For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதர்மத்தின் பக்கம் நிற்கும் மத்திய அரசு-தா.பா

By Sridhar L
Google Oneindia Tamil News

Pandian
சென்னை: மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது மட்டுமல்ல அதர்மத்தின் பக்கம் நிற்கிறது. தமிழர்களை அழிக்க துணை நிற்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

இலங்கைத் தமிழர்களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்திய உண்ணாவிரதத்தில் பாண்டியன் பேசியதாவது:

இலங்கையில் அப்பாவித் தமிழ்ப் பெண்கள், குழந்தைகள், கண்மூடித்தனமாகத் கொல்லப்படுகிறார்கள். இந்த கொடுமையை தடுக்க மத்திய அரசு வாய் திறக்கவில்லை. மாநில அரசும் கண்டுகொள்ளவில்லை. இதற்கு பிறகும் பொறுமையுடன் இருக்கக்கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வர் 'அம்மா' இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

எந்தக் குற்றமும் செய்யாத இலங்கை தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த கடமையை செய்ய மத்திய அரசு மறந்து விட்டது. இனியும் காலம் தாழ்த்தினால் நமது அரசியல் கடமையை செய்யாதவர்கள் ஆகிவிடுவோம். நமது கடமையை நாம் மாற்றியாக வேண்டும்.

இலங்கை ஒரு தனி நாடு. சுதந்திரம் பெற்ற நாடு. அதை முழுமையாக பார்க்கிறோம். ஆனால் உலகில் எங்கும் இல்லாத வகையில் சொந்த மக்களையே விமானம் மூலம் குண்டுகள் வீசி அழிக்கிறார்கள். இதை பார்த்த பிறகும் கேட்ட பிறகும் சும்மா இருக்க முடியுமா?.

நமது வாக்குகளை பெற்றவர்கள்தான் இந்தியாவை ஆள்கிறார்கள். இலங்கை மீது படையெடுக்கச் சொல்லவில்லை. குண்டு வீச சொல்லவில்லை. தமிழ்த் தாய்மார்களைக் கொல்லாதே. குழந்தைகளைக் கொல்லாதே என்று இலங்கையை தடுக்கக்கோரி மன்றாடினோம்.

மத்திய மந்திரி சபையில் அங்கம் வகிப்பவர்களாவது ஏதாவது செய்வார்கள் என்று நம்பினோம். அதை நம்பித்தான் சர்வக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டோம். தீர்மானம் போட்டார்கள். நாங்களும் ஆதரவுக் கொடுத்தோம். கொட்டும் மழையில் மனித சங்கிலிகளாக கை கோர்த்து நின்றோம்.

ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன்பிறகு சட்டசபையில் தீர்மானம் போட்டார்கள். இதற்கு அதிமுகவும் ஒத்துழைத்தது. ஆனால் எந்த நடவடிக்கைக்கும் மத்திய அரசு பதில் சொல்லவில்லை. எந்த பதிலும் வரவில்லையே என்று முதல்வரிடம் நான் கேட்டேன். உடனே அவர் டெல்லிக்கு போகலாம் என்றார். அவர் அழைக்காமலேயே நானும் டெல்லிக்கு சென்றேன்.

டெல்லியில் பிரதமரிடம் பேசினோம். பிரதமர் என்னால் எதுவும் செய்ய இயலாது என்றார். ஆனால் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு செல்வார் என்று தமிழக மக்களிடம் சொன்னார்கள்.

மறுநாள் இலங்கை அரசு அழைக்காமல் பிரணாப் முகர்ஜி எப்படி போக முடியும்? என்று டி.ஆர்.பாலு அறிக்கை விட்டார். மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, இலங்கைத் தமிழர்களை காக்கவில்லை.

பல லட்சம் தமிழர்கள் இலங்கை காடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வலியுறுத்தாவிட்டால், நமது அரசியல் கடமையை செய்யத் தவறியவர்கள் என்று குற்றச்சாட்டுக்கு ஆளாவோம். இந்த உண்ணாவிரதம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அனுப்பப்பட்ட உதவிப்பொருட்கள் இலங்கைத் தமிழர்களை எட்டவில்லை. இங்கு நாம் நிதி திரட்டுகிறோம். இந்த நிதி தமிழர்களின் துயரை துடைக்கும்.

மத்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது மட்டுமல்ல அதர்மத்தின் பக்கம் நிற்கிறது. தமிழர்களை அழிக்க துணை நிற்கிறார்கள். ஆவேசத்தில் உணர்ச்சி பெருக்கில் பல இளைஞர்கள் தற்கொலை பாதையை தேர்வு செய்கிறார்கள். யாரும் உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள். முடிந்தால் ஒரு நல்ல அரசை அமைக்க துணை செய்யுங்கள் என்றார் பாண்டியன்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், இதுவரை அதிமுக இந்த பிரச்சினையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அந்த வெற்றிடம் இன்று தீர்ந்து விட்டது.

இந்த போராட்டம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு வெற்றி கிடைத்தே தீரும். சகோதரியார் எதையும் தொட்டால் விடமாட்டார். தீர்வு காணும் வரை ஓயமாட்டார் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனும் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X