவும், பேரழிவாகவும் மாறிப் போகும். மேலும், தலிபான்களின் ஆதிக்கமும் வலுவடைந்து விடும், அது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, தனக்கும் பேராபத்து என்று உணர்ந்தாராம் சர்தாரி.
சாதகமான நடவடிக்கை - அமெரிக்கா
இந்த நிலையில் கஸாப் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியுள்ளது. இது சாதகமான முதல் முக்கிய நடவடிக்கை. சரியான கோணத்தில் பாகிஸ்தான் நடக்கத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்போர்ட் கூறுகையில், இது நிச்சயம் நல்ல முன்னேற்றம். முதல் முக்கியமான நடவடிக்கை.
இந்தியாவின் ஆதாரங்களுக்கு பாகிஸ்தான் அளித்துள்ள பதில், மேம்பட்ட நடவடிக்கையின் தொடக்கமாகவே தோன்றுகிறது. இந்தியா கொடுத்த ஆதாரங்களை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணையில் ஒத்துழைக்கவும் அது தீர்மானித்துள்ளது.
அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விசாரணையை முடித்து, தண்டனையையும் பாகிஸ்தான் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மும்பை விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்ட விதத்தையும் அமெரிக்கா பாராட்டுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications