For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிசர்வ் வங்கி உத்தரவிட்டாலும் வட்டியைக் குறைக்க மறுக்கும் வங்கிகள்!

By Sridhar L
Google Oneindia Tamil News

மும்பை: வங்கிகளின் பிடிவாதப் போக்கினால் நாட்டின் பொருளாதாரமே அபாயகரமான கட்டத்துக்கு தள்ளப்படும் அபாயம் நேர்ந்துள்ளது.

நாட்டின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கிதான் அனைத்து வங்கிகளுக்கும் நெறியாளனாகத் திகழ்கிறது. இந்த தலைமை வங்கி சொல்லும் கட்டளைகளை நாட்டின் பொருளாதாரச் சூழலுக்கேற்ப நடைமுறைப்படுத்துவது வணிக வங்கிகளின் வேலை.

ஆனால் பெரும்பாலும் அப்படி நடப்பதே இல்லை. ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை சுற்றறிக்கைகளாக வாங்கி வைத்துக் கொள்ளும் வணிக வங்கிகள், வாடிக்கையாளர்களை மதிப்பதுமில்லை, ரிசர்வ் வங்கி தரும் சலுகைகளை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க விடுவதும் இல்லை.

இதற்கு முக்கியக் காரணம், வங்கிகளின் தலைவர்கள் அல்லது நிர்வாக இயக்குநர்களின் உரிமை உணர்வு. அதாவது அந்த வங்கியில் தங்களுக்குள்ள ஆதிக்கம் மற்றும் தாங்களே வங்கிகளைக் 'கடைத்தேற்ற வந்தவர்கள்' என்ற அபரிமிதமான உணர்வுதான் என்கிறார் பொருளியல் அறிஞர் பேராசிரியர் பன்னீர் செல்வம். இதை நூறு சதவிகிதம் உண்மை என நிரூபித்துள்ளன வணிக வங்கிகள்.

குறிப்பாக கடந்த ஒரு மாத காலத்தில் ரிசர்வ் வங்கியின் சலுகைகளை பொதுமக்களுக்குத் தருவதில் வணிக வங்கிகள் காட்டும் சுணக்கம், ஏதோ அவர்கள் வீட்டுச் சொத்தை இலவசமாக தூக்கிக் கொடுப்பதற்கு இணையாக உள்ளதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவு மத்திய நிதியமைச்சகத்துக்கு பல தரப்பிலிருந்தும் புகார்களாகக் குவிகிறதாம்.

கடந்த சில வாரங்களில் மட்டும் ரிசர்வ் வங்கி ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை 400 புள்ளிகள் அடிப்படையில் குறைத்துள்ளது. அதாவது 4 சதவிகிதம் குறைத்துள்ளது. இந்த சலுகையை முழுமையாக வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்று இதுவரை 6 சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன அனைத்து வங்கிகளுக்கும். ஆனால் அதற்கு வணிக வங்கிகள் எந்த வித ரியாக்ஷனும் காட்டவில்லை. பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், அனைத்து வங்கிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் கடுமையாக எச்சரித்த பிறகு வட்டிக் குறைப்புகளை அமல்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.

எவ்வளவு வட்டி குறைத்தார்கள் தெரியுமா? வெறும் 1.5 சதவிகிதத்துக்கும் குறைவாக!

அதே நேரம் வாடிக்கையாளர்களின் டெபாஸிட்டுகளுக்கு மட்டும் யாரும் சொல்லாமலேயே வட்டியைக் குறைத்துள்ளன இந்த வணிக வங்கிகள். இதுவரை 2.5 சதவிகித வட்டிக் குறைப்பை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் செய்துள்ளன இந்த வங்கிகள்!

நாட்டின் மிகப் பெரிய வணிக வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது முதன்மை கடன் வட்டி விகிதத்தை 12.25 சதவிகித வட்டியை வசூலிக்கிறது. இதற்கு முன் 13.75 சதவிகிதம் வசூலித்து வந்தது. அதாவது 1.5 சதவிகிதம் மட்டுமே வட்டிக் குறைப்பு செய்துள்ளது.

தனியார் துறையில் பெரிய வங்கியான ஐசிஐசி்ஐ வங்கியோ 17.25 சதவிகிதம் வரை வட்டி வசூலித்து வந்தது. இப்போது அதை 16.75 சதவிகிதமாக மாற்றியுள்ளது. அதாவது ரொம்ப பெரிய மனது பண்ணி அரை சதவிகிதம் வட்டி குறைத்துள்ளனர்! ரிசர்வ் வங்கி உத்தரவுப் படி இந்த வங்கி 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வட்டி வசூலிக்க வேண்டும்.

யூனியன் வங்கி, பரோடா வங்கி ஆகிய இரண்டும் 12 சதவிகிதத்துக்கும் குறைவாக வட்டி வசூலிக்கப்படும் என கடந்த பிப்ரவரி 12-ம் தேதி அறிவித்துள்ளன. ஆனால் இதுவரை வட்டிக்குறைப்பு செய்யவில்லை. இன்றைய தேதிக்கு இந்த இரு வங்கிகளின் பிரைமரி லெண்டிங் ரேட் 12.5 மற்றும் 12.75 சதவிகிதம்!!

இந்தியாவிலேயே குறைந்த அளவு வட்டி வசூலிக்கும் ஒரே வங்கி பிஎன்பி எனப்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமே. 14 சதவிகிதம் வரை வட்டி வசூல் செய்து வந்த இந்த வங்கி இப்போது 11.50 சதவிகிதம் வசூலிக்கிறது.

ஏன் இந்த நிலை?

அதிக அளவு கடன் கொடுத்துவிட்டு பின்னர் வராக்கடன் நெருக்கடி வரும்போது மாட்டிக் கொள்வோமே என்ற நிர்வாகிகளின் பயமே வணிக வங்கிகள் இந்த அளவு கடுமையாக நடந்து கொள்ளக் காரணம் என்கின்றனர் நிதித்துறை வல்லுநர்கள். இதைத் தவிர்க்க வங்கித் தலைவர்கள் சுயமாக முடிவெடுக்கும் சூழ்நிலைகளைக் குறைப்பது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.

ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறும் வகையில் எந்த வங்கி செயல்படுகிறதோ அதன் தலைமை சுயமாக முடிவெடுப்பதைக் கட்டுப் படுத்தலாம். ரிசர்வ் வங்கியின் உத்தரவை மட்டும் செயல்படுத்தினால் போதும் என்று நெருக்கடி தரலாம். அந்த சூழலில், வராக்கடன் பயமின்றி வணிக வங்கிகள் அதிக அளவு கடன் தரமுடியும் என்றும் சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் ரிசர்வ் வங்கி தலையிட வேண்டிய நிலை வந்துவிடும் என்பதால் அந்த யோசனையை இப்போதைக்கு கிடப்பில் வைத்துள்ளது ரிசர்வ் வங்கி.

இது நல்லதல்ல...

அதே நேரம் வணிக வங்கிகளின் இந்த பிடிவாதப் போக்கு தொடர்வது நல்லதில்லை என்றும், இந்த நிலை நிச்சயம் டீப்ளேஷன் எனப்படும் பணவாட்ட நிலைக்கு வழி வகுத்துவிடும் என்பதை வணிக வங்கி நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் பொருளியல் ஆலோசனைக் குழு எச்சரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X