சீமான் தலைமறைவு: கோர்ட்டில் சரணடைகிறார்?
சென்னை: புதுச்சேரி போலீசார் கைது செய்யும் முன் நீதி மன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ள சீமான், திடீரென தலைமறைவாகிவிட்டார்.
இயக்குநர் சீமான் பொது கூட்டங்களிலும், உண்ணாவிரத போராட்டங்களிலும் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேசி வருகிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் பேசுவதாக காங்கிரஸார் அவர் மீது குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இதையடுத்து ஏற்கெனவே இருமுறை போலீசார் அவரை கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் நடிகர்கள் இயக்குனர்கள் நடத்திய ஊர்வலத்திலும், சேலம் அருகே பொதுக் கூட்டத்திலும் பேசியதற்காக கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
சர்ச்சைக்குரிய விதமாக பேசமாட்டேன் என்று கோர்ட்டில் உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் புதுவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையில் தனிப்படை போலீசார் சீமானை கைது செய்ய நேற்று சென்னை வந்தனர்.
வளசரவாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு சென்றபோது வீடு பூட்டி இருந்தது. ஆனால் வீட்டுக்குள் அவர் பயன்படுத்தும் கார் நின்றது.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த பிறகு சாலிகிராமம் வெங்கடேஸ்வரா காலனியில் உள்ள சீமானின் இன்னொரு வீட்டுக்கு சென்றனர். அங்கும் அவர் இல்லை.
மனிதச் சங்கிலியில் பங்கேற்க...:
புதுச்சேரி போலீஸ் பிடியில் சிக்காமல் கோவையில் நண்பர் ஒருவர் வீட்டில் சீமான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்கையில், சீமான் தலைமறைவாகும் நபர் அல்ல. தன்மானமானமும் இனப்பற்றும் கொண்ட ஒரு சிறந்த தமிழனை இப்படியெல்லாம் கேட்டு அவமானப்படுத்தாதீர்கள். சிறைக்கு அஞ்சுபவரா சீமான்? இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்து இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது.
இதில் பங்கேற்கத்தான் சீமான் வெளியூர் சென்றுள்ளார். போராட்டம் முடிந்ததும் கோவை கோர்ட்டில் சரண் அடைவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications