ஒரு மாத கால வக்கீல்கள் ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: கடந்த ஒரு மாதமாக நடத்தி வந்த ஸ்டிரைக்கை தற்காலிகமாக விலக்கிக் கொள்வதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர். திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் நடந்த பெரும் வன்முறையைத் தொடர்ந்து வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர்.
பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட், உயர்நீதிமன்றம், முதல்வர் கருணாநிதி மற்றும் பல்வேறு தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை.
தடியடி நடத்த உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும் என்று கோரி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கூடுதல் ஆணையர் விஸ்வநாதன், இணை ஆணையர் ராமசுப்ரமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை வக்கீல்கள் சங்கங்கள் வரவேற்றன. இந்த நிலையில் இன்று காலை வக்கீல்களின் பிரமாண்டப் பேரணி சென்னையில் நடந்ததது. இதையடுத்து கூட்டம் நடைபெற்றது.
அப்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வருகிற திங்கள்கிழமை முதல் பணிக்குத் திரும்புவதாகவும், இருப்பினும் இது தற்காலிக முடிவுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்டிரைக்கை முடிப்பது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறுகையில்,
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போலீசார் அத்துமீறி புகுந்து தாக்கிய வழக்கில் அளிக்கப்பட்டு உள்ள தீர்ப்பு, காலதாமதமாக எங்களது நியாயமான போராட்டத்தை கோர்ட்டு புரிந்து கொண்டாலும் கோர்ட்டின் கண்ணியத்தையும், மாட்சிமையையும் காப்பாற்றிய பெருமை எங்களுக்கு உண்டு என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
வக்கீல்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்ததன் விளைவே இந்த உத்தரவு ஆகும். அதே சமயத்தில் போலீஸ் செய்த தவறுக்காகவே இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இது எங்களது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்த வழக்கில் முழு வெற்றி பெறுவதற்காக சட்டத்தின் வாயிலாக தொடர்ந்து போராடுவோம்.
கோர்ட் புறக்கணிப்பை தொடர்வதா? கைவிடுவதா? என்பது பற்றி வியாழக்கிழமை நடைபெறும் மாநில அளவிலான பேரணிக்குப் பிறகு வக்கீல்களின் போராட்டக் குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும் என்றார்.
கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த வக்கீல்கள் ஸ்டிரைக்கால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்தை சந்தித்தனர். வழக்குகளை வாதாட வக்கீல்கள் இல்லாததால், பொதுமக்களே கோர்ட்டுகளில் ஆஜராகி வாதிட வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
