Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியப் பணவீக்கம் பூஜ்யம் - மக்களுக்குப் பலனும் பூஜ்யம்

Subscribe to Oneindia Tamil

Currency
'ஏம்பா... அதான் பணவீக்கமே இல்லையாமே... அப்புறம் ஏன் விலையெல்லாம் தாறுமாறா இருக்கு? எப்பதான் குறையும்?'

-இன்று சாமான்ய மனிதன் முதல் விஐபிக்கள் வரை விவாதிக்கும் விஷயமாக மாறிவிட்டது இந்த பணவீக்கம்.

பணவீக்கம் என்பது ஒரு நாட்டின் நாடித் துடிப்பு என்றால் மிகையல்ல. பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகளுள் முதன்மையானது பணவீக்கமே. நாட்டின் பொருளாதாரம் நலமாக உள்ளதா... நோயுற்றுக் கிடக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் காரணியும் இந்த பணவீக்கமே.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை பணவீக்கம் என்பது கிண்டலுக்குரிய சமாச்சாரமாகிவிட்டது.

காரணம் நமது பொருளாதார கொள்கை வகுப்பாளர்களின் தெளிவின்மை.

பணவீக்கம் என்பது என்ன?

பொதுவான பாஷையில் சொன்னால் பொருள்களின் விலையில் ஏற்படுகிற ஏற்றம். ஆனால் பொருளாதார பாஷையில் சொன்னால், விலைகள் நிலையாக இருந்த குறிப்பிட்ட ஓராண்டின் அடிப்படையில், நடப்பு ஆண்டு விலைவாசி எப்படி உள்ளது என்று கணித்து, அதன் அடிப்படையில் பணவீக்கம் உள்ளதா இல்லையா? என்று கணிக்கிறார்கள்.

உதாரணமாக, போன ஆண்டை 'நிலை ஆண்டு' என வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டில் 1 கிலோ சமையல் எண்ணெய் ரூ.100 எனக் கொள்வோம். இந்த ஆண்டு அதுவே 110 ரூபாயாக இருந்தால் 10 சதவிகித பணவீக்கம் இருப்பதாக அர்த்தம்.

அதே 100 ரூபாய்க்கு கிடைத்தால் பணவீக்கமே இல்லை என்று அர்த்தம்.

இந்த ரீதியில் கணக்கிட்டுப் பாருங்கள். போன ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி குறைந்துள்ளதா... அதிகரித்துள்ளதா என்று தெரிந்துவிடும்.

இதனை நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கணக்கெடுப்பு என்கிறார்கள். இந்தக் கணக்கெடுப்பின்படி, இந்தியப் பணவீக்கம் இப்போதும் 11.4 சதவிகிதம் உள்ளது! நியாயமாக இப்படித்தான் பணவீக்கத்தைக் கணக்கிட வேண்டும்... வெளிநாடுகளிலும் இந்த முறையில்தான் கணக்கிடுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் மட்டும் அப்படிக் கணக்கெடுக்கப்படுவதில்லை.

அப்படியெனில் இப்போது இந்தியாவில் பேசப்படும் பணவீக்கம்?

இதற்கும் நுகர்வோருக்கும் சம்பந்தமே இல்லை என்பதே ஒருவிதத்தில் உண்மை!

காரணம் இது மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

அதாவது உற்பத்தியாளர்கள், மொத்த வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாகக் கொண்டு விலை கணக்கிடப்படுகிறது. இதற்கு நிலை ஆண்டாக 193-94-ஐ எடுத்துக் கொண்டுள்ளது அரசு. இந்த ஆண்டுதான் ஓரளவு விலை நிலையாக இருந்ததாம்.

இந்த மொத்த விலைக்கும் பொதுமக்கள் வாங்கும் விலைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதால்தான், தற்போதைய பண வீக்கம் அல்லது பணவாட்டம் எதுவுமே மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் போகிறது.

ஆக, இந்த பணவீக்க கணக்கீடுகள் எதுவும் பொது மக்களுக்கானவை அல்ல. உலக அளவில் ஏற்பட்டுள்ள பெருமந்தம் காரணமாக உற்பத்திப் பொருள்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாறுதல் மற்றும் அதனால் உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் லாபத்தையே இந்த மொத்த விலைக் குறியீட்டு அடிப்படைப் பணவீக்கம் குறிக்கிறது.

அப்படியெனில் சாமானியனுக்கு இதில் எப்போது பலன் கிடைக்கும்?

தயாரிப்பாளர்களும், மொத்த வணிகர்களும் தங்களுக்கு கிடைத்துள்ள விலைச் சலுகையில் குறிப்பிட்ட அளவையாவது பொதுமக்களுக்குச் சேரும்வகையில் செய்யும் போதுதான் இந்த வகைப் பணவீக்கத்தின் பலன் மக்களுக்கும் சேரும். இல்லாவிட்டால், மக்களிடம் கொஞ்சம் நஞ்சமுள்ள வாங்கும் சக்தியும் உறிஞ்சப்பட்டு ஓட்டாண்டி ஆகி தெருவில் நிற்பார்கள்.

தயாரிப்பாளர்களும் வணிகர்களும் மீந்து போன சரக்குகளுடன் கூவிக்கூவி மக்களை அழைக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டுவிடும். இந்தியத் தயாரிப்பாளர்கள் அதற்காகத்தான் காத்திருக்கிறார்களோ?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+