தந்தையைக் கொன்ற ரவுடி - தாயார் மரணம் - அனாதைகளான 3 குழந்தைகள்
சென்னை: ரவுடிகளால் தந்தை கொல்லப்பட்டு விட்டதாலும், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாலும், 3 குழந்தைகள் யாருமற்ற அனாதைகளாகியுள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு சுனாமி நகர், எர்ணாவூர், பகுதிகளில் சட்ட விரோதமாக சிறுநீரகம் விற்கும் செயல் நடைபெற்றது.
சுனாமியால் ஏற்பட்ட வறுமையை பயன்படுத்தி அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் புரோக்கர்கள் பலர் அணுகி சிறுநீரகத்தை விலை பேசினர். ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை தருவதாக ஆசைகாட்டி சிறு நீரகத்தை வாங்கி னார்கள். வறுமையால் பணத்துக்கு ஆசைப்பட்டு 34 பேர் தங்கள் சிறுநீரகத்தை விற்றனர்.
அப்போது தண்டையார் பேட்டை சுனாமி நகரை சேர்ந்த திலகவதி (41) என்பவர் தனது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்தார். அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்கவில்லை. பேசியபடி பணம் கொடுக்காமல் ரூ.10 ஆயிரம் மட்டுமே கொடுத்து ஏமாற்றி விட்டனர். எனவே அவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்தே சிறுநீரக மோசடி வெட்ட வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த வாரம் திலகவதிக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு மீண்டும் அவருக்கு வாந்தி மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது.
உயிருக்கு போராடிய நிலையில் அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இறந்து போன திலகவதிக்கு தேவி (16), முருகன் (12), மூர்த்தி (10) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். திலகவதியின் கணவர் அகஸ்தீஸ்வரனை முன்விரோதம் காரணமாக கடந்த 2007-ம் ஆண்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வைத்து ரவுடிக்கும்பல் வெட்டிக் கொன்று விட்டது.
தாயாரின் நிழலில் 3 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்த நிலையில் தாயாரும் இறந்து போய் விட்டதால் 3 குழந்தைகளும் பரிதாபமாக அனாதைகளாகியுள்ளனர்.
தற்போது இந்தக் குழந்தைகள் சமூக சேவகர் மரியம்செல்வம் என்பவரின் ஆதரவை நம்பியுள்ளன. திலகவதி பிணத்துக்கு இறுதிச்சடங்கு முதல் அனைத்து காரியத்தையும் அவரே செய்தார்.
இதுகுறித்து மரிய செல்வம் கூறுகையில்,
திலகவதியின் மூலமாக கிட்னி மோசடி சம்பவத்தை முதன் முதலில் நான்தான் வெளிஉலகுக்கு கொண்டு வந்தேன். அவர் கணவரை இழந்த பிறகு விதவைத் தொகை கேட்டு சமீபத்தில்தான் விண்ணப்பித்தார். அதற்குள் அவரும் இறந்து விட்டார்.
திலகவதியின் குழந்தைகளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் அவர்கள் ஆதரவற்றவர்களாகி நிற்கின்றனர். சுனாமியில் பாதிக்கப்பட்டதற்காக சொந்த வீடும் ஒதுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாடகை வீட்டிலேயே குடியிருந்து வருகிறார்கள்.
திலகவதியின் குழந்தைகளுக்கு அரசு சொந்த வீடு ஒதுக்க வேண்டும். அவர்கள் கஷ்டமில்லாமல் வாழ உதவி செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications