பட்ஜெட்; தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அதிருப்தி
கோவில்பட்டி: பட்ஜெட்டில் தீப்பெட்டிகளுக்கான கலால் வரி நீக்கப்படாததை அடுத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் தீப்பெட்டி தொழிலை நம்பி 7 லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் கையினால் செய்யும் தீப்பெட்டி, பகுதி இயந்திர தீப்பெட்டி, முழுவதும் இயந்திர மயமாக்கப்பட்ட தீப்பெட்டி என மூன்று பிரிவுகளாக தீப்பெட்டி தொழில் செயல்பட்டு வருகின்றன.
இதில் மருத்து மூக்குதல், தீக்குச்சி அடுக்குதல், பெட்டி ஓட்டுதல் என பல்வேறு தீப்பெட்டி தயாரிப்பு பணிகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. தீப்பெட்டியின் தரத்தை மேம்படுத்த, பகுதி இயந்திர தீப்பெட்டி கம்பெனிகள் வங்கி நிதியுடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள பகுதி இயந்திர தீப்பெட்டி கம்பெனிகள் எண்ணிக்கை 300க்கும் மேல். பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்கு 8 சதவீத கலால் வரி செலுத்துகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை, லாரி ஸ்டிரைக் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பகுதி இயந்திர தீப்பெட்டி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதந தொடர்ந்து பகுதி இயந்திர தீப்பெட்டிக்கான மத்திய கலால் வரி 8 சதவீதத்தை நீக்க கோரி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு பகுதி இயந்திர தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழக முதல்வரும் மத்திய அரசுக்கு இவர்களது கோரிக்கையை நிறைவேற்றிட பரிந்துரை செய்தார். ஆனால் மத்திய அரசின் பட்ஜெட்டில் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
மேலும் தீப்பெட்டி தொழிலுக்கு என எவ்வித சலுகைகளும் அளிக்கப்படாததது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications