பாமகவுக்கு 9 தொகுதிகள்-ஆசை காட்டும் அதிமுக
சென்னை: பாமகவை தனது கூட்டணிக்குள் இழுக்க அதிமுக அதி தீவிரம் காட்டி வருகிறது.
திமுக கூட்டணியை விட்டு நீக்கப்பட்ட பாமக இதுவரை மீண்டும் அந்தக் கூட்டணிக்குத் திரும்பவில்லை. ஆனால், பாமகவை எப்படியாவது திமுக கூட்டணியில் நீடிக்கச் செய்ய காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
வழக்கமாக யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்கள் பக்கம் போகும் கட்சியான பாமக இம்முறை திமுக, அதிமுக என இரு தரப்பையும் தொடர்ந்து கலக்கத்திலேயே வைத்துள்ளது.
பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்வோம் என்று அறிவித்த அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நேற்று கூடுவதாக இருந்த பொதுக் குழுக் கூட்டத்தை கூட்டவில்லை. இதன்மூலம் தனது முடிவை ஒத்திப் போட்டு திமுக, அதிமுகவை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளார்.
ராமதாசுடன் காங்கிரஸ் தரப்பில் பல மூத்த தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில் அவரை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக அனைத்து வழிகளிலும் இறங்கியுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரை ராமதாஸை கூட்டணிக்குள் இழுக்கும் வேலையை காங்கிரசிடமே ஒப்படைத்துவிட்டு அமைதி காத்து வருகிறது. எடுத்த எடுப்பில் நாமே நேரடியாகப் பேசினால் அதிக இடங்கள் கேட்டு ராமதாஸ் கிடுக்கிப்பிடி போடுவார் என்ற பயம் திமுகவுக்கு.
மேலும் சில மாதங்களுக்கு முன் காங்கிரசுடன் தான் கூட்டணி, திமுகவுடன் இல்லை என்று ராமதாஸ் அறிவித்ததால் அவரை கூட்டணிக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கே என்று விட்டுவிட்டது திமுக என்கிறார்கள்.
மேலும் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் ராமதாஸ் பேச்சு நடத்தி வருவதை உளவுப் பிரிவு மூலம் திமுக உறுதி செய்து கொண்டுவிட்டதாகவும், இதனால் என்ன பேசினாலும் அவர் கடைசியில் அதிமுக பக்கமே போவார் என்றும் அறிவாலயம் கருதுவதாகவும் தெரிகிறது.
கடந்த தேர்தலில் பாமகவுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. கூடவே ஒரு ராஜ்யசபா சீட்டும் தந்தது.
இம்முறை ராமதாஸை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக 9 தொகுதிகள் வரை தர முன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டுமானால் இதே அளவு தொகுதிகளை ராமதாஸ் நிச்சயம் கேட்பார் என்கிறார்கள்.
இன்று அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனின் மகள் திருமணம் சென்னையில் நடந்தது. கடந்த முறை ஆற்காடு இல்லத் திருமணத்தில் வைத்துத் தான் பாமகவை கூட்டணியை விட்டு நீக்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இன்று நடந்த திருமணத்தில் கருணாநிதி பங்கேற்று கூட்டணிக்குத் திரும்ப பாமகவுக்கு அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தத் திருமணத்துக்கு கருணாநிதி வரவில்லை. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவர் ஓய்வி்ல் இருப்பதால் அமைச்சர் அன்பழகன் தான் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக் கொண்டால் மட்டுமே இனி ராமதாசுடன் முதல்வர் கருணாநிதி கூட்டணி தொடர்பாக பேசுவார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications