For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சூறாவளி-கொட்டகையுடன் வீசப்பட்ட குழந்தை

By Sridhar L
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்றில், தகரக் கொட்டகை தூக்கி எறியப்பட்டது. அப்போது அந்தக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கைக்குழந்தையும் தூக்கி வீசப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தை காயமினறித் தப்பியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் பேரையூர் தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும் இடி, மின்னலுடன் பலத்த மழையும் பெய்தது. சுமார் 3 மணி நேரம் இந்த மழை நீடித்தது.

இதில் சேடபட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சூறைக்காற்று வீசியதில் இந்த ஊரை சேர்ந்த சுமார் 15 வீடுகளின் மேற்கூரையில் போடப்பட்டிருந்த தகரங்கள் பறந்தன. அவை 100 மீட்டருக்கு அப்பால் போய் விழுந்தன.

காற்றில் பல மரங்களும் சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் வீட்டுச்சுவர்கள் இடிந்து விழுந்தன. மொத்தம் 20 வீடுகள் சேதம் அடைந்தன.

பாஸ்கர் என்பவர் வீட்டின் மேற்கூரை தகரத்தால் வேயப்பட்டிருந்தது. அதில் கம்பியில் தொட்டில் கட்டி தனது ஒரு வயது பெண் குழந்தை பிரியதர்சினியை தூங்க வைத்திருந்தார் பாஸ்கரின் மனைவி கருப்பாயி.

பலத்த சூறாவளிக்காற்றில் தகர கூரை பிய்ந்து தொட்டிலுடன் காற்றில் பறந்தது. தொட்டில் குழந்தையுடன் கூரை 200 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. அந்த கூரை ஒரு மரத்தில் தட்டி கீழே விழந்தது. தொட்டிலில் படுத்திருந்த குழந்தை தகர கூரைக்குள் சிக்கியது.

இதனை பார்த்து பாஸ்கரனும் அவரது மனைவியும் பீதியில் கூரை விழுந்து கிடந்த இடத்துக்கு ஓடிச் சென்றனர். சிதறிக் கிடந்த தகரங்களுக்குள் தங்கள் குழந்தையை தேடினார்கள். அப்போது குழந்தை பிரியதர்சினியின் அழுகுரல் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். கூரையை விலக்கிப் பார்த்தபோது குழந்தைக்குக எந்தவித அடியும் படாமல் பத்திரமாக இருந்தது.

இந்த காற்றுக்கு பெருங்காமநல்லூர் பகுதியில் சுமார் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சூரியகாந்தி செடிகள் ஒடிந்து விழுந்து சேதமடைந்தன.

இதேபோல விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் பலத்த மழை பெய்து கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உடுமலையில் கன மழை...

கோவை மாவட்டம், உடுமலை பகுதியில் அதிகாலையில் நல்ல மழை கொட்டியது. 26 மில்லிமீட்டர் மழை அளவு பதிவானது. திருமூர்த்தி அணைப்பகுதியில் 6.5 மி.மீட்டர் பதிவானது. வால்பாறை பகுதியில் நேற்று பகல் வேளையில் மழை பெய்தது.

கோபியில் வெள்ளம்...

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால், பிச்சாண்டம்பாளையம் குளத்தின் பக்கத்தில் இருந்த 50 வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.

அந்தியூரில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது இரவு 12-30 மணிக்கு இடி தாக்கியதால் சுற்று சுவர் சேதம் அடைந்தது.

ஈரோடு கருங்கல்பாளையம், காளிங்கராயன்பாளையம் வாய்க்காலில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் மின்கம்பம் மற்றும் பெரிய மரம் ஒன்றும் சாய்ந்து விழுந்தது.

மேட்டுப்பாளையம்...

மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந் நிலையில் மேட்டுப்பாளையத்தை குளிர வைக்கும் அளவிற்கு பலத்த மழை பெய்தது.

மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் புறப்பட்டது. இதில் 200 பயணிகள் பயணம் செய்தனர்.

காட்டில் நின்ற மலை ரயில்...

கல்லார் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்ற போது தண்டவாளத்தில் மூங்கில் மரங்கள் கிடப்பதை பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் மலை ரெயிலை உடனடியாக நிறுத்தினார்.

மேலும் ஆங்காங்கே லேசான நிலச்சரிவு ஏற்பட்டதால் மணல் குவியல்கள் தண்டவாளத்தை ஆக்கிரமித்து இருந்தது. அந்த மணல் குவியல்கள், பெரும் கற்களை ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள்.

சீரமைப்பு பணி முடிவடையாததால் ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் திரும்பியது. நேற்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

சாக்கடையில் விழுந்தவர் பலி ..

ஈரோடு வைராபாளையம் நேதாஜி வீதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் குடிபோதையில் இரவு 11 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வழியில் இருந்து சாக்கடையில் விழுந்து வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

நெல்லை...

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் 2 நாட்களாக மாலையிலும், இரவிலும் மழை பெய்தது.

நேற்று தென்காசியில் மாலை 5.30 மணி முதல் 5.40 மணி வரை மழை தூறல் இருந்தது. வீரவநல்லூரில் மாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இருப்பினும் நெல்லையில் மழை பெய்யவில்லை. மாறாக வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை..

விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பாரில் 2வது நாளாக இன்றும் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார், பெரியசாமி புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கடல் நீர் கரையை தாண்டி 10 அடி தூரத்திற்கு வெளிவந்தது. இதனால் பீதியடைந்த மக்கள் ஊருக்குள் ஓட்டம் பிடித்தனர். கடல் கொந்தளிப்பாக காணப்பட்டதால் மீனவர்கள் யாரும் மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X